Published : 12 Jan 2017 10:41 AM
Last Updated : 12 Jan 2017 10:41 AM

கழகங்கள் எதிர்கொள்ளும் பெரும் சவால்கள்!

தமிழகத்தின் இரு பெரும் கட்சிகளான அதிமுக, திமுக இரண்டிலுமே தலைமை மாற்றம் நடந்திருக்கிறது. திராவிட இயக்கத்தின் நூற்றாண்டு, இரு திராவிடக் கட்சிகளின் அரை நூற்றாண்டு தருணத்தில் கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாகத் தமிழக அரசியலின் மையப்புள்ளியாக இருந்த ‘கருணாநிதி எதிர் ஜெயலலிதா’ அரசியல் முடிவுக்கு வந்துவிட்டது. முதல்வர் ஜெயலலிதாவின் மறைவோடு, முன்னாள் முதல்வர் கருணாநிதியும் தள்ளாமையில் உடல் நலம் குன்றிப்போனது இரு கட்சிகளும் அடுத்த தலைமைகளைத் தேர்ந்தெடுக்க வழிவகுத்திருக்கிறது. அதிமுக பொதுச்செயலாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார் சசிகலா. திமுகவின் செயல்தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார் மு.க.ஸ்டாலின்.

பொதுவெளியில், இருவரின் தேர்வு தொடர்பிலும் நிறைய விமர்சனங்கள் இருக்கின்றன என்றாலும், இருவருமே கட்சி நிர்வாகிகளால் ஒருமனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கின்றனர். இருவருமே ஒருவகையில் வாரிசுரிமையின் அடிப்படையில் தலைமைப் பதவிக்கு வந்திருக்கிறார்கள் என்பதும், இருவரின் தேர்வுமே ஒருவகையில் எதிர்பார்க்கப்பட்ட ஒன்றாகவும், ஆச்சரியமூட்டும் வகையில் கட்சி நிர்வாகக் குழுவுக்குள் எதிர்ப்புகள் ஏதுமின்றித் தேர்வு அமைந்ததும் விசித்திரமான ஆச்சரியங்கள். இருவர் தலைகள் மீதுமே குடும்ப அரசியல் எனும் கத்தியும் தொங்கிக்கொண்டிருக்கிறது. தலைமை அளவில் மட்டும் அல்ல; இரு கட்சிகளுமே ஒரு புதிய யுகத்துக்குள் நுழைகின்றன.

இந்தப் புதிய யுகத்தின் சவால்களையும் வெப்பம் தகிக்கும் தீச்சூழலையும் உணர்வதே புதிய தலைவர்கள் இருவரும் உணரும் முதல் திசையாக இருக்க வேண்டும். திராவிட இயக்கத்தின் நீண்ட நெடிய வரலாற்றில், பிம்ப அரசியலுக்குப் பெரும் முக்கியத்துவம் உண்டு. இதுவரையிலான தலைவர்கள் இயல்பிலேயே அதற்கேற்ற சாத்தியங்களைப் பெற்றும் இருந்தார்கள். இந்தப் பக்கம் அண்ணா, கருணாநிதி போன்று நாவன்மை எழுத்தாற்றலாலும்; அந்தப் பக்கம் எம்ஜிஆர், ஜெயலலிதா போன்று திரைக் கவர்ச்சியாலும் தம்மை நிறுவிக்கொள்ளும் வாய்ப்பு இல்லாத நிலையில், மக்களை நோக்கி இருவரும் செல்ல வேண்டும். நீண்ட கால ஆட்சி அது எப்படிப்பட்டதாக இருந்தாலும் மக்களைச் சலிப்பில் தள்ளிவிடுவது இயல்பானது. அந்தச் சலிப்பு இளைஞர்கள் மத்தியில் பெரும் அலையாக உருவெடுத்துவருவதை இரு கட்சிகளுமே உணர்ந்திருக்கக் கூடும்.

கிட்டத்தட்ட அரை நூற்றாண்டாக இங்கே காலூன்ற முடியாமல் தேசியக் கட்சிகளும் தூபம் வளர்த்துவரும் சூழலில், புதிய தலைமுறைக்கேற்ற அரசியலை நோக்கி இரு கட்சிகளும் நகர வேண்டும். இரு கட்சிகள் மீதுமே மோசமான ஊழல் குற்றச்சாட்டுகள் இருக்கின்றன. உச்சபட்சமாக, தேர்தலின்போது வாக்காளர்களுக்கே லஞ்சம் கொடுக்கும் மோசமான கலாச்சாரத்தைப் பெரிய அளவில் வளர்த்தெடுக்க இரு கட்சிகளுமே துணைபோயின. இதனால், தேர்தலையே தள்ளிவைக்கும் சூழல் நாட்டிலேயே முதல் முறையாக தமிழகத்தில் உருவானது. தேசிய அளவில் தமிழகம் அசிங்கப்பட்டது. ஆட்சியாளர்களுக்கும் அரசு அலுவலர்களுக்கும் இடையிலான கண்ணியமற்ற உறவு நாளுக்கு நாள் மோசமான உதாரணமாகிவருகிறது. அடிமட்டம் முதல் மேல்மட்டம் வரை இரு கட்சிகளும் தம்மைச் சுத்திகரித்துக்கொள்ள வேண்டும்.

தமிழகம் சமூகநீதியிலும் சமூகப் பொருளாதார வளர்ச்சிக் குறி யீடுகளிலும் நாட்டின் முதல் வரிசைப் பட்டியலில் இடம்பெற்றிருக்கக் கடந்த காலங்களில் இரு திராவிடக் கட்சிகளின் ஆட்சியிலும் கொண்டுவரப்பட்ட வளர்ச்சித் திட்டங்களுக்கு முக்கியமான பங்கு இருக்கிறது. ஆனால், சமகாலத்தில் கல்வி, சுகாதாரத்தில் தொடங்கி தொழில் வளர்ச்சி வரை எல்லா விஷயங்களிலும் நாம் தேங்கிக்கொண்டிருக்கிறோம். நாம் இன்று தொட்டிருக்கும் உயரத்துக்கு நம்முடைய நேற்றைய செயல்பாடுகள்தான் காரணமே அன்றி, இன்றைய செயல்பாடுகள் அல்ல. குறிப்பாக, கல்வியில் அதிலும் அரசுசார் கல்வி நிறுவனங்களில் தமிழகம் எதிர்கொண்டுவரும் பிரச்சினைகள் நம்முடைய நாளைய தலைமுறைகளை முடக்கிப்போட்டுவிடும். நதிநீர் விவகாரங்களில் தொடங்கி, தமிழகத்தின் உரிமைகள் சம்பந்தப்பட்ட பல விவகாரங்களில் நாம் பின்னடைவைச் சந்தித்திருக்கிறோம். இதுநாள் வரை இரு கட்சிகளும் கடைப்பிடித்துவந்த ஒற்றுமையின்மைக்கும் இதில் முக்கியமான பங்கு உண்டு. தமிழகத்தின் எதிர்காலம் தொடர்பில் தொலைநோக்கிலான திட்டங்களை இரு கட்சிகளும் யோசிக்க வேண்டும்.

தேசிய அளவில் மாநிலம்சார் பிரச்சினைகளை எதிர்கொள்ளும்போது ஏனைய கட்சிகளையும் அரவணைத்து ஒரே குரலில், தமிழக நலனைப் பேச வேண்டும். டெல்லியில் ஏனைய கட்சிகளுடன் உறவைப் பராமரிக்கவல்ல, மாநிலங்கள் உரிமை சார்ந்து ஏனைய மாநிலங்களுடன் இணைந்து ஒரு அணியை உருவாக்கவல்ல ஆட்களை இரு கட்சிகளும் அடையாளம் கண்டு அவர்களை முடுக்கிவிட வேண்டும்.

இரு கட்சிகளிலுமே உள்கட்சி ஜனநாயகம் போற்றத்தக்க வகையில் இல்லை. ஜனநாயக இயக்கங்களுக்குத் தனிநபர் வழிபாடும் விமர்சனத்துக்கு அப்பாற்பட்ட போக்கும் நல்லதே இல்லை; இரு கட்சிகளிலுமே மக்கள் மத்தியில் செல்வாக்கு மிக்க தலைவர்கள் அடுத்தடுத்த நிலைகளில் இல்லை. அடுத்த யுகத்துக்குள் திராவிட இயக்கம் நுழைய மிக மிக முக்கியமான பணி, பல அடுக்குத் தலைவர் களை இரு கட்சிகளிலும் உருவாக்குவது. எல்லாச் சமூகங்களையும் ஒருங்கிணைத்த, குறிப்பாக விளிம்புநிலைச் சமூகங்களுக்குக் கூடுதல் இடமளிக்கும் களங்களாக மாற்ற வேண்டிய தேவையும் இன்று தலையானதாக உருவாகியிருக்கிறது. தம்முடைய ஆரம்ப நாட்களைப் போலக் கீழ்மட்டத்தில் இறங்கிப் பணியாற்ற வேண்டும்.

நீண்ட கால இயக்கங்கள் எதிர்கொள்ளும் பல்வேறு பிரச்சினைகளும் நீண்ட காலமாக நடவடிக்கை எடுக்கப்படாததால், இரு கட்சிகளிலும் தேங்கி நிற்கின்றன. உள்ளபடி சசிகலா, ஸ்டாலின் இருவருக்குமே நிறைய அவகாசம் இல்லை. தங்களுடைய அறுபதுகளில் தலைமைப் பொறுப்பேற்றிருக்கும் இருவரும் இரு கட்சிகளையும் அடுத்தடுத்த நிலைகளுக்குக் கொண்டுசெல்ல தனித் தலைமையிலிருந்து, கூட்டுத் தலைமை நோக்கி நகர்த்த வேண்டும்.

இருவருக்கும் வாழ்த்துகள்!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x