

கேரளத் தலைநகரம் திருவனந்தபுரத்தில் இருக்கும் பத்மநாப சுவாமி ஆலயம், மறுபடியும் பரபரப்புச் செய்திகளில் அடிபடுகிறது. ஆலயத்தின் ரகசிய அறைகளில் ஆண்டாண்டு காலமாகப் பூட்டி வைக்கப்பட்டிருக்கும் நகைகள்குறித்த வழக்கில், நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட ‘அமிகுஸ் கூரியாஸ்' (நீதிமன்ற ஆலோசகர்), விலைமதிப்பு மிக்க நகைகள், கலைப்பொருள்கள் களவாடப்பட்டிருப்பதாகவும், நிதி நிர்வாகத்தில் முறைகேடுகள் காணப்படுவதாகவும் அறிக்கை அளித்திருக்கிறார். இது தொடர்பாக, ஆலய நிர்வாகமும் கேரள அரசும் பதில் தர வேண்டும் என்று நீதிமன்றம் பணித்திருக்கிறது.
பத்மநாப சுவாமி கோயிலை யார் நிர்வகிக்க வேண்டும் என்ற விவாதம் பொது அரங்கில் நடைபெறத் தொடங்கிவிட்டது. ஆலய நகைகளின் மதிப்பை அறிந்துகொள்வதற்காக 2011-ல் நிபுணர் குழுவை உச்ச நீதிமன்றமே நியமித்தது. அந்தக் குழுதான் மொத்தம் ஆறு அறைகளில் இருந்த நகைகளில் ஐந்து அறை நகைகளைத் திறந்துபார்த்து மதிப்பிட்டது. ஆறாவது அறை திறக்கப்படுவது நல்லதல்ல என்று பிரஸ்னம் கூறியதால், அது திறக்கப்படவில்லை.
2012-ல் முன்னாள் அட்டர்னி ஜெனரல் கோபால் சுப்பிரமணியத்தை நீதிமன்ற ஆலோசகராக உச்ச நீதிமன்றம் நியமித்தது. இப்போதைய நிர்வாகக் குழுவுக்குப் பதிலாகப் புதிய நிர்வாகக் குழுவை நியமிக்கலாம் என்று அவர் ஆலோசனை தெரிவித்திருக்கிறார். அதை உச்ச நீதிமன்றம் ஏற்றுள்ளது.
ஆலயத்தின் நகைகளையும் அரிய கலைப்பொருள்களையும் பாதுகாப்பாக எப்படி வைத்திருப்பது என்பது திருவனந்தபுரம் பத்மநாப சுவாமி கோயிலுக்கு மட்டுமல்ல, நாட்டின் எல்லாக் கோயில்களுக்கும் உள்ள பொதுவான பிரச்சினை. சில ஆண்டுகளுக்கு முன்னால், திருப்பதி வேங்கடேஸ்வரர் ஆலய நகைகள்குறித்தும் இதே போல ஆந்திர உயர் நீதிமன்றத்தில் வழக்கு வந்தது. அப்போதுதான், ஆலயத்தின் நகைகளைக் கணக்கெடுத்துப் பதிவுசெய்யுமாறு நீதிமன்றம் உத்தரவிட்டது.
கோயில்களுக்கு வரும் வருமானத்தையும் காணிக்கையையும் வரவில் வைக்காமல் மறைப்பது, ஆலயத்தின் சொத்துகளி லிருந்து வர வேண்டிய வாடகை, வட்டி போன்றவற்றை வசூலிக் காமல் மெத்தனம் காட்டுவது, திருட்டுகளுக்குத் துணைபோவது என்று ஆலயத்தைச் சேர்ந்தவர்களே இந்தத் தவறுகளைச் செய் கின்றனர். அரசும் நீதித் துறையும் இதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்க முடியாது. கோயிலின் பூஜை, சம்பிரதாயங்களில் அரசு தலையிட முடியாதுதான். ஆனால், வரவு - செலவுக் கணக்கை முறையாக எழுத வேண்டும்; கோயிலின் சொத்துகளைப் பாதுகாக்க வேண்டும் என்று அரசு சொல்வதிலும், கோயில் நகைகளையும் சொத்துகளையும் சூறையாட அனுமதிக்கக் கூடாது என்று தடுப்பதிலும் தவறேதும் இல்லை.
இந்தியாவை விடக் குறுகிய கால பாரம்பரியத்தைக் கொண்ட இங்கிலாந்து போன்ற நாடுகள், தங்கள் கலாச்சாரப் பெருமைகளைப் பாதுகாக்கும் விதங்களைப் பார்த்து நாம் கற்றுக்கொள்ள நிறைய இருக்கிறது. பத்மநாப சுவாமி ஆலயம் உள்ளிட்ட ஆலயங்களின் சொத்துகளைக் காப்பதற்கு முறையான கண்காணிப்பு அமைப்பு ஏற்படுத்தப்படுவது அவசியம். அதைவிட முக்கியமானது, இதுபோன்ற பாரம்பரியச் சொத்துகளைப் பாதுகாப்பதில் நமக்கு உள்ள அக்கறைதான்.