

உக்ரைனில் அதிபர் விக்டர் யனுகோவிச்சுக்கு எதிராக, கடந்த நவம்பர் மாதம் முதல் மக்கள் நடத்திய போராட்டத்துக்கு வெற்றி கிடைத்திருக்கிறது. அதிபர் யனுகோவிச், தலைநகர் கீவிலிருந்து தனி விமானத்தில் ஏறி எங்கோ சென்றுவிட்டார். நாடாளுமன்றம் கலைக்கப்பட்டுவிட்டது. நாடாளுமன்றத்துக்கான புதிய பொதுத்தேர்தல் மே 25-ம் தேதி நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னாள் பிரதமரும், 2004-05-ல் ஜனநாயகத்துக்கு ஆதரவாக நடந்த ஆரஞ்சுப் புரட்சியின் நாயகியுமான யூலியா மைஷென்கோ (53) விடுதலை செய்யப்பட்டுவிட்டார் என்பது உக்ரைன் மக்களுக்கு மகிழ்ச்சியான தகவல்.
பிரதமரும் இந்தக் கிளர்ச்சிகளைச் சமாளிக்க முடியாமல் பதவியிலிருந்து விலகிவிட்டார். காவல் அதிகாரிகள் பல இடங்களில் மக்களுக்கு ஆதரவாகச் செயல்படத் தொடங்கினர். “ராணுவத்தைப் பயன்படுத்துவேன்” என்று அதிபர் யனுகோவிச் அறிவித்தபோது, “நாங்கள் தலையிட மாட்டோம்” என்று ராணுவம் வெளிப்படையாகவே அறிவித்தது. இந்த நேரத்தில் நாடாளுமன்றத்தில் ஆளும் கட்சி உறுப்பினர்கள் பலர் யனுகோவிச்சுக்கான ஆதரவையும் விலக்கிக்கொண்டனர். அடுத்தடுத்து திடீர் மாற்றங்கள்.
அரசுக்கு எதிராக, கடந்த நவம்பர் முதல் நடந்துவரும் கலவரத்தில் 77 பேர் உயிரிழந்துள்ளனர், ஏராளமானோர் படுகாயம் அடைந்துள்ளனர். தலைநகர் கீவ் - லெவிவ் இடையேயான ரயில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. இந்தக் கிளர்ச்சியைப் பயன்படுத்திக்கொண்டு, பிராவி செக்டார் என்ற அதிதீவிர வலதுசாரி இயக்கமும் ஸ்வோபோதா என்ற யூத எதிர்ப்பு இயக்கமும் மக்களிடையே அரசியல் செல்வாக்கு பெறத் தொடங்கியிருப்பது ஜனநாயகத்துக்கு நல்ல செய்தியல்ல. பிப்ரவரி 19-ம் தேதி உக்ரைன் அரசுக்கும் எதிர்ப்பாளர்களுக்கும் இடையில் ஏற்பட்ட சமரச உடன்பாட்டில், தங்களுக்குத் திருப்தியில்லை என்றும், கிளர்ச்சியைத் தொடரப்போவதாகவும் இவ்விரு வலதுசாரிஇயக்கங்களும் அறிவித்துள்ளன.
ஐரோப்பிய நாடுகளுடன் உக்ரைனின் வர்த்தக உடன்படிக்கைப் பேச்சுக்களால்தான் இந்தப் பிரச்சினையே தொடங்கியது. பன்னாட்டுச் செலாவணி நிதியம் விதிக்கும் நிபந்தனைகளை ஏற்று, சீர்திருத்த நடவடிக்கைகளை உக்ரைன் தொடங்க வேண்டும், வட அட்லாண்டிக் ஒப்பந்த நாடுகளுடன் ராணுவரீதியாக உறவுகொள்ள வேண்டும் என்ற ஐரோப்பிய நாடுகளின் நிபந்தனைகளால்தான் நிலைமை முற்றியது. இதையடுத்து, பேச்சுவார்த்தைகளிலிருந்து உக்ரைன் அதிபர் விலகினார். ஐரோப்பிய நாடுகளை ஆதரிக்கும் மக்கள், அதிபருக்கு எதிராக வீதிகளில் திரண்டு போராடினர். சோவியத் யூனியனில் முன்னர் இருந்த நாடு என்பதாலும், ராணுவ நோக்கம் கருதியும் உக்ரைனைத் தன்னுடைய கட்டுப்பாட்டில் வைத்திருக்க ரஷ்யா விரும்புகிறது. அதே காரணத்துக்காகவே, உக்ரனை ரஷ்யாவிடம் இருந்து பிரிக்க ஐரோப்பிய நாடுகள் நினைக்கின்றன.
மேலோட்டமாகப் பார்க்கும்போது ஜனநாயக உரிமைகளுக்கான போராட்டமாகத் தெரிந்தாலும், உள்ளூர இது அரசியல் ஆதிக்கத்துக்கான போராட்டமே. பொருளாதாரமும் சந்தையும் ஒரு நாட்டின் அரசியலை எப்படியெல்லாம் ஆட்டுவிக்கலாம் என்பதற்கான உதாரணம் ஆகியிருக்கிறது உக்ரைன். வரவிருக்கும் தேர்தலில் மக்கள்தான் அதன் வரலாற்றை மீட்டெடுக்க வேண்டும்.