

அமைப்புரீதியாகத் திரட்டப்பட்ட தொழில் பிரிவுகளில் பணியாற்றும் மகளிர், பேறுகாலத்தின்போது ஊதியத் துடன் 12 வாரங்களுக்கு விடுப்பு எடுத்துக்கொள் ளலாம் என்ற உரிமை, இப்போது 26 வாரங்களாக உயர்த்தப் பட்டிருக்கிறது. இதற்கான மசோதா மக்களவையில் சமீபத்தில் நிறைவேறியது. மாநிலங்களவை இதற்கு ஏற்கெனவே ஒப்புதல் வழங்கியிருக்கிறது. இதற்காக ‘மகப்பேறு பலன் சட்டம், 1961’ திருத்தப்பட்டிருக்கிறது. புதிய சட்டம், 18 லட்சம் மகளிருக்குப் பலனளிக்கும் என்று தொழிலாளர் நலத்துறை அமைச்சர் பண்டாரு தத்தாத்ரேய தெரிவித்திருக்கிறார். வாடகைத் தாயாகச் செயல்படுவோருக்கும், இளம் சிசுக்களைத் தத்தெடுப் போருக்கும் இந்த உரிமை வழங்கப்பட சட்டம் வகை செய்கிறது.
குழந்தை பிறந்து முதல் ஆறு மாதங்களுக்கு (24 வாரங்கள்) தாய்ப்பால் கொடுப்பது அவசியம் என்று உலக சுகாதார நிறுவனம் (டபிள்யு.எச்.ஓ.) பரிந்துரைத்திருக்கிறது. அமைப்புரீதியாகத் திரட்டப்படாத கோடிக்கணக்கான இளம் தாய்மார்களுக்கு, அவர்கள் கருவுற்ற காலத்தில் சத்துள்ள காய்கறிகளையும் பழங்களையும் வாங்கிச் சாப்பிட ரூ.6,000 ரொக்கமாக அரசால் தரப்படுகிறது. அந்தத் தொகை முழுக்கக் கருவுற்ற பெண்களுக்கு மட்டுமே செலவிடப்படும் என்று எதிர் பார்க்க முடியாது. எனவே, அவர்களுக்கு நேரடியாகப் பலன் சேரும் வகையில் மேலும் பல திட்டங்களை மத்திய - மாநில அரசுகள் கூட்டாக இணைந்து அமல்படுத்த வேண்டும்.
மகப்பேறு என்பது கருவுற்ற பெண்களின் குடும்பத்துக்கு எந்தச் செலவையும் வைக்காமல் அரசே தன்னுடைய பொறுப்பில் மேற்கொள்வதாக அமைய வேண்டும். வேலைக்குச் செல்லும், வேலைக்குச் செல்லாத பெண்களின் மகப்பேறும் சுகமாகவும் பாதுகாப்பாகவும் இருக்க அனைவருக்கும் பயன்படும்படியான சமூகக் காப்புறுதித் திட்டத்தை அரசு கொண்டு வர வேண்டும்.
மகப்பேறு பலன் சட்டம் இயற்றப்பட்டுவிட்டதால், குழந்தை பிறக்கக்கூடிய பருவத்தில் உள்ள பெண்களை நிர்வாகங்கள் வேலைக்கு எடுப்பதைத் தவிர்த்துவிடாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். இளம் தாய்மார்கள் வேலை செய்யும் இடத்திலேயே தொட்டில் வசதியுடன் குழந்தை பராமரிப்பு மையம் அமைக்கப்பட வேண்டும் என்ற பிரிவு வரவேற்கப்பட வேண்டியது. ஆனால், தொழிலாளர் நலத் துறை அதிகாரிகள் அக்கறையுடன் இதை மேற்பார்வை செய்வது அவசியம்.
பெண்களுக்கு அதிகாரம் அளிக்கும் எந்தச் சட்டமும் நிபந்தனைகளுடன் இயற்றப்படக் கூடாது. அப்படியிருந்தால் தான், அவர்களுக்கு உரிய உரிமைகளையும் சலுகைகளையும் வழங்க முடியும். பொருளாதார நிலைமைக்கேற்பத் தொழிலாளர்கள் தொழில் நிறுவனங்களையும், சில வேளைகளில் தொழில்களையுமே மாற்றிக்கொள்வதால் நல்வாழ்வு நடவடிக்கைகளின் பலன்கள் அவர்களுக்குத் தொடர்ச்சியாகக் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும். பெண்களுக்கான வேலைவாய்ப்புகளை மேலும் பல மடங்கு அதிகப்படுத்த வேண்டும். மகப்பேறு நல, குழந்தைகள் நலச் சட்டங்கள் மூலம் அவர்களுக்கு சமூகப் பாதுகாப்பு அளிப்பது அரசின் கடமை!