

பஞ்சாப் சட்டசபைத் தேர்தலில் காங்கிரஸுக்குக் கிடைத்திருக்கும் வெற்றி, பாஜகவின் தொடர் வெற்றி களால் ஏற்பட்ட காயங்களுக்கு ஒரு அருமருந்து என்று கருதலாம். ‘காங்கிரஸ் இல்லாத இந்தியா’ எனும் பாஜகவின் முழக்கத்துக்குக் காங்கிரஸ் கொடுத்திருக்கும் அடி இது.
பஞ்சாபில் மொத்தமுள்ள 117 தொகுதிகளில் 77 தொகுதிகளை வென்றிருக்கிறது காங்கிரஸ். கர்நாடகத்தில் 2013-ல் கிடைத்த வெற்றிக்குப் பிறகு, பெரிய மாநிலம் ஒன்றில் காங்கிரஸுக்குக் கிடைத்திருக்கும் வெற்றி இது. கேப்டன் அமரிந்தர் சிங் மிகத் தீவிரமாகப் பிரச்சாரம் செய்து, இந்த வெற்றியை ஈட்டித்தந்திருக்கிறார். அகாலிதளம் - பாஜக கூட்டணியை மட்டுமல்ல, 2014 மக்களவைத் தேர்தலில் கிடைத்த வெற்றிக்குப் பிறகு மதமதப்புடன் திகழ்ந்த ஆம்ஆத்மி கட்சியையும் காங்கிரஸ் எதிர்க்க வேண்டியிருந்தது. தேசிய அளவில் பாஜக, காங்கிரஸுக்கு மாற்று எனும் முழக்கத்துடன் பஞ்சாபைத் தேர்ந்தெடுத்திருந்த ஆஆக உண்மையில், காங்கிரஸையே இங்கு முழுவதுமாகக் குறிவைத்து இயங்கியது. இந்த வெற்றியின் மூலம் ஆஆகவுக்கும் ஒரு பாடம் கற்பித்திருக்கிறது காங்கிரஸ்.
பஞ்சாபின் மால்வா பிரதேசத்தில் 2014 மக்களவைத் தேர்தலில் தங்களுக்குக் கிடைத்த ஆதரவை விரிவுபடுத்திக்கொள்ள ஆஆக கடுமையாக முயன்றது. ஆனால், அந்தக் கட்சிக்குள் ஏற்பட்ட உட்பூசலும், அடிமட்ட நிலையில் தொண்டர்கள் இல்லாததும், மாநிலக் கட்சிக்குத் தலைவர் இல்லாததும் மிகப் பெரிய பின்னடைவாக அமைந்துவிட்டது. விளைவாக, 2014 மக்களவைப் பொதுத் தேர்தலின்போது 24% வாக்குகளைப் பெற்ற ஆஆக, அதை மேலும் பெருக்கிக்கொள்ளத் தவறியது. தன்னார்வத் தொண்டர்களால் நிரம்பிய கட்சியை, டெல்லியிலிருந்து இயக்கப்படும் மையப்படுத்தப்பட்ட கட்சியாக்க முயன்றார் அர்விந்த் கேஜ்ரிவால். மக்கள் அதை ஏற்கவில்லை. மாநிலத்தின் முதலமைச்சராக யார் இருப்பார் என்பதைக்கூட அறிவிக்காத அவருடைய போக்குக்கும் ஒரு அடி கொடுத்திருக்கிறார்கள் பஞ்சாபியர்கள். முந்தைய தேர்தல்களில் அகாலிதளம் -பாஜகவுக்கு வாக்களித்தவர்களில் கணிசமானவர்கள் இம்முறை காங்கிரஸுக்கு வாக்களித்துள்ளனர்.
பஞ்சாப் தேர்தல் முடிவு ஒரு வகையில், தேசிய அளவில் காங்கிரஸ் தலைமைக்குக் கொடுக்கப்பட்டிருக்கும் சமிக்ஞை என்றும் சொல்லலாம். பத்தாண்டுகளாகத் தொடர்ந்து ஆட்சியில் இருந்த அகாலிதளம் - பாஜக கூட்டணி அரசு பஞ்சாப் மக்களிடையே கடும் அதிருப்தியைச் சம்பாதித் திருந்தது; ஊழல் பெருத்திருந்தது; இளைஞர்களைச் சீரழித்த போதைப்பொருள் நுகர்வுப் பழக்கம் கட்டுப்படுத்தப்படவில்லை; மக்கள் கடும் கோபத்தில் இருந்தார்கள் என்றாலும்கூட, அதையெல்லாம் காங்கிரஸ் பக்கம் நோக்கி வாக்குகளாக வெற்றிகரமாகத் திருப்பியவர் அமரிந்தர் சிங். தேசிய அளவில் இன்று பாஜக ஒரு அசாதாரண சக்தியாக உருவெடுத்திருக்கும் நிலையில், காங்கிரஸ் தன்னுடைய முந்தைய பாணி அரசியலைக் கைவிட வேண்டும். மத்திய தலைமையைப் பிரதானமாகக் கொண்டு, மையப்படுத்தப்பட்ட அதிகாரத்தின்வழி மாநிலங்களில் கட்சியை ஆளும் போக்குக்கு விடை கொடுத்து, மாநிலங்களில் வலுவான தலைமையை வளர்த்தெடுக்க வேண்டும்!