

சமீபத்தில் மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்ட மனநலப் பாதுகாப்பு மசோதா, மனநல மருத்துவம் தொடர்பான நம்முடைய பயணத்தில் ஒரு திருப்புமுனை. அரசின் பொறுப்புகளைத் தெளிவுபடுத்துவதோடு, இந்நாட்டின் குடிமக்களுக்கும் குடும்பங்களுக்கும் ஒரு ஆறுதலைத் தருவதாக அமைந்திருக்கிறது. மனநலன் தொடர்பான விழிப்புணர்வு குறைந்த, மனநல மருத்துவமானது எல்லோருக்கும் கிடைக்காத இந்தியச் சமூகத்தில், பலருக்கு நல்ல சிகிச்சை கிடைப்பதற்குப் புதிதாக வர உள்ள சட்டம் மிகவும் உதவும்.
உலகிலேயே அதிகமான மக்கள்தொகையைக் கொண்ட சீனா, இந்தியா இரு நாடுகளுமே மனநல மருத்துவத்தில் மிகப் பெரிய குறைபாடுகளை எதிர்கொள்கின்றன. தேசிய அளவிலான திட்டங்கள் மூலமாக அதைச் சரிசெய்ய இரு நாடுகளும் முயன்றன. இதில் கூடுதலான மக்களுக்கு மனநலச் சிகிச்சையை அளிப்பதில் சீனா முன்னேறியுள்ளது. நம்முடைய நிலை இன்னும் சொல்லிக்கொள்ளும் அளவு மேம்படவில்லை.
மனநல மருத்துவம் தொடர்பாக, இதுவரை தரப்பட்ட வாக்குறுதிகள் எதுவும் நிறைவேறவில்லை. மாவட்ட அளவில் நல்ல மருத்துவமனைகளைக் கொண்ட மாநிலங்களில்கூட மனநல சிகிச்சைக்கான உள்நோயாளிகள் சிகிச்சைக்கு இருக்கக்கூடிய வசதிகள் வெளிநோயாளிகள் பிரிவுகளில் இல்லை. அரசாங்க மருத்துவமனைகளில் சாதாரண மனநலக் கோளாறுகளுக்கான மருந்துகள்கூட எல்லா நேரங்களிலும் கிடைப்பதில்லை.
சுகாதாரத்துக்கான நிதி ஒதுக்கீட்டில் சுமார் ஒரு சதவீதத்தை மட்டுமே மனநல மருத்துவத்துக்காக இந்தியா ஒதுக்குகிறது. மாநில அரசுகளிலும் இதே அணுகுமுறைதான். மனநல மருத்துவம் தொடர்பாக, அரசு சார்பில் தரப்பட்ட வாக்குறுதிகள் எதுவும் இதுவரை நிறைவேற்றப்படவில்லை. புதிய சட்டம் அமலுக்கு வரும்போது இந்தச் சூழல் நிச்சயம் மாறும் வாய்ப்புள்ளது. அனைவருக்குமான மனநலப் பராமரிப்புக்கு இந்த மசோதா உதவுகிறது. அரசு செலவில் மனநலச் சிகிச்சையும் அவசியமான மருந்துகளும் கிடைக்க இது வழி வகுக்கும். மனநலச் சிகிச்சைக்கான மையங்கள் மாவட்ட அளவில் அமைக்கப்பட வேண்டும் என்று இது சொல்கிறது. கடுமையான மன அழுத்தம் காரணமாக, தற்கொலை செய்துகொள்ள முயல்பவர்களை மருத்துவக் கண்ணோட்டத்தோடு இந்த மசோதா மூலம் மத்திய அரசு அணுகியிருக்கிறது. தற்கொலை முயற்சியைக் குற்றமாக அறிவிக்கும் இந்தியத் தண்டனைச் சட்டத்தின் செயல்பாட்டை இந்த மசோதா தடுத்து நிறுத்தியுள்ளது. இது வரவேற்கக் கூடிய மாற்றம்.
மிக நீண்ட காலமாக மனநல மருத்துவமனைகள் பெரிய காப்பகங்களாகவும் அடைத்துவைப்பதையே சிகிச்சையாகவும் பார்க்கப்பட்டுவந்திருக்கிறது. மனநலக் குறைபாடு என்பது உடல்நலக் குறைபாடுபோல எல்லோருக்கும் ஏற்படக் கூடியது என்பதோ அதுவும் எளிதில் குணப்படுத்தக்கூடியது என்பதோ நம்முடைய பொதுப் புத்தியில் இல்லை. ஆரம்ப நிலையில், சின்ன அளவிலான ஆலோசனைகள் அல்லது ஒருவேளை மாத்திரைகளில் குறிப்பிட்ட காலகட்டத்தில் தீர்த்துவிடக் கூடிய பிரச்சினைகளைக்கூடப் பெரிய பிரச்சினைகளாக நாம்தான் மாற்றுகிறோம். பின் அப்படிப் பாதிக்கப்பட்டவர்களை ஒதுக்குகிறோம்; நிராகரிக்கிறோம்; தண்டிக்கிறோம். இந்தச் சூழலையெல்லாம் புதிதாக உருவாகும் சட்டம் மாற்ற வேண்டும்; சட்டப் புத்தகத்தில் எழுதப்படும் வார்த்தைகள் செயல்பாடுகளாக மாற வேண்டும். மகிழ்ச்சியான இந்தியாவின் உத்வேகமான எழுச்சிக்கு அது வழிவகுக்கும்!