

மேற்கு வங்கத்துக்கு இயற்கை தந்த அருட்கொடை சுந்தரவனக் காடுகள். யுனெஸ்கோவால் பாரம்பரியம் மிக்க வனப் பகுதியாக அறிவிக்கப்பட்ட இந்தச் சதுப்பு நிலக் காடுகள், நூற்றுக்கும் மேற்பட்ட சிறுசிறு தீவுகளை உள்ளடக்கியவை. நவீன வேளாண்மை சூறையாடிய இந்தப் பகுதியின் விவசாயம் இப்போது மீண்டும் மலர்ச்சியை நோக்கித் திரும்பியிருக்கிறது. ‘பாரம்பரிய நெல் ரகங்களும் இயற்கை வேளாண்மையுமே மறுமலர்ச்சிக்குக் காரணம்’ என்கிறார்கள் விவசாயிகள்.
ஒருகாலத்தில், பச்சைப் புரட்சியின் விளைவாக வேளாண் பல்கலைக்கழகங்களில் பிறந்த வீரிய நெல் விதைகளை வாங்கிச் சாகுபடி செய்தவர்கள்தான் இந்த விவசாயிகளும். ‘‘ஆரம்பத்தில் கண்டுமுதலும் கணிசமாக இருந்தது. நாளடைவில் நிலம் சாரம் இழந்தது. பருவநிலை மாறுதல் காரணமாகக் கடல் நீரின் உவர்த்தன்மை நீரிலும் நிலத்திலும் பரவி எந்த நெல் ரகத்தைப் பயிரிட்டாலும் நெல் நாற்றுகள் செத்து விழத் தொடங்கின. என்ன செய்வது என்று திகைத்த வேளையில்தான், பாரம்பரிய நெல் ரகங்கள் நினைவுக்குவந்தன; மிகுந்த தேடலுக்குப் பின் மீட்டெடுத்தோம். எல்லாவற்றையும் மீறி அவை நன்கு வளர்ந்தன. இயற்கை உரங்களால் விளைச்சலும் கணிசமாகப் பெருகியதுடன் சுவையான மணம்மிக்க அரிசியும் கிடைக்கிறது’’ என்கிறார்கள் விவசாயிகள்.
சாதாரணச் செய்தி அல்ல இது. இந்தப் பகுதியில் சுமார் 50 லட்சம் பேர் வசிக்கின்றனர். மழைப் பொழிவு குறைந்துவருவதால் 2050 வாக்கில் சுமார் 10 லட்சம் பேர் பிழைப்புக்காக வெளியிடங்களுக்கு வெளியேறிவிடுவர் என்று ஜாதவ்பூர் பல்கலைக்கழக ஆய்வுக் குழு சமீபத்தில் தெரிவித்திருந்தது. விவசாயமே அற்றுவிடும் என்று அச்சப்பட வைத்த பகுதியில், அற்புதம் நடந்திருக்கிறது.
பண்டைய இந்தியாவின் பாரம்பரிய நெல் ரகங்களின் எண்ணிக்கை 30 ஆயிரம். பல்வேறுபட்ட மண் வகைகள், பருவநிலை மாறுபாடுகளை எதிர்கொள்ளத் தக்க வகையில், நம் முன்னோரின் பல நூறாண்டுகள் உழைப்பும் அனுபவமும் கொடுத்த பரிசுகள் இவை. பெருநிறுவனங்களின் சூறையாடலில் விவசாயம் சிக்கிய பின்னர், திட்டமிட்டு நடத்தப்பட்ட கலாச்சாரத் தாக்குதலில் அவற்றில் பெரும் பகுதியை நாம் தொலைத்தோம். இப்போது அவற்றை மீட்டெடுக்கும் தேவையைக் காலம் நிர்ப்பந்திக்கிறது. ஒடிசாவின் கட்டாக் மாவட்டத்தில் உள்ள நரிசு கிராமத்தைச் சேர்ந்த ஓய்வுபெற்ற ஆசிரியர், நட்வர் சாரங்கி 360 பாரம்பரிய நெல் ரகங்களை மீட்டெடுத்திருக்கிறார். கேரளத்தில் இருநூறு வகை பாரம்பரிய நெல் விதைகளை மீட்டெடுத்திருக்கிறார்கள். ஆயிரத்துக்கும் அதிக நெல் ரகங்கள் தமிழகத்தில் இருந்தன. இப்போது இவற்றில் சுமார் 100 ரகங்களை மீட்டெடுத்திருக்கிறார்கள் இயற்கை ஆர்வலர்கள். அரசும் தன்னை இந்தப் பணியில் ஈடுபடுத்திக்கொள்ள வேண்டும். விதையும் எதிர்கால ஆயுதம் என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும்!