Published : 14 Jun 2016 08:50 AM
Last Updated : 14 Jun 2016 08:50 AM

கட்சி அதிகாரத்தை கேலிக்குள்ளாக்கும் பணத்தின் வல்லமை

வியப்பை அளிக்கக்கூடிய வெற்றிகளும் அதிர்ச்சி தரக்கூடிய தோல்விகளும் மக்களவைத் தேர்தல் களத்தில் சகஜமானது தான்; மாநிலங்களவைத் தேர்தலிலும் அப்படியான வெற்றி, தோல்வி முடிவுகள் வருகிறதென்றால், அதற்கு இரண்டு காரணங்கள்தான் இருக்க முடியும். ஒன்று, கட்சித் தலைமையின் உத்தியில் ஏற்படும் தவறு அல்லது வேட்பாளர்களில் யாரோ ஒரு பணக்காரர் தன்னுடைய செல்வாக்கைப் பயன்படுத்துவது. சமீபத்திய தேர்தலும் இதை மீண்டும் ஒரு முறை நிரூபிக்கிறது.

ஹரியாணாவில் காங்கிரஸ் சட்டப்பேரவை உறுப்பினர்களும் கர்நாடகத்தில் மதச்சார்பற்ற ஜனதா தளத்தின் சட்டப் பேரவை உறுப்பினர்களும் கட்சி உத்தரவை மீறி வாக்களித்துள்ளனர். ஹரியாணாவில் சுயேச்சையாக நின்ற ஊடக அதிபர் சுபாஷ் சந்திராவை பாஜக ஆதரித்தது. காங்கிரஸ் இந்த இடத்தில் வழக்கறிஞர் ஆர்.கே.ஆனந்த் என்பவருக்கு வாக்களிக்குமாறு கட்சியினருக்கு ‘கொறடா உத்தரவு’பிறப்பித்திருந்தது. அவரை இந்திய தேசிய லோக தளம் கட்சியும் ஆதரித்தது. ஹரியாணாவைப் பொறுத்த அளவில், காங்கிரஸின் எதிர் முகாமைச் சேர்ந்த கட்சிகளில் ஒன்று இந்திய தேசிய லோக தளம். அப்படியிருக்க, அது ஆதரிக்கும் வேட்பாளருக்கு நாம் ஆதரவு தரக் கூடாது என்று முன்னாள் முதல்வர் பூபேந்திர சிங் ஹூடா உள்ளிட்ட தலைவர்கள் கட்சித் தலைமையை எச்சரித்திருந்தனர். ஆனால், கட்சித் தலைமை கேட்பதாக இல்லை. இப்போது தேர்தலில் காங்கிரஸ் உறுப்பினர்கள் 15 பேர் கட்சிக் கட்டளையை மீறி வாக்களித்திருக்கின்றனர். தங்கள் வாக்குகளைச் செல்லாத வாக்குகள் ஆக்கியதன் மூலம், எதிர்த் தரப்பை வெற்றி பெற வைத்துவிட்டனர். ஆயினும் அவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கும் நிலையில் காங்கிரஸ் தலைமை இல்லை.

கர்நாடகத்தில் மதச்சார்பற்ற ஜனதா தளத்தில் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் காங்கிரஸ் பலன் அடைந்திருக்கிறது. மதச்சார்பற்ற ஜனதா தளத்துக்குள் அதிருப்தியாளர்கள் அணி சேர்வது வழக்கமானது. கர்நாடக முதல்வராக இப்போது பதவி வகிக்கும் சித்தராமய்யா முன்னர் மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியில் இருந்தவர்தான். எனவே, மதச்சார்பற்ற ஜனதா தளத்தின் அதிருப்தி சட்டப்பேரவை உறுப்பினர்களில் பலர் அவருக்கு நெருக்கமானவர்களாக இருக்கிறார்கள். எனவே, அவர்களுடைய ஆதரவைப் பெறுவது சித்தராமய்யாவுக்கு எளிதாக முடிந்திருக்கிறது. அது காங்கிரஸுக்குச் சாதகமாகிவிட்டது.

இதேபோல, உத்தரப் பிரதேசத்தில் பாஜக உறுப்பினர்களின் மீறலால் காங்கிரஸ் பலனடைந்திருக்கிறது. இங்கே கபில் சிபல் நின்ற தொகுதியில் பல உறுப்பினர்கள் தங்களுடைய கட்சித் தலைமை யின் கட்டளையை மீறி வாக்களித்ததன் விளைவாக, காங்கிரஸுக்குப் போதிய பலம் இல்லாத சூழலிலும் கபில் சிபல் வென்றிருக்கிறார். குஜராத்தைச் சேர்ந்த பெண் தொழிலதிபர் பிரீத்தி மகாபாத்ர சுயேச்சை யாக இங்கு போட்டியிட்டார். அவர் பிரதமர் மோடிக்கு நன்கு அறிமுகமானவர். இருந்தும் கபில் சிபல் வெற்றி பெற்றுவிட்டார்.

மக்களவையில் பாஜக தனிப் பெரும்பான்மையுடன் உள்ள சூழலில், எதிர்க்கட்சிகள் பெரும்பான்மையாக உள்ள மாநிலங்களவையில் உள்ள ஒவ்வொரு இடத்துக்கான தேர்தலும் முக்கியத்துவம் பெறுகிறது. இந்தச் சூழலிலும் கட்சிக் கட்டுப்பாட்டை அல்லது வியூகத்தை உறுப்பினர்கள் மீறுகிறார்கள் என்றால், அவர்களை இயக்குவது எது அல்லது உள்ளூர் கள யதார்த்தத்தையும் உறுப்பினர்களின் உணர்வுகளையும் மீறி கட்சித் தலைமைகளை இயக்குவது எது? பணத்தின் வல்லமை கட்சிகளை, மிகப் பெரிய அதிகாரங்களைக்கூடப் பரிகசிக்க வைக்கிறது!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x