

இந்திய மக்கள் இன்றைக்கு எப்படியெல்லாம் சந்தைப் பொருளாதாரத்தால் வேட்டையாடப் படுகிறார்கள் என்பதற்கு அப்பட்டமான உதாரணம் ஆகியிருக்கிறது ‘ஸ்டென்ட்’ விவகாரம்.
இந்தியாவில் 25 முதல் 69 வரையிலான வயதில் இறப்பவர்களில் நான்கில் ஒருவர் இதய நோய்களால் இறக்கிறார். இதய அறுவைச் சிகிச்சையானது இந்த அபாயத்தைக் கணிசமாகக் குறைக்கிறது. இந்த வகையில், ரத்தக் குழாய்களில் ஏற்படும் அடைப்பைப் போக்குவதற்கும் ரத்தக் குழாய்களை வலுப்படுத்துவதற்கும் ரத்தக் குழாய்களுக்குள் பொருத்தப்படும் சிறு கருவியான ‘ஸ்டென்ட்’ குறைந்த விலையில் கிடைப்பது லட்சக்கணக்கான இந்தியர்களின் வாழ்வோடு சம்பந்தப்பட்ட விஷயம்.
இந்தியாவில் 2015-ல் மட்டும் 6 லட்சம் நோயாளிகளுக்கு ஸ்டென்ட்கள் பொருத்தப்பட்டுள்ளன. 2016-ல் இதற்காக இந்தியர்கள் செலவழித்த தொகை ஏறத்தாழ ரூ.7,654 கோடி. மத்திய அரசு 2016-17 நிதியாண்டில் மருத்துவத்துக்காக ஒதுக்கிய நிதி ஒதுக்கீட்டில் ஏறத்தாழ 40% இது! ஆனாலும், இந்த எண்ணிக்கையானது மொத்த சிகிச்சை தேவைப்படுவோரில் வெறும் 2% பேரை மட்டுமே உள்ளடக்கியது என்பது, இன்றைக்கு ஸ்டென்ட்களின் தேவையையும் நிலைமையின் தீவிரத்தையும் உணர்த்தக் கூடியது. இந்தியாவில் ரூ.10,000 முதல் ரூ.1,80,000 வரையிலான விலையில் ஸ்டென்ட்கள் கிடைக்கின்றன. நம் நாட்டிலேயே தயாரான ஸ்டென்ட்களும் கிடைக்கவே செய்கின்றன. ஆனாலும், நம் மருத்துவர்கள் பொதுவாக, வெளிநாட்டு ஸ்டென்ட்களையே விரும்பிப் பயன்படுத்துகிறார்கள்.
மருத்துவச் சிகிச்சைக்காகத் தங்களின் சக்திக்கு மீறிச் செலவழித்துக் கடுமையான வறுமைக்குள் 5.5 கோடி இந்தியர்கள் 2011-12 காலகட்டத்தில் சிக்கிக்கொண்டார்கள் என்கிறது 2015-க்கான தேசிய சுகாதாரக் கொள்கைக்கான வரைவு. உலோக ஸ்டென்ட்கள், உடம்பிலேயே கரைந்துபோகக்கூடிய ஸ்டென்ட்கள் ஆகிய இரண்டு வகைகளும் அத்தியாவசிய மருந்துகள் பட்டியலில் வைக்கப்படும் என்று 2015 ஜூலையில் மத்திய அரசு அறிவித்தது. அவை அரசின் விலைக் கட்டுப்பாட்டுக்கு உரியவை. தேவையானவர்களுக்குக் குறைந்த விலையில் கிடைக்க வேண்டும். தேவையான அளவு கிடைக்க வேண்டும். ஆனால், நடைமுறையில் நிலைமை அப்படியில்லை. காரணம், இதற்குப் பின் இருக்கும் சந்தையின் லாப வெறி. 270% முதல் 1,000% வரை லாபம் வைத்து ஸ்டென்ட்கள் விற்கப்படுகின்றன. உற்பத்தியாளரிடமிருந்து ஒரு நோயாளியிடம் ஸ்டென்ட் கருவி போய்ச் சேர்வதற்கு பத்து மடங்குக்கும் மேல் விலை உயர்ந்துவிடுகிறது என்பதைச் சுட்டிக்காட்டுகிறது தேசிய மருந்து விலை நிர்ணய ஆணையம் ஜனவரி 16-ல் வெளியிட்டுள்ள தரவுகள். இதில் 11% முதல் 654% வரையிலான விலை உயர்வு மருத்துவமனைகள் மட்டத்தில்தான் நடக்கிறது. அதாவது, தனியார் மருத்துவமனைகள் வெளிப்படையாகக் கொள்ளை அடிக்கின்றன என்பது இதன் மூலம் அம்பலமாகிறது. ஜீரணிக்கவே முடியாதது இது. மக்களின் நல வாழ்வைத் தன் பொறுப்பில் ஏற்க வேண்டிய அரசு, மெல்ல மெல்ல இன்று அதைக் குடிமக்கள் பொறுப்புக்குத் தள்ளிவிட்டுவிட்டது. அவர்கள் உழைத்து, சிறுகச் சிறுகச் சேகரிக்கும் உழைப்பின் பலன்களையும் இப்படித் தனியார் மருத்துவமனைகள் சூறையாட அரசு அனுமதிக்கக் கூடாது. தீவிர சிகிச்சை தேவைப்படும் பிரச்சினை இது. பிரதமர் மோடி அவர்களே, உடனடியாக அறுவைச் சிகிச்சை செய்யுங்கள்!