

கார் காலத்தில் தானியங்கள் மற்றும் பருப்பு வகைச் சாகுபடியை அதிகப்படுத்துவதற்காக மத்திய அரசு வழங்கும் குறைந்தபட்ச ஆதரவு விலை சற்றே உயர்த்தி அறிவிக்கப்பட்டிருக்கிறது. விதைப்புக் காலத்துக்கு முன்னதாகவே அரசு இதை அறிவித்துள்ளது. ஆனாலும், இந்த விலையை மட்டுமே ஊக்குவிப்பாகக் கருதி, விவசாயிகளால் சாகுபடிப் பரப்பை உயர்த்திவிட முடியாது.
அடுத்தடுத்து இரண்டு ஆண்டுகளாகப் பருவமழை பொய்த்ததால் விவசாயிகள் கடுமையான நெருக்கடியில் உள்ளனர். உரிய காலத்தில், உரிய அளவில் பெய்யும் மழையும் இதர அம்சங்களும்தான் விளைச்சலைப் பெருக்க உதவும். அப்போதும் நாட்டின் மொத்தத் தேவைக்கும் உள்நாட்டில் விளையும் மொத்த சாகுபடிக்கும் இடையில் பற்றாக்குறை இருக்கும். அதனால் இறக்குமதிகள் தவிர்க்கப்பட முடியாததாகவே இருக்கும். பருப்பு சாகுபடியை 207.5 லட்சம் மெட்ரிக் டன்கள் அளவுக்கு உயர்த்த அரசு இலக்கு நிர்ணயித்திருக்கிறது.
சாகுபடியாளர்களுக்குப் பணம் கிடைக்க அரசின் ஆதார விலை அறிவிப்பு உதவிவருகிறது. அரசின் தற்போதைய கொள்முதல் முறையை மேலும் பலனுள்ளதாக்கும் மாற்று வழிகளைக் கண்டறியும் வரை ஆதார விலை அறிவிப்பு தொடர வேண்டும். ஆனால், இது விவசாய வருமானத்தை உயர்த்திவிடாது. உற்பத்தித்திறன் அதிகரிக்க நடவடிக்கைகள் அவசியம். உலகின் பெரிய விவசாய நாடுகளுடன் ஒப்பிடும்போது, ஒரு ஏக்கரில் கிடைக்கும் விளைச்சல் இந்தியாவில் குறைவே! சாகுபடி முறைகளில் நவீனத் தொழில்நுட்பம் இல்லாமை, தண்ணீர் பற்றாக்குறை, விதைகளின் வீரியமின்மை, மண்ணில் சத்து குறைந்துகொண்டே வருதல் என்று இதற்குப் பல காரணங்கள் இருக்கின்றன. விளைச்சலைக் கூட்டும் வேளாண் தொழில்நுட்பங்களைக் கண்டறியும் ஆராய்ச்சிக்கு அதிகம் முதலீடு செய்ய வேண்டும்.
ரபி பருவத்தில் பருப்பு வகைகள் 2012-13-ல் 151.65 லட்சம் ஹெக்டேரில் சாகுபடி செய்யப்பட்டன. 2015-16-ல் 139.08 லட்சம் ஹெக்டேராக அது குறைந்துவிட்டது. காரிப் பருவத்தில் 2012-13-ல் 101.48 லட்சம் ஹெக்டேரில் சாகுபடியான பருப்பு வகைகள் 2015-16-ல் 115.62 லட்சம் ஹெக்டேர்களாக அதிகரித்தன. உள்நாட்டின் பருப்பு சாகுபடி போதவில்லை என்பதற்காக ஆண்டுதோறும் பருப்பு வகைகளை இறக்குமதி செய்வது இந்தியப் பொருளாதாரத்துக்கு நல்லதல்ல.
பருப்பு மற்றும் நவதானியங்களுக்கு ஆதரவு விலையை அறிவிப்பதுடன் அதை எங்கே, எப்படி அரசு கொள்முதல் செய்யும் என்ற விவரங்களையும் தெரிவிக்க வேண்டும். இப்படிச் செய்தால்தான் விவசாயிகள் தங்களின் சாகுபடி மாற்றங்களை விரும்பி மேற்கொள்வார்கள். இத்தகைய தகவல்கள் தெரியாமல் விவசாயிகள் இருக்கிறார்கள் என்பதை தேசிய மாதிரிக் கணக்கெடுப்பு நிறுவனம் சுட்டிக்காட்டியிருக்கிறது. கரும்பு, உணவு தானியங்களைவிட பருப்பு (பயறு) வகைகளுக்குக் குறைந்த அளவு தண்ணீர் போதும். அத்துடன், நிலத்துக்கும் வளம் சேரும்.
ஒவ்வொரு ஏக்கரிலும் விளையும் பயறுவகைப் பயிர்களின் உற்பத்தித் திறனைக் கூட்டுவதுடன் சாகுபடிப் பரப்பையும் அதிகப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை விவசாயிகளுடன் இணைந்து அரசு எடுக்க வேண்டும். தண்ணீர் அதிகம் தேவைப்படும் பணப் பயிர்களுக்குப் பதிலாக பருப்பு வகைகளையும் ஊட்டச்சத்து மிகுந்த இதர புன்செய் பயிர்களையும் எண்ணெய் வித்துகளையும் அதிகப் பரப்பில் சாகுபடி செய்யவும் விவசாயிகளுக்கு அரசுகள் விழிப்புணர்வை ஊட்ட வேண்டும்.