

குடியரசுத் தலைவர் தேர்தலில் பாஜக வேட்பாளராக பிஹார் மாநில ஆளுநராக இருந்த ராம்நாத் கோவிந்த் வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருக்கிறார். பாஜக தற்போது கையாண்டிருக்கும் அரசியல் உத்தி ஏற்கெனவே ஊகித்ததுதான். பாஜகவுக்கு எதிராகப் பெரும்பான்மைக் கட்சிகள் ஒருங்கிணையலாம் என்ற எதிர்பார்ப்பு நிலவிய சூழலில், கடும் போட்டியை எதிர்கொள்ளும் வியூகமாக சமூகரீதியாக ஒடுக்கப்பட்ட இனத்தைச் சேர்ந்த ஒருவரை வேட்பாளராக பாஜக முன்னிறுத்தும் என்பது எதிர்பார்க்கப்பட்டது. அதையே பாஜக செய்திருக்கிறது. வழக்கறிஞராகவும் நாடாளுமன்ற உறுப்பினராகவும் ஆளுநராகவும் பணியாற்றிய அனுபவம் கொண்ட ராம்நாத் கோவிந்த் சர்ச்சைகளைக் கடந்தவர் என்பது அவர் பெற்றிருக்கும் கூடுதல் பலம். பாஜக வியூகத்தை முன்கூட்டி அறிந்திருந்தும், தங்கள் தரப்பு பொது வேட்பாளரை முன்கூட்டி அறிவிக்காமல் பிந்தியதை எதிர்க்கட்சிகளுக்கான பின்னடைவு என்று சொல்லலாம். அவர்கள் முந்திக்கொண்டு ஒரு நல்ல வேட்பாளரை அறிவித்திருந்தால், பாஜகவுக்கான நெருக்கடியாக அதை மாற்றியிருக்கலாம். இப்போது பாஜகவுக்கான அனுகூலம் அதிகரித்திருக்கிறது.
தற்போதைய நிலவரப்படி குடியரசுத் தலைவர் தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி 48.9% வாக்கு பலத்தைக் கொண்டிருக்கிறது. மேலும், அதற்கு ஆதரவு அளிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படும் அதிமுக, பிஜு ஜனதா தளம், தெலங்கானா ராஷ்ட்ரிய சமிதி, ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் ஆகிய கட்சிகளின் ஆதரவையும் சேர்த்துக் கணக்கிட்டால், பாஜக 60% வரையிலும் வாக்குகளைக் கைப்பற்ற வாய்ப்பிருக்கிறது. என்றாலும், பந்தயம் இன்னும் முடிந்துவிடவில்லை.
ஒரு செல்வாக்கு மிக்க வேட்பாளரைத் தேர்ந்தெடுப்பதோடு, எதிர்க்கட்சிகள் அனைத்தையும் ஒருங்கிணைக்கும் பணியிலும் வென்றால், பாஜகவை வீழ்த்தும் வாய்ப்பு இன்னமும் இருக்கத்தான் செய்கிறது. காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி எதிர்கொள்ளவிருக்கும் மிகப் பெரிய சவால்களில் ஒன்று என்றும்கூட இதைச் சொல்லலாம்.
இந்தியாவில் இதுவரையில் நடந்த குடியரசுத் தலைவர் தேர்தல்களிலேயே முன்னெப்போதும் இல்லாத முக்கியத்துவம் இந்தத் தேர்தலில் உருவாகியிருக்கிறது. இதற்கான காரணம், மக்களவை - மாநிலங்களவை, மாநிலங்களின் அரசுகள் என்று எல்லா முனைகளிலும் அறுதிப் பெரும்பான்மையை நோக்கி நகர்ந்துகொண்டிருக்கும் பாஜக, இந்திய அரசியலமைப்பையே மாற்றி, ‘இந்து ராஷ்டிரம்’ அமைக்கும் கனவைக் கொண்டது என்பதுதான். தவிர, பிரதமர் மோடி தனக்கு அரசியல் நெருக்கடி நேரும் ஒரு தருணத்தில், அதை நாட்டின் நெருக்கடிச் சூழலாக மாற்றிவிடுவாரோ என்ற அச்சமும் எதிர்க்கட்சியினரிடம் இருக்கிறது. ஆக, பிரதமரும் அமைச்சரவையும் முன்மொழியும் எல்லா முடிவுகளுக்கும் அப்படியே ஒப்புதல் அளிக்கும் ஒருவராக, அதே கட்சியைச் சேர்ந்தவராகப் புதிய குடியரசுத் தலைவர் இருந்துவிடக் கூடாது என்ற பதற்றம் இருக்கிறது. இதைத் தாண்டி 2019 தேர்தலில் பாஜக வெற்றிக்கு அணை போடக் கூடிய ஒரு மகா கூட்டணியை அமைப்பதற்கான முன்னோட்டச் சூழலாகவும் இதை காங்கிரஸும் கம்யூனிஸ்ட் கட்சிகளும் பார்க்கின்றன. எப்படிப் பார்த்தாலும், இந்தத் தேர்தல் இரு தரப்புக்குமே அவ்வளவு எளிதானதாக இருந்துவிடாது என்பது மட்டும் உறுதி.
புதிதாகத் தேர்ந்தெடுக்கப்படும் குடியரசுத் தலைவர் எந்தத் தரப்பைச் சார்ந்தவராகவும் இருக்கலாம். ஆனால், இதுநாள் வரை இந்த நாடு பாதுகாத்துவந்திருக்கும் விழுமியங்களைக் காப்பாற்ற வேண்டிய பெரும் கடமை அவருக்கு இருக்கிறது. அதைத்தான் நாமும் எதிர்பார்க்கிறோம், நாட்டு மக்களும் எதிர்பார்க்கிறார்கள்!