எச்சரிக்கை தரும் முடிவு

எச்சரிக்கை தரும் முடிவு
Updated on
1 min read

மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர், டெல்லி ஆகிய நான்கு மாநில சட்டப் பேரவைகளுக்கான பொதுத் தேர்தல் முடிவுகள் வெளியாகிவிட்டன. கருத்துக் கணிப்புகளும் வாக்குக் கணிப்புகளும் இந்தத் தேர்தல் முடிவைக் கிட்டத்தட்ட முன்கூட்டியே தெரிவித்திருந்தன.

டெல்லி மாநிலத்தில் கடந்த 15 ஆண்டுகளாக ஆட்சியிலிருந்த காங்கிரஸ் படுதோல்வி அடைந்திருக்கிறது. ஊழல், நிர்வாக முறைகேடு, விலைவாசி உயர்வு ஆகியவற்றுடன் டெல்லியில் அமலான கடுமையான மின்வெட்டு, மின் கட்டணத்தைக் கடுமையாக உயர்த்தியது, மாணவி மீதான பாலியல் வன்முறை போன்ற சம்பவங்கள் மக்களுடைய கோபத்தைக் கிளறிவிட்டன. அதன் விளைவை காங்கிரஸ் அனுபவிக்க நேர்ந்திருக்கிறது.

காங்கிரஸ் கட்சி மீதான அதிருப்தியை பாரதிய ஜனதாதான் அறுவடை செய்திருக்க வேண்டும். ஆனால், அந்தக் கட்சிக்குக் கடிவாளம்போடுவதுபோல மக்களில் கணிசமானவர்கள் ஆம் ஆத்மி கட்சிக்கு வாக்களித்துள்ளனர். இந்தக் கட்சியின் தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் படித்தவர், அரசின் உயர் பதவியில் இருந்தவர். ஊழலுக்கு எதிராக அண்ணா ஹசாரே தொடங்கிய இயக்கத்தில் தளகர்த்தராகச் செயல்பட்டவர். வெளியிலிருந்து குரல் கொடுப்பதோடு நின்றுவிடக் கூடாது என்று துணிந்து, ஊழல் எதிர்ப்பு இயக்கத்தை அரசியல் கட்சியாக மாற்றியவர்.

எனவே, காங்கிரஸ், பாரதிய ஜனதா இரண்டுக்கும் அடுத்த மாற்று எது என்று பார்த்து இந்தக் கட்சிக்கு மக்கள் ஆதரவு தந்துள்ளனர். இந்த ஆதரவு நாடு முழுவதும் இப்படியே கிடைத்துவிடும் என்று சொல்ல முடியாது. தேர்தல் நடந்த பிற மாநிலங்களில் இந்தக் கட்சிக்கு வலுவான அமைப்புகள் கிடையாது. அதே சமயம் இதை ‘தேநீர்க் கோப்பையில் ஏற்பட்ட சூறாவளி’ என்றும் ஒதுக்கிவிட முடியாது.

தேர்தலில் போட்டியிடும் கட்சிகளைப் பிடிக்காவிட்டால், வாக்களிக்காமல் இருந்துவிடுவதே வாக்காளர்கள் இதுவரை செய்துவந்த காரியம். இப்போதுதான் முதல்முறையாக, ‘மேலே உள்ள வேட்பாளர்களில் எவருக்கும் வாக்களிக்க விரும்பவில்லை’ என்பதையும் தெரிவிக்க வாக்குப்பதிவு இயந்திரத்தில் ‘நோட்டா’ என்ற பொத்தானைப் பொருத்தியிருக்கிறார்கள். இடைத்தேர்தல் நடந்த ஏற்காடு சட்டப்பேரவைத் தொகுதி உள்பட எல்லாவற்றிலும் வாக்காளர்கள் இந்தப் பொத்தானைக் குறிப்பிடத்தக்க அளவுக்குப் பயன்படுத்தியிருக்கிறார்கள்.

இதுதான் இன்றைய அரசியல்வாதிகளுக்கும் அரசியல் கட்சிகளுக்கும் விடப்பட்ட உண்மையான எச்சரிக்கை. ‘நீங்கள் சரியாக ஆட்சி செய்யாவிட்டால், உங்களை விட்டுவிட்டுப் புதிதாகக் கட்சி தொடங்கும் புதுமுகங்களையோ, ‘நோட்டா’ பொத்தானையோ நாடுவோம் என்ற எச்சரிக்கை அது.

படித்தவர்களும் தன்னலம் கருதாத தலைவர்களும் நிரம்பியிருந்த கட்சி ஜனதா. 1977-ல் மத்தியிலும் சில வட மாநிலங்களிலும் ஆட்சிக்கு வந்தது. அதன் தலைவர்களுக்கு இடையே ஏற்பட்ட சிறுசிறு கருத்து வேறுபாடுகளாலும், பூசல்களாலும் கட்சியே உடைந்து அடையாளம் தெரியாமல் போனது.

ஆளும் கட்சியாகவோ, எதிர்க்கட்சியாகவோ ஆம் ஆத்மி கட்சியினர் எப்படி நடந்துகொள்கிறார்கள் என்று பார்த்துத்தான் எதிர்காலத்தில் இதைப்போன்ற கட்சிகள் தொடர்பாக எல்லா மாநில மக்களும் முடிவெடுப்பார்கள்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in