மலரட்டும் வளமையான வாசிப்பு மரபு!

மலரட்டும் வளமையான வாசிப்பு மரபு!
Updated on
1 min read

இப்போதெல்லாம் இலக்கியக் கூட்டங்கள் அதிகமாக நடக்கின்றன. புத்தகக் கடைகளும் மாதத்துக்குக் குறைந்தது இரண்டு கூட்டங்களையேனும் நடத்துகின்றன. ஆரோக்கியமான இந்தப் போக்கினூடே இன்னொரு புதிய அம்சத்தையும் கவனிக்க முடிகிறது. கூட்டங்களுக்கு வருபவர்களில் பல புதிய முகங்களைக் காண முடிகிறது. இவர்களில் சிலர் புத்தகங்களையும் எழுதுகிறார்கள்.

இவர்களில் பலரும் தகவல் தொழில்நுட்பம், மனிதவளத் துறை முதலான துறைகளில் பணிபுரியும் 30 வயதுக்குட்பட்ட இளைஞர்கள் என்பதுதான் நம்மை ஆச்சரியப்படுத்துகிறது. ஆங்கில வழிக் கல்வி பயின்ற பலர் தமிழ் வாசிப்பிலிருந்தும் தமிழ் இலக்கியத்திலிருந்தும் கடந்த பல தசாப்தங்களாகவே அந்நியப்பட்டிருக்கிறார்கள். 1970-கள்வரை சமூகத்தின் முன்னேறிய, மேல்தட்டுக்களைச் சேர்ந்த பலருக்கும் தமிழில் வாசிப்பதிலும் படைப்பதிலும் பெரிதாக எந்தச் சிக்கலும் இருக்கவில்லை. ஆனால், அதற்குப் பிந்தைய காலகட்டத்தில் இவர்கள் தமிழிலிருந்து அந்நியப்படத் தொடங்கினார்கள். தமிழ் எழுத்துப் பரப்பை விட்டு இவர்கள் பெருமளவில் விலகினார்கள். இந்தக் காலகட்டத்தில் பின்தங்கிய, ஒடுக்கப்பட்ட சமூகங்களிலிருந்து படைப்பாளிகளும் வாசகர்களும் கூடுதலாக வர ஆரம்பித்து தமிழ் இலக்கியப் பரப்பின் வளத்தைக் கூட்டினார்கள்.

இப்போது, ஆங்கில வழிக் கல்வி மூலம் நல்ல பணிகளில் அமர்ந்திருக்கும் இன்றைய தலைமுறையைச் சேர்ந்த பலரும் தமிழ் எழுத்துலகுக்கு நெருக்கமாக வந்துகொண்டிருக்கிறார்கள். படைப்புலகிலும் அது குறித்த விவாதக் களங்களிலும் உரையாடல்களிலும் இவர்களுடைய பங்கேற்பை உணர முடிகிறது. இவர்களில் பலர் ஃபேஸ்புக், வலைப்பூக்கள், யூடியூப் முதலான தளங்கள் மூலமாகத் தமிழுக்கு நெருக்கமானவர்கள். இவற்றின் மூலம் ஏற்பட்ட ஆர்வத்தால் சமகாலத் தமிழ் இலக்கியத்தைப் படிக்க ஆரம்பித்த இவர்களால் தமிழ் வாசகப் பரப்பு விரிவடைந்துவருகிறது ஆரோக்கியமான விஷயமே! இவர்களால் வாசகப் பரப்பு விரிவடையும் அதே நேரத்தில் இவர்களது வாசிப்பின் ஆழம் குறித்த சந்தேகமும் ஏற்படுகிறது. தீவிர இலக்கியத் தளத்திலும் நுனிப்புல் மேய்பவர்களாகப் பலரும் மாறிவருகிறார்கள். இந்தப் போக்கு களையப்பட வேண்டியது.

தகவல் தொழில்நுட்ப யுகத்தில், வணிகமயமான இன்றைய சூழலில், தமிழுக்கு எதிர்காலம் இருக்காது என்னும் அச்சத்தை ஆரூடமாகப் பலர் முன்வைத்தார்கள். இதே தகவல் தொழில்நுட்ப யுகம்தான் இத்தகைய மாற்றத்தையும் சாத்தியப்படுத்தியிருக்கிறது. இணையத்தையும் சமூக வலைத்தளங்களையும் பயன்படுத்திக்கொள்ளும் விதத்தில் கூர்மையும் படைப்பூக்கமும் தொலைநோக்கும் கொண்டு செயல்பட்டால் இன்னும் பல தமிழர்களைத் தமிழ் வாசிப்பின் பக்கம் ஈர்க்க முடியும். கடந்த சில ஆண்டுகளாக நிகழ்ந்துவரும் இந்த ஆரோக்கியமான சலனத்தின் தெளிவான அடையாளங்களைக் கடந்த ஆண்டில் பார்க்க முடிந்தது. வரும் ஆண்டுக்கான நம்பிக்கை விதையாக இதை எடுத்துக்கொண்டு இந்தப் போக்கை முன்னெடுத்துச் செல்வது தமிழ் மொழியின் மீதும் இலக்கியத்தின் மீதும் ஆர்வமுள்ளவர்களின் கடமை.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in