பாதுகாப்பான பாதுகாப்பு ஒப்பந்தம்

பாதுகாப்பான பாதுகாப்பு ஒப்பந்தம்
Updated on
2 min read

இந்தியாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையிலான ராணுவ உறவை வலுப்படுத்தும் நடவடிக்கையாக, இரு நாடுகளின் ராணுவங்களும் தங்களுக்கு இடையிலான போக்குவரத்துச் செயல்பாட்டை ஒருங்கிணைக்கப் புதிய புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டிருக்கின்றன. இந்த ஒப்பந்தம் பத்தாண்டுப் பேச்சுகளுக்குப் பிறகே இறுதி வடிவம் பெற்றுள்ளது. இரு நாடுகளின் முப்படைகளும் கூட்டாகப் போர்ப் பயிற்சி ஒத்திகையில் ஈடுபடுவது, ராணுவப் பயிற்சியில் சேர்ந்தே ஈடுபடுவது, இரு நாடுகளின் போர்க் கப்பல்களும் பரஸ்பரம் கப்பல் தளங்களுக்குச் சென்று தங்களுடைய போர்க்கள, தொழில்நுட்ப அனுபவங்களைப் பகிர்ந்துகொள்வது, நிலநடுக்கம் - ஆழிப்பேரலை - புயல் போன்ற இயற்கைப் பேரிடர் காலங்களில் மனிதாபிமான அடிப்படையில் உதவி - மீட்பு நடவடிக்கைகளில் உதவுவது, ஒருங்கிணைப்பது போன்றவற்றுக்கு இந்த ஒப்பந்தம் வகை செய்கிறது. அதே சமயம், இரு நாடுகளின் கடற்படைத் தளங்களையோ, விமான தளங்களையோ, போர்க் களங்களையோ முன் அனுமதியின்றிப் பயன்படுத்திக்கொள்ளவோ, தங்கவோ அனுமதிக்கவில்லை என்பது குறிப்பிடத் தக்கது. அப்படி ஒரு தேவை ஏற்பட்டால், இரு நாடுகளும் முன்கூட்டியே தகவல் தெரிவித்து, அனுமதி பெற்ற பிறகே அவற்றைப் பயன்படுத்திக்கொள்ள முடியும்.

உள்நாட்டுக் கலவரம், போர்ச் சூழல்களில் வெளிநாடுகளில் சிக்கிக்கொள்ளும் இந்தியர்களை மீட்டுவர இந்திய ராணுவத்துக்கு அமெரிக்க ராணுவம் எந்த வகையில் எல்லாம் உதவ முடியுமோ அந்த வகைகளில் உதவ வழி செய்திருக்கிறது இந்த ஒப்பந்தம். அதே போன்ற உதவி, அமெரிக்க ராணுவத்துக்கு இந்திய ராணுவத்திடமிருந்து தேவைப்பட்டாலும் அளிப்பதற்கு ஒப்பந்தம் வழிசெய்துள்ளது. நேபாளத்தில் நிலநடுக்கத்தில் சிக்கியவர்களை மீட்க அமெரிக்க விமானப் படை விமானங்கள் வந்தபோது, அவற்றுக்கு எரிபொருளை நிரப்பி உதவியது இந்திய விமானப் படை. உலகின் பல பகுதிகளுக்கும் செல்லும் அமெரிக்க ராணுவப் படைகளுக்கு இந்திய தளங்களைப் பயன்படுத்திக்கொள்ள கிடைக்கும் வாய்ப்பு பேருதவியாக இருக்கும். இந்தியாவுக்கும் அதேபோல உலகின் எந்தப் பகுதிக்கு வேண்டுமானாலும் விரைந்து செல்ல அமெரிக்க தளங்கள் உதவி செய்யும்.

பல ஆண்டுகளாக இரு தரப்பும் இடைவிடாது பேசிய பிறகே ஒப்பந்தம் கையெழுத்தாகியிருக்கிறது. இந்த ஒப்பந்தத்தின் அடிப்படையான நோக்கத்துக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்த பிறகும்கூட, உயர் நிலையில் மேலும் நான்கு முறை சந்தித்துப் பேசி சந்தேகங்களைத் தீர்த்துக்கொண்டே இறுதி வடிவம் எட்டப்பட்டிருக்கிறது. அமெரிக்காவுடனான இந்திய ராணுவ நட்புறவு எப்படிப்பட்டதாக இருக்க வேண்டும் என்பதில், உயர் நிலை அதிகாரிகளிடையே இருந்த கருத்து வேறுபாடுகள்தான் இதற்குக் காரணம்.

அமெரிக்காவுக்கு நண்பனாக இருக்கலாமே தவிர, அதன் ராணுவ நோக்கங்களுக்கெல்லாம் தோள்கொடுக்கும் தோழனாக இருக்கத் தேவையில்லை என்ற நிலைப்பாடு நிலவுகிறது. இந்தியாவில் அமெரிக்கா ராணுவத் தளங்களை அமைத்துக்கொள்ள இந்த ஒப்பந்தத்தில் அனுமதி தரப்படவில்லை என்பது கவனிக்க வேண்டிய விஷயம். ராணுவரீதியில் இரு நாடுகளும் சேர்ந்து செயல்படுவது கட்டாயம் என்ற நிபந்தனையும் கிடையாது. ராணுவரீதியாக அமெரிக்காவுடன் சேர்ந்து செயல்படுவதில் ஆதாயம் இருக்கிறது என்று அரசு நினைத்தாலும், அமெரிக்காவுடன் ஒரேயடியாக ராணுவக் கூட்டில் சேர்ந்துவிடக் கூடாது என்ற எண்ணமும் இந்தியாவிடம் இருக்கிறது. அதேசமயம், இப்போதைக்கு இது வரவேற்கத் தக்க நிலைதான் என்றே சொல்லலாம்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in