

டெல்லியில் வெறி கொண்ட ஒரு இளைஞரால், இளம் ஆசிரியை படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தேசத்தையே பதைபதைக்க வைத்திருக்கிறது. பெண்கள் மீதான வன்முறையின் மிகக் கோரமான முகத்தை இச்சம்பவம் வெளிப்படுத்தியிருக்கிறது.
வடக்கு டெல்லியின் புராரி பகுதியில், காலை 9 மணி அளவில் சாலையில் நடந்து சென்ற 21 வயது கருணாவை வழிமறித்துக் கொன்றார், 34 வயதான ஆதித்யா மாலிக் எனும் சுரேந்தர் சிங். நிலைகுலைந்து கீழே விழுந்த அந்த இளம் பெண்ணின் உடலில் 32 முறை கத்தரிக்கோலை அவர் பாய்ச்சியதை அங்கிருந்த கண்காணிப்பு கேமரா பதிவுசெய்திருக்கிறது. இவ்வளவுக்கும் வெறி அடங்காமல் உயிரற்ற உடலை உதைத்ததுடன், அப்பெண்ணின் முகத்தைச் சிதைக்கவும், தலையைத் துண்டிக்கவும் அவர் முயன்றிருக்கிறார். கொலை செய்த கையோடு யாரையோ அலைபேசியில் தொடர்புகொண்டு பேசியபடி, சாவதானமாக முன்னும் பின்னும் நடந்த அவர், பரிதாபத்துக்குரிய அந்தப் பெண்ணின் உடலை அலைபேசியில் படமும் எடுத்திருக்கிறார். மனதை நடுங்கவைத்த இந்தக் கோர நிகழ்வை சாலையில் சென்ற வழிப்போக்கர்கள் தடுக்க முற்படவில்லை. பலர் சாதாரணமாக அந்நிகழ்வைக் கடந்து சென்றனர். சிலர் விலகி நின்று வேடிக்கை பார்த்தனர். ஒரேயொரு மனிதர் தடுக்கச் சென்றார்; அவரும் ஆதித்யா விடுத்த எச்சரிக்கைக்குப் பயந்து பின்வாங்கிவிட்டார். எல்லாம் நடந்து முடிந்த பின்னர்தான், ஆதித்யாவைப் பிடித்து உதைத்திருக்கிறார்கள் அங்கிருந்தவர்கள். எவ்வளவு கொடுமை!
தலைநகர் டெல்லியில் 48 மணி நேரத்தில், பெண்கள் மீது நடத்தப்பட்ட மூன்றாவது கொலைத் தாக்குதல் இது. மங்கள்புரியில் அமித் என்ற இளைஞரால் மாடியிலிருந்து வீசப்பட்ட 25 வயது சீமா கவலைக்கிடமான நிலையில் இருக்கிறார். ஞாயிற்றுக்கிழமை இந்தர்பூரில் இரண்டு குழந்தைகளுக்குத் தாயான 28 வயது லக்ஷ்மி பக்கத்து வீட்டைச் சேர்ந்த சஞ்சய் என்பவரால் கத்தியால் குத்திக் கொல்லப்பட்டிருக்கிறார். இவை எல்லாவற்றையும் ‘காதல்’ எனும் பெயரால் அழைக்கும் துர்பாக்கியச் சூழலிலேயே நம் சமூகம் இன்னும் இருக்கிறது. கொடுமை!
பெண்ணுயிர் மீதான மதிப்பின்மை, தம் விருப்பங்கள் மறுதலிக்கப்படும்போது மனிதர்களின் மனதில் எழும் வெறி, பின்விளைவுகளைப் பற்றித் துளியும் அலட்டிக்கொள்ளாமல் குற்றத்தில் ஈடுபடும் அளவுக்கு அச்சமற்றதாகிவிட்ட சட்ட ஒழுங்குச் சூழல், பொது இடத்தில் ஆபத்தில் சிக்கியிருக்கும் சக மனிதரைக் காப்பாற்றத் தயங்கும் மனிதர்களின் சுயநலம் என்று ஒட்டுமொத்த சமூகம் மீதும் பல்வேறு விதமான கேள்விகளை ஒரே சமயத்தில் வீசுகிறது, கருணா கொலை. பிரச்சினையின் வேர் வரை நாம் சென்றே ஆக வேண்டும். தேசிய அளவில் தீவிரமாக விவாதித்துச் செயலாற்ற வேண்டிய பிரச்சினை இது. இதற்கெனவே நாடளுமன்றம் விசேஷமாகக் கூடினாலும் தவறில்லை. ‘மகள்களைக் காப்போம்!’ - வெறும் கோஷமாகவே முடங்கிவிடக் கூடாது!