Published : 27 Oct 2014 08:33 AM
Last Updated : 27 Oct 2014 08:33 AM

அரக்கனை வீழ்த்திய சிறுவன்

‘சபாஷ்’ என்றுதான் சொல்லத் தோன்றுகிறது, எபோலாவைக் கட்டுப்பாட்டுக்குள் நைஜீரியா கொண்டுவந்திருப்பதைப் பார்த்து. அமெரிக்காவே எபோலாவைக் கண்டு அதிர்ந்துபோயிருக்கும் சூழலில், நைஜீரியாவின் சாதனை மகத்தானது.

கடந்த ஜூலை மாதத்தில் நைஜீரியாவின் லாகோஸ் நகருக்கு லைபீரியாவிலிருந்து எபோலா காய்ச்சலால் பாதிப்புக்கு உள்ளான தன்னுடைய சகோதரியைச் சிகிச்சைக்காக அழைத்துக்கொண்டு ஒரு இளைஞர் வந்தார். அவருக்கும் காய்ச்சல் பரவியது. அந்த லைபீரிய இளைஞரோடு சில நாட்கள் உடனிருந்த ஒருவருக்குக் காய்ச்சல் ஏற்பட்டது. தனிமைப்படுத்தப்பட்ட மருத்துவ சிகிச்சைப் பகுதியை விட்டு, அதிகாரிகள் யாருக்கும் தெரியாமல் அந்த இளைஞர் ரகசியமாக வெளியேறி, ஹர்கோர்ட் துறைமுகத்துக்குச் சென்றார். அங்கே அவருக்குச் சிகிச்சை அளித்த மருத்துவருக்கும் அந்த நோய் தொற்றி, அவரும் இறந்தார். அந்த நபர் இப்படிப் பலருக்கும் நோயைப் பரப்பியது பிறகே தெரியவந்தது.

நைஜீரிய அரசு உடனே போர்க்கால அடிப்படையில் செயல்பட்டு, அந்நோய் கண்டவர்கள் அனைவரையும் அடையாளம் கண்டு, தனிமைப்படுத்தி, உரிய சிகிச்சைகள் அளித்துக் காப்பாற்றியது. அத்துடன் அந்நோய் வேறு யாருக்கும் பரவிவிடாதபடி தடுப்பு நடவடிக்கைகளையும் எடுத்தது. மும்பை மாநகருக்கு இணையான மக்கள்தொகையைக் கொண்ட மிகப் பெரிய நகரான லாகோஸில் ஏராளமான மக்கள், அடிப்படை சுகாதார வசதிகளின்றி குடிசைப் பகுதிகளில்தான் வசிக்கின்றனர். இந்தச் சூழலானது எந்த விதக் கொள்ளை நோய் வந்தாலும் எளிதாகப் பரவவும், நீண்ட காலம் மக்களிடையே சுழன்று சுழன்று பாதிப்புகளைத் தொடர்ந்து ஏற் படுத்தவும், சுகாதாரக் கட்டமைப்பையே சீர்குலைக்கவும் ஏற்றது. ஆனால், உலக சுகாதார ஸ்தாபனமே ‘நைஜீரியாவில் இப்போது எபோலா இல்லை’ என்று அக்டோபர் 20-ம் தேதி அறிவிக்கும் அளவுக்கு நிலைமை முன்னேறிவிட்டது.

எபோலா என்ற நோய் ஏற்படுத்திய பீதியிலிருந்து உலகமும், நோயின் பாதிப்பிலிருந்து மீள முடியாமல் கினி, லைபீரியா, சியரா லியோன் போன்ற நாடுகளும் தத்தளித்துக்கொண்டிருக்கும் வேளையில், நைஜீரியாவின் இந்த சாதனை அபாரமானது, உத்வேகம் அளிக்கக்கூடியது. போலியோவை அறவே ஒழிக்க எடுத்த நடவடிக்கை களையே எபோலாவுக்கும் நைஜீரியா கையாண்டுள்ளது. அப்போது பயன்படுத்திய அதே விழிப்புணர்வுப் பிரச்சாரம், ஆயிரக் கணக்கில் சுகாதாரப் பணியாளர்களை ஈடுபடுத்துவது, நூற்றுக் கணக்கான மருத்துவ முகாம்களைத் திறப்பது, குறிப்பிட்ட நாளில் காய்ச்சல் உள்ள எல்லோரையும் ரத்தப் பரிசோதனைக்கு உள்படுத்துவது என்று பல நடவடிக்கைகளை நைஜீரியா அடுக்கடுக்காக எடுத்திருக்கிறது. கினி, லைபீரியா, சியரா லியோன் நாடுகளில் எபோலா காய்ச்சலுக்கு ஆளானவர்களில் 70% பேர் உயிரிழந்திருக்க, நைஜீரியாவில் அது வெறும் 40% ஆக இருந்து, இப்போது அதுவும் முழுமையாகக் கட்டுப்படுத்தப்பட்டுவிட்டது. இத்தனைக்கும், ஆப்பிரிக்க நாடுகளுக்கு உள்ள அத்தனை பிரச்சினைகளுடனேயே நைஜீரியா இதைச் சாதித்திருக்கிறது.

நைஜீரியாவில் அப்படி இருக்க, பெரும் மருத்துவக் கட்டமைப்பைக் கொண்ட இந்தியா டெங்கு காய்ச்சலுக்கே தடுமாறிக்கொண்டிருக்கிறது. நோய்த் தடுப்பு நடவடிக்கைகளைவிட நோயைப் பற்றிய உண்மைகள் மக்களிடம் பரவாமல் இருப்பதற்கு எடுக்கும் நடவடிக்கைகளே இந்தியாவில் அதிகம். இந்நிலையில்தான், மிகவும் அசாதாரணமான, மோசமான எபோலாவுக்கே நமக்கு வழிகாட்டியிருக்கிறது நைஜீரியா. நாம் என்ன செய்யப்போகிறோம்?

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x