

கேரள மாநிலத்தின் பழங்குடிகள் வசிக்கும் அட்டப்பாடி என்ற பகுதியில் ஊட்டச்சத்துக் குறைவினால் கடந்த ஜனவரி முதல் இதுவரையில் 40-க்கும் மேற்பட்ட குழந்தைகள் இறந்து விட்டனர். கல்வியிலும் பொதுசுகாதாரத்திலும் முன்னணியில் இருக்கும் கேரள மாநிலத்திலா இப்படி என்ற வியப்பு ஏற்படாமல் இல்லை.
பழங்குடிகள் நல்வாழ்வுத் திட்டம், வறுமை ஒழிப்புத் திட்டம், மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டம் என்று பல்வேறு திட்டங்களையும், வன வளங்களையும் சுற்றுச்சூழலையும் பாதுகாக்கப் பல்வேறு சட்டங்களையும் கொண்டுள்ள நம் நாட்டில், கண்ணெதிரிலேயே ஒரு பழங்குடி இனம் வாழ்வாதாரங்களை இழந்து அழிவைச் சந்திக்கிறது!
கேரளத்தின் அட்டப்பாடி, இயற்கையான வனங்களும் புதர்களும் ஓடைகளும் நெடிதுயர்ந்த மரங்களும்கொண்ட மலைப்பிரதேசம். சுமார் 745 சதுர கிலோமீட்டர் பரப்பளவுள்ளது. மழை வளம் காரணமாக ஓடைகளிலும் ஆறுகளிலும் எப்போதும் நீர் நிரம்பியிருக்கும். இங்கு மக்கள் தொகை சுமார் 10,000-தான். அவர்கள் குரும்பர், முடுகர், இருளர் வகையினர். இதெல்லாம் 1950-களுக்கு முற்பட்ட நிலை.
1950-க்குப் பிறகு, விவசாயிகள் அங்கு குடியேறத் தொடங்கினர். அவர்கள் வருவாய்த் துறை அதிகாரிகள் உதவியுடன், பழங்குடிகள் வசமிருந்த பகுதியில் புதர்களையும் செடி கொடிகளையும் அகற்றி விவசாயம் செய்யத் தொடங்கினர். மண்ணின் வளம், நீர் வசதி ஆகிய காரணத்தால் விவசாயம் செழிக்கத்தொடங்கியது. அதனால், மேலும் விவசாயத்தை விரிவுபடுத்தினர். தொடர்ந்து ஏராளமானோர் அட்டப்பாடியில் குடியேறினர். கேரளத்தின் தெற்குப் பகுதியிலிருந்த மலையாளிகளும் அட்டப்பாடி சென்று, அங்கு வளர்ந்திருந்த மரங்களை வெட்டி வியாபாரம் செய்து பணக்காரர்களாயினர். மேலும், கால்நடைகளையும் வளர்த்தனர். அங்கே விவசாயமும் மேய்ச்சலும் தீவிரமானது. ஆண்டுகள் செல்லச் செல்ல பழங்குடிகளைவிட, குடியேறியவர்களின் எண்ணிக்கை அதிகமானது. 1950-களில் மொத்த மக்கள் தொகை சுமார் 10,000 என்றால், அதில் பழங்குடி அல்லாதவர்களின் எண்ணிக்கை வெறும் நூற்றுக்கணக்கில்தான் இருந்தது. 1991-ல் எடுத்த கணக்கெடுப்பின்படி மக்கள் தொகை பல லட்சங்களாக உயர்ந்துவிட்டது. அதில் பழங்குடிகளின் எண்ணிக்கை வெறும் 18%தான்.
சமவெளியில் கையாண்ட விவசாயத் தொழில்நுட்பமே அட்டப்பாடியிலும் கைக்கொள்ளப்பட்டதால், நிலச்சரிவு ஏற்பட்டது. பசுமைப் போர்வை குறைந்தது. நிலத்தடி நீரும் உறிஞ்சப்பட்டு வறட்சி ஏற்பட்டது. பாசனத் தேவைக்கு மட்டுமல்ல, குடிநீருக்கும் பஞ்சம் வந்தது.
வனவளம் குறைந்ததாலும் விவசாயம் செய்ய முடியாமல் தங்களுடைய நிலங்கள் பாழ்பட்டதாலும் பழங்குடிகள் வறுமையில் ஆழ்ந்தனர். சரியான வேலைவாய்ப்பும் இல்லை. தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தில் வேலை செய்தவர்களுக்குக்கூட மூன்று மாதங்களாக ஊதியம் நிலுவை என்று அறியும்போது துயரமே மேலிடுகிறது.
அட்டப்பாடி போலவே பல பழங்குடிப் பகுதிகள் எல்லா மாநிலங்களிலும் உள்ளன. துணை நகரங்களை உருவாக்கச் செலவிடும் கோடிகளை இதுபோன்ற பகுதிகளில் இயற்கை வளங்களை மீட்டெடுக்கவும் செலவிட்டால் நன்மை ஏற்படும்.