Published : 18 Jul 2016 09:14 AM
Last Updated : 18 Jul 2016 09:14 AM

பயங்கரவாத எதிர்ப்பு ஒரு கூட்டுச் செயல்பாடு!

பிரான்ஸின் நீஸ் நகரில் நடத்தப்பட்டிருக்கும் பயங்கரவாதத் தாக்குதல் உலக நாடுகளைப் பதைபதைக்க வைத்திருக்கிறது. பஸ்டில் தினக் கொண்டாட்டத்தையொட்டி, வாண வேடிக்கையைக் காண கடற்கரையோரம் திரண்டிருந்த மக்கள் மீது 25 டன் எடை கொண்ட கன ரக லாரியை வேகமாக ஓட்டிவந்து ஏற்றியிருக்கிறார் துனிஷியாவில் பிறந்து பிரெஞ்சுக் குடியுரிமை பெற்ற முஹம்மது எனும் இளைஞர். 80-க்கும் மேற்பட்ட உயிர்களை இந்தத் தாக்குதல் பறித்திருக்கிறது; மேலும் பல நூறு பேர் படுகாயம் அடைந்திருக்கின்றனர். இது பயங்கரவாதத் தாக்குதல் என்று அறிவித்துள்ள பிரெஞ்சு அதிபர் ஹோலந்தே, நாட்டில் இப்போது அமலில் உள்ள நெருக்கடி நிலையை மேலும் மூன்று மாதங்களுக்கு நீட்டித்திருக்கிறார். சிரியாவிலும் இராக்கிலும் தொடரும் ஐஎஸ் பயங்கரவாத அமைப்பின் மீதான வான் தாக்குதலைத் தீவிரப்படுத்துமாறும் அவர் கோரியிருக்கிறார்.

கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்குள் பிரான்ஸில் மூன்று பெரிய தாக்குதல்கள் நடந்துள்ளன. 2015 நவம்பர் மாதம் பாரிஸ் நகரில் நடந்த தாக்குதல்களில் 130 பேர் இறந்தனர். அதற்கும் முன் ஜனவரியில் ‘ஷார்லி ஹெப்டோ’ பத்திரிகை அலுவலகத்துக்குள் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 12 பத்திரிகையாளர்கள் உயிரிழந்தனர்.

உள்நாட்டுப் பாதுகாப்பைப் பல மடங்கு பலப்படுத்த வேண்டிய நிலைக்கு பிரான்ஸ் இப்போது தள்ளப்பட்டிருக்கிறது. அப்படியான செயல்பாடுகள் தீவிரம் அடையும்போது ஒரு விஷயத்தில் பிரான்ஸ் அக்கறையோடும் விழிப்போடும் செயல்பட வேண்டும். முஸ்லிம்கள் மீதான வெறுப்புக்குச் சமூகத்தை இரையாக்கிவிடாமல் தவிர்ப்பதுதான் அது. இதுபோன்ற தருணங்களில் வலதுசாரிகள் குரல் உயர்வது இயல்பு. இப்போதுதான் பிரான்ஸ் இடதுசாரிகள் முன் மிகப் பெரிய பணி நிற்கிறது. அனைத்துத் தரப்பு மக்களையும் ஒன்றிணைத்து, பயங்கரவாதத்துக்கு எதிரான போரை அது எதிர்கொள்ள வேண்டும்.

பிரான்ஸ் தாக்குதலுக்கும் ஐஎஸ் அமைப்புக்கும் உள்ள தொடர்புகள் தொடர்பாக விரிவான விசாரணை தொடங்கப்பட்டிருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. “லாரியை ஓட்டிவந்த இளைஞர் சிறு குற்றங்களைச் செய்தவர்; பயங்கரவாத இயக்கங்களுடன் அவருக்குத் தொடர்பிருப்பதாகத் தெரியவில்லை” என்று முதல்கட்டத் தகவல்கள் வெளியானாலும், பயங்கரவாத அமைப்புகளால் பயிற்றுவிக்கப்பட்டு, தனி நபராகத் தாக்குதல் நடத்தப் புறப்படும் ஆயுததாரிகளை அடையாளம் காண்பது எப்படி, அவர்கள் மூலமான தாக்குதல்களைத் தடுப்பது எப்படி என்று உலகம் யோசிப்பதற்கான சூழலை இது உருவாக்கியிருக்கிறது. கூடவே, ஐஎஸ் அமைப்பு தொடர்பான விவாதங்களும் அச்சங்களும் மேலும் விரிய ஆரம்பித்திருக்கின்றன.

இந்தியாவிலும் ஐஎஸ் அனுதாபிகளும் ஆதரவாளர்களும் ஆங்காங்கே பரவியிருக்கின்றனர். இவர்களில் பெரும்பாலானோர் இளைய தலைமுறையினர் - ஐஎஸ் அமைப்பின் குரூரமான முகத்தை முழுமையாக அறியாதவர்கள் எனும் பின்னணியில், நம்முடைய பாதுகாப்பு அமைப்புகள் கூடுதல் விழிப்போடு செயல்பட வேண்டியிருக்கிறது. மத்திய - மாநில உளவுத் துறையினர் பயங்கரவாதிகள் குறித்துத் தங்களுக்குக் கிடைக்கும் தகவல்களைத் தாமதமின்றிப் பரிமாறிக்கொள்வதுடன், சந்தேகத்துக்கிடமானவர்களின் நடமாட்டங்களைக் கண்காணிக்க வேண்டும். பள்ளி, கல்லூரிகளில் தொடங்கி பயங்கரவாதத்துக்கு எதிரான உணர்வுகளை நம் பிள்ளைகளிடம் வளர்த்தெடுக்க ஏதுவாக பொதுச் சமூகத்துடன் இந்தப் பணியில் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும்.

பாதுகாப்பு என்பது வெறும் காவலர்கள், ஆயுதங்கள், கண்காணிப்பு சார்ந்த விஷயம் மட்டும் அல்ல; சமூக நல்லிணக்கத்துக்கு அதில் முக்கியமான பங்கு இருக்கிறது என்பதை ஆட்சியாளர்கள் புரிந்து செயல்பட வேண்டும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x