

உலகின் முக்கியமான மின்னணு நிறுவனங்களில் ஒன்றான - தென் கொரியாவைச் சேர்ந்த ‘சாம்சங்’ நிறுவனத்தின் அடுத்த வாரிசு லீ ஜே-யாங் ஊழல் குற்றச்சாட்டுகளின்பேரில் கைதுசெய்யப்பட்டிருக்கிறார். தென் கொரியாவின் முதல் பெண் அதிபரான பார்க் குன்-ஹெ கடுமையான ஊழல் குற்றச்சாட்டுகளையும் மக்கள் போராட்டங்களையும் எதிர்கொண்டார். நாடாளுமன்றத்தில் 2016 டிசம்பரில் அவருக்கு எதிரான தீர்மானம் கொண்டுவரப்பட்டபோது, அவருக்கு ஆதரவு திரட்டும் வகையில் லஞ்சம் கொடுத்தார் என்று லீ ஜே-யாங் மீது குற்றம்சாட்டப்பட்டிருக்கிறது.
ஆனால், இதைத் தாண்டியும் பார்க் குன்-ஹெவுக்கு எதிரான தீர்மானம் வென்றது. அவர் பதவி நீக்கப்பட்டிருக்கிறார். புதிய அதிபர் பொறுப்பேற்கும் வரை அவர் பதவியில் நீடிக்கிறார் என்றாலும், இப்போது அதிபருக்கான அதிகாரங்கள் அவரிடமிருந்து பறிக்கப்பட்டிருக்கின்றன.
முன்னதாக, அதிபருக்குச் சாதகமாகக் கொடுக்கப்பட்ட லஞ்சத்துக்குப் பிரதிபலனாக, ‘சாம்சங்’ குழுமத்தைச் சேர்ந்த இரண்டு நிறுவனங்களை ஒன்றிணைப்பதற்கு எதிர்ப்புகள் இருந்த நிலையில், அதிபரின் துணையுடன் எதிர்ப்புகளை மீறிக் காரியத்தை லீ ஜே-யாங் முடித்தார் என்று குற்றச்சாட்டுகள் சொல்கின்றன. ‘சாம்சங்’ நிறுவனத்தின் தற்போதைய துணைத் தலைவர் பொறுப்பில் இருக்கும் லீ ஜே-யாங், தனது தந்தையின் மறைவுக்குப் பிறகு நிறுவனத்தின் தலைமைப் பதவிக்கு வருவதற்காகக் காய் நகர்த்திக்கொண்டிருக்கும் நிலையில் நடந்திருக்கும் இந்தக் கைது, ‘சாம்சங்’ நிறுவனத்துக்குப் பெரும் சரிவை ஏற்படுத்தியிருக்கிறது.
கடந்த மாதம், லீ ஜே-யாங் மீது விசாரணைக்கு முந்தைய வாரண்ட் பிறப்பிக்குமாறு அரசுத் தரப்பு விடுத்த கோரிக்கையை நீதிமன்றம் நிராகரித்துவிட்டது. அவர் மீதான லஞ்சக் குற்றச்சாட்டுக்குப் போதுமான ஆதாரம் இல்லை என்று அப்போது நீதிமன்றம் குறிப்பிட்டது. தற்போது இது தொடர்பாகப் புதிய ஆதாரங்கள் கிடைத்திருப்பதைத் தொடர்ந்து அவர் கைதுசெய்யப்பட்டிருக்கிறார். தென் கொரியாவுக்கு வெளியில் இந்த விவகாரத்தை அணுகுகையில், இன்றைய காலகட்டத்தில் பெருநிறுவனங்களுக்கும் ஆளும் வர்க்கத்துக்கும் இடையில் நிலவும் நெருக்கத்தை மிக அப்பட்டமாக வெளிப்படுத்துவதாகவே லீ ஜே-யாங் கைதைப் பார்க்க வேண்டியிருக்கிறது.
பெருநிறுவனங்களில் தவறுகள் நடக்க வாய்ப்பு இல்லை அல்லது விசாரணைக்கு உட்படுத்தும் அளவுக்கு அவை மோசமானவையாக இருக்க முடியாது என்று நிலவும் பொதுப்புத்தியைச் சுக்குநூறாக உடைக்கிறது ‘சாம்சங்’ நிறுவன விவகாரம். நாட்டின் பொருளாதார வளர்ச்சியோடும் அரசியலதிகாரத்தோடும் பின்னிப் பிணைந்திருப்பதாலேயே பெரும் தொழிலதிபர்கள் எல்லாக் கண்காணிப்பு மற்றும் சட்ட வளையங்களையும் பெருமளவில் கடந்துவிடுவது எல்லா நாடுகளிலுமே நடக்கிறது.
ஆனால், இந்த அணுகுமுறையானது பெருநிறுவனங்களின் நிர்வாகத்தில் வெளிப்படைத்தன்மைக்கு விரோதமானது என்பதோடு, ஜனநாயகப் பொறுப்புக்கூறலையும் துச்சமாக நிராகரிப்பதற்குச் சமமானது. சமூகத்தின் ஒரு பகுதியினரை ஏதோ ஒரு காரணத்தின் பெயரால் சிறப்புரிமை பெற்றவர்களாக நடத்தப்படுவதை ஒழிக்காமல், சமூக, பொருளாதார ஏற்றத்தாழ்வைச் சரிசெய்வது என்பது பகல் கனவாகவே இருக்கும். அந்த வகையில் தென் கொரிய அனுபவம் உலகுக்கு ஓர் எச்சரிக்கை!