

நவீனத் தமிழ்த் திரையிசையின் குரலாக ஒலித்துவந்த பாடலாசிரியர் நா.முத்துக்குமாரின் அகால மரணம் தமிழகத்தை சோகத்தில் தள்ளியிருக்கிறது. கடும் உழைப்பு, நெருக்கடியான பணிகளுக்கு இடையில் வேலை செய்துவந்த முத்துக்குமார், மஞ்சள் காமாலையின் பாதிப்பால் ஆகஸ்ட் 14 அன்று காலமாகிவிட்டார்.
இயக்குநர் பாலுமகேந்திராவிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றிய நா.முத்துக்குமார், தனது ‘பட்டாம்பூச்சி விற்பவன்’கவிதைத் தொகுதி மூலம் இலக்கிய வட்டத்தில் அறிமுகமானார். சுயகேலியும், காதல் மனமும் நிறைந்த எளிய மொழியிலான அவரது கவிதைகள் பெரும் வரவேற்பைப் பெற்றன. ‘சுவாசம்போல் கவிதை வருகிறது இவனிடம்’என்று பாலுமகேந்திரா பாராட்டியிருந்தார்.
2000-ல் சீமான் இயக்கிய ‘வீரநடை’படத்தின் மூலம் பாடலாசிரியராக அறிமுகமான முத்துக்குமார், செல்வராகவன் இயக்கிய ‘காதல் கொண்டேன்’படத்தின் பாடல்கள் மூலம் தமிழ்த் திரையுலகைத் திரும்பிப் பார்க்கவைத்தார். யுவன் ஷங்கர் ராஜா இசையில் உருவான அந்தப் பாடல்களில், சுய இரக்கமும் ஆதரவு தேடும் மனமும் கொண்ட இளைஞனின் உணர்வுகளை ஆத்மார்த்தமாகப் பிரதிபலித்தார் முத்துக்குமார். ‘ஒரு வண்ணத்துப் பூச்சி எந்தன் வழி தேடி வந்தது/ அதன் வண்ணங்கள் மட்டும் இன்று விரலோடு உள்ளது’ என்பன போன்ற வரிகளில், பாடலின் சந்தத்துக்குள் கவித்துவமான வார்த்தைகளைப் பொருத்துவதில் அவருக்கு இருந்த திறன் வெளிப்பட்டது. தொடர்ந்து செல்வராகவன் - யுவன் ஷங்கர் ராஜா - முத்துக்குமார் கூட்டணியில் வெளியான ‘7ஜி ரெயின்போ காலனி’படத்தின் பாடல்கள் தமிழ் ரசிகர்களிடம், குறிப்பாக இளைஞர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றன. அப்படத்தில் இடம்பெற்ற ‘நினைத்து நினைத்துப் பார்த்தேன்’பாடல், ‘அமர்ந்து பேசும் மரங்களின் நிழலும் நமது கதையைக் காலமும் சொல்லும்’எனும் வரிக்காகவே இன்றும் சிலாகிக்கப்படுகிறது. அவர் மறைந்த நாளன்று உலகமெங்கும் உள்ள தமிழர்கள் சமூக ஊடகங்களில் அந்தப் பாடலைப் பகிர்ந்துகொண்டு அவருக்கு அஞ்சலி செலுத்தினார்கள்.
எம்.எஸ்.விஸ்வநாதன் - கண்ணதாசன், எம்.எஸ். விஸ்வநாதன் - வாலி, இளையராஜா - வைரமுத்து, ஏ.ஆர்.ரஹ்மான் - வைரமுத்து ஆகிய புகழ்பெற்ற இணைகளுக்குப் பின்னர், யுவன் ஷங்கர் ராஜா - முத்துக்குமார் இணை, தமிழ்த் திரையுலகில் தனக்கான இடத்தை உருவாக்கிக்கொண்டது.
ஏ.ஆர்.ரஹ்மான், வித்யாசாகர், கார்த்திக் ராஜா, ஹாரிஸ் ஜெயராஜ், இமான், ஜி.வி.பிரகாஷ் போன்ற இசையமைப்பாளர்களுடன் இணைந்து அவர் உருவாக்கிய பாடல்களும் புகழ்பெற்றவை. இளையராஜாவிடம் அதிக பாடல்கள் எழுதிய இளம் தலைமுறைப் பாடலாசிரியரும் அவர்தான். இரண்டு தேசிய விருதுகள், ஐந்து மாநில விருதுகள் உட்பட பல விருதுகளைப் பெற்றவர் அவர்.
சமகாலத் தமிழ் சினிமாவின் உச்ச பாடலாசிரியர் என்றாலும், முத்துக்குமார் பெரிய அளவில் சம்பாதித்தவர் அல்ல. ஒரு படத்தில் ஒரு பெரிய கதாநாயகனுக்குத் தரப்படுகிற சம்பளத்தில் பத்தில் ஒரு பகுதியைக்கூட இந்தப் பதினைந்து ஆண்டுகள் முழுக்க இரவு பகலாக கண் விழித்து அவர் சம்பாதிக்கவில்லை என்று அவரையறிந்தவர்கள் சொல்கிறார்கள். தமிழ்ச் சூழலில் படைப்பாளிகள் எங்கும் எப்போதும் பாவப்பட்டவர்கள்தான். 41 வயதே ஆன முத்துக்குமாரின் குடும்பத்தினர் ஒரு நல்ல எதிர்காலத்தை இழந்துவிட்டார்கள். தமிழ் ரசிகர்கள் கவித்துவம் மிக்க நூற்றுக்கணக்கான பாடல்களை இழந்துவிட்டார்கள். எனினும், முத்துக்குமாரின் வார்த்தைகள் தமிழில் என்றும் நிலைத்திருக்கும்!