

யூகங்களைக் கிளப்பியிருந்த மத்திய அமைச்சரவை மாற்றம் பெரிய விவாதங்களுக்கு வாய்ப்பு அளிக்காமல் முடிந்திருக்கின்றது. பிரதமர் மோடி மேற்கொள்ளும் முதல் அமைச்சரவை மாற்றம் இது. வளர்ச்சி, மாற்றம் எனும் பிரம்மாண்ட முழக்கங்களோடு ஒரு புரட்சியையே நிகழ்த்திவிடும் தோற்றத்தில் ஆட்சிக்கு வந்த பாஜக அரசு அப்படியான பெரிய சாதனைகளை கடந்த இரண்டாண்டுகளில் செய்துவிடவில்லை. குறிப்பாக, தொழில் துறையில் பெரிய உத்வேகம் ஏதும் ஏற்படாமலிருப்பதும் எதிர்பார்த்த அளவுக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்க முடியாமலிருப்பதும் மோடியின் ஆதரவாளர்கள் இடையிலேயே முணுமுணுப்புகளை உருவாக்க ஆரம்பித்திருக்கிறது.
பெரிய அளவிலான ஊழல் குற்றச்சாட்டுகள் இல்லை; சில துறைகளில் அமைச்சர்கள் சிறப்பாகச் செயல்பட்டிருக்கிறார்கள் என்பதைத் தாண்டி பல துறைகள் கற்பனை வளமும் செயலூக் கமும் நிறைந்த மனிதர்களுக்காகக் காத்திருப்பது வெளிப்படை யாகவே தெரிந்தது. இதை உணர்ந்ததாலேயே மோடி அமைச் சரவை மாற்றத்துக்குத் தயாரானார். ஆனால், மேற்கொள்ளப் பட்டிருக்கும் மாற்றங்கள் அவர் தானாக நிர்ணயித்துக்கொண்ட இலக்குகளையேகூடத் தொடர முடியாத சூழலையே வெளிப் படுத்துகின்றன.
அமைச்சரவை மாற்றத்தின்போது 5 பேர் பதவியிலிருந்து நீக்கப்பட்டுள்ளனர் என்றாலும் அவர்களில் எவரும் கேபினட் அமைச் சர்கள் இல்லை. சர்ச்சைகளில் அடிக்கடி சிக்கிய மனிதவளத் துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி அத்துறையிலிருந்து ஜவுளித்துறைக்கு மாற்றப்பட்டிருக்கிறார். சுற்றுச்சூழல் துறையில் இணை அமைச்சராக இருந்த பிரகாஷ் ஜவடேகர் காபினட் அந்தஸ்துள்ள அமைச்சராகப் பதவி உயர்த்தப்பட்டு மனித வளத்துறைக்கு நியமிக்கப்பட்டிருக்கிறார். சட்டம், நீதித் துறை சதானந்த கௌடாவிடமிருந்து ரவி சங்கர் பிரசாதுக்குத் மாற்றப்பட்டிருக்கிறது. செய்தி, ஒலிபரப்பு அமைச்சகம் அருண் ஜேட்லியிடமிருந்து வெங்கய்ய நாயுடு வசம் ஒப்படைக்கப்பட்டிருக்கிறது. நாடாளுமன்ற நடவடிக்கைகளுக்கான துறை நாயுடுவிடமிருந்து அனந்த குமாரிடம் தரப்பட்டிருக்கிறது. ஊரக வளர்ச்சி, பஞ்சாயத்து ராஜ் அமைச்சகப் பொறுப்பு சவுத்ரி பீரேந்தர் சிங்கிடமிருந்து நரேந்திர சிங் தோமரிடம் ஒப்படைக்கப்பட்டிருக்கிறது. அப்னா தளம் (அனுபிரியா படேல்), இந்தியக் குடியரசுக் கட்சி (ராம்தாஸ் அதாவாலே) ஆகிய இரு தோழமைக் கட்சிகளைச் சேர்ந்தவர்களும் அமைச்சரவையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
கூட்டிக் கழித்துப் பார்த்தால், அமைச்சரவை மாற்றம் அரசின் நிர்வாக மேம்பாட்டைக் காட்டிலும், தேர்தல் கணக்குகளுக்கே முக்கியத்துவம் கொடுத்திருப்பதுபோலத் தெரிகிறது. அடுத்தடுத்து தேர்தலை எதிர்கொள்ளவிருக்கும் உத்தரப் பிரதேசம், குஜராத், பஞ்சாப், உத்தராகண்ட் மாநிலக் கணக்குகள் அமைச்சரவை மாற்றத்தில் அப்பட்டமாகத் தெரிகின்றன. இன்றைய அமைச்சரவையில் உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் மட்டும் 16 பேர்! இதேபோல, குஜராத்தில் படேல் சமூகம் கவனத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டிருப்பதுபோல, மாநிலம்சார், சமூகங்கள்சார் கணக்குகள் அமைச்சரவை மாற்றத்தில் கணிசமான அளவில் பங்கு வகித்திருக்கின்றன.
ஆண்டுதோறும் அமைச்சர்களின் செயல்பாட்டை ஆய்வுசெய்வதாகச் சொல்லும் மோடி, துறையின் திசையறியாத அமைச்சர்கள் பலரை அப்படியே பதவியில் தொடர விட்டிருக்கிறார். ‘குறைந்தபட்ச அரசு, அதிகபட்ச நிர்வாகம்’ என்ற முழக்கத்தை முன்வைத்தவர் இம்முறை 19 பேரை அமைச்சரவையில் சேர்த்ததன் மூலம் அந்த வார்த்தைகளையும் உடைத்திருக்கிறார். 75 வயதைக் கடந்தவர்கள் அமைச்சர் பொறுப்பிலிருந்து விடுவிக்கப்படுவார்கள் என்ற பேச்சு அடிபட்டது. 75 வயதைக் கடந்த இருவர் அமைச்சரவையில் அப்படியே நீடிப்பது அந்தப் பேச்சையும் உடைத்திருக்கிறது.
தேர்தல் வியூக அழுத்தங்களே மோடியின் செயல்பாடுகளைப் பெருமளவில் தீர்மானிப்பதுபோலத் தெரிகிறது. இந்தியாவில் வருடந்தோறும் மாநிலங்களில் மாறி மாறி தேர்தல் வரும்; தேர்தல்களிலேயே பிரதமரின் கவனம் இருந்தால், தேசம் ஒரு முக்கியமான காலகட்டத்தில் தேங்கிவிடும்!