

வங்கிகள் வைத்திருக்கும் சொத்துகளின் மதிப்பு தரமின்றி இருப்பதாலும், லாபம் குறைந்து வருவதாலும், கடன் கேட்பவர்களுக்குக் கொடுப் பதற்குப் போதிய பணம் கையிருப்பில் இல்லாததாலும் வங்கிகளின் செயல்பாடுகளுக்கான இடர்கள் அதிகமாகிவிட்டன என்று இந்திய ரிசர்வ் வங்கி எச்சரித்திருக்கிறது. வங்கிகளின் நிதி நிலைமை எந்த அளவுக்கு வலுவாக இருக்கிறது என்று ஆண்டுக்கு இரு முறை ஆராய்ந்து ரிசர்வ் வங்கி தரும் அறிக்கையில்தான் இந்த எச்சரிக்கை இடம்பெற்றிருக்கிறது.
வங்கிகளின் முக்கியமான பணியே வணிகச் செயல்பாடுகள்தான். முதலீட்டாளர்கள் வங்கியில் செலுத்தும் பணத்தை, பொருளாதார வளர்ச்சிக்கு மிகவும் உதவியாக இருக்கும் தொழில்துறை, அடித்தளக் கட்டமைப்புத் துறை போன்றவற்றின் வளர்ச்சிக்குக் கடன் கொடுத்து, அதன் மூலம் வருவாய் ஈட்டுவதுதான் வங்கிகளின் வேலை. இப்படித் தரும் கடன் இனங்களில் ஏதாவது ஒன்றில் நிதி முடங்கி, அதன் காரணமாக வங்கிக்கு வரவேண்டிய வருவாய் குறைந்தால், நாளடைவில் அது வங்கியின் இதர கடன் வழங்கு பிரிவுகளையும் முடக்கி, வங்கியின் செயல்பாட்டை வெகுவாகப் பாதித்துவிடும். ஆனால், ஆறு மாதங்களுக்கு முன்பு ரிசர்வ் வங்கி அளித்த அறிக்கையிலும் இதே போன்ற எச்சரிக்கை இடம்பெற்றிருந்த நிலையில், மறுபடியும் அதே எச்சரிக்கை விடப்பட்டிருப்பது வங்கிகள் செயல்பாட்டில் எந்த மாற்றமும் இல்லை என்பதையே காட்டுகிறது. “வங்கிகளால் அதிகக் கடனை வழங்க முடியாமல் போவதும், மின்னணுக் குற்றங்கள் அதிகரிப்பதும் இரு பெரும் ஆபத்துகளாக உருவெடுக்கின்றன” என்று வங்கித் துறை நிபுணர்கள் கடந்த அக்டோபர் - நவம்பரில் ரிசர்வ் வங்கி நடத்திய ஆய்வரங்கில் தெரிவித்திருந்ததும் இங்கு நினைவுகூர வேண்டியது. அரசுதான் வங்கிகளுக்கு ஆதரவாகக் கொள்கை முடிவுகளை எடுக்க வேண்டும் என்றும் ரிசர்வ் வங்கி தெரிவித்திருக்கிறது.
மிகவும் முக்கியமான இக்காலகட்டத்தில், அரசின் நிதிக் கொள்கையை மேற்பார்வையிடும் பொறுப்பில் ரிசர்வ் வங்கியின் துணை ஆளுநராக விரால் ஆசார்யா பொறுப்பேற்றிருக்கிறார். வங்கித் துறையில் அதன் அமைப்பு முறைமை காரணமாக ஏற்படும் இடர்களை அடையாளம் காண்பதிலும் அதற்குத் தீர்வு காண்பதிலும் அனுபவம் பெற்றவர் அவர். கடன் கொடுப்பவர்கள் மூலம் நிதித் துறைக்கு ஏற்படக்கூடிய இடர்கள் குறித்துப் பல ஆய்வறிக்கைகளை அளித்திருப்பவர். வங்கித் துறை மீட்சிக்கு வழி சொல்லக் கூடியவர்கள், அரசு மட்டத்தில் மட்டும் அல்லாமல் வெளியிலும் இருக்கிறார்கள். அரசுதான் இந்த விஷயம் தொடர்பாக எல்லோரையும் ஒருங்கிணைத்து, தேவையான ஆலோசனைகளைப் பெற்று, வங்கித் துறை மீட்சிக்கான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். வங்கிகள் வாராக் கடன் தொடர்பில் தெளிவான கொள்கைகளை வகுக்க வேண்டும். பணமதிப்பு நீக்க நடவடிக்கை உண்டாக்கியிருக்கும் தேக்க நிலையிலிருந்து மீண்டு, பொருளாதாரம் எழ உதவத் தக்க வகையில் வங்கித் துறை சீக்கிரம் மீள வேண்டும்!