யாரைக் காக்கும் அரசு இது?
செயல்படாத அரசு என்கிற முத்திரையைத் தாங்கி நின்றாலும், சில விஷயங்களை மன்மோகன் சிங் அரசு கையாளும் லாவகமும் செயல்படும் வேகமும் பிரமிக்க வைப்பவை. குற்ற வழக்குகளில் தொடர்புடைய நாடாளுமன்ற - சட்டப் பேரவை உறுப்பினர்களைக் காப்பாற்றுவதற்காகப் பதைபதைக்க ஓர் அவசரச் சட்டம் இயற்றியிருக்கிறது சிங் கூட்டணி.
மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின் பிரதானமான அம்சத்தை ரத்து செய்து ஜூலை 10-ம் தேதி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இதன்படி, ஊழல் மற்றும் குற்ற வழக்குகளில் இரண்டு ஆண்டுகளுக்கு மேல் சிறைத் தண்டனை பெற்ற பிரதிநிதிகளின் பதவிகள் உடனடியாகப் பறிக்கப்படும்; சிறையில் உள்ளவர்களும் தேர்தலில் போட்டியிட முடியாது.
மக்கள் பிரச்சினைகள் ஒன்றில்கூட ஒருமித்த மாதிரி சிந்திக்கத் தெரியாத இந்திய அரசியல் கட்சிகளில் பெரும்பாலானவை இந்தத் தீர்ப்புக்கு ஒரே குரலில் எதிர்ப்புத் தெரிவித்தன. உச்ச நீதிமன்றத்தில் மறு ஆய்வு மனு தாக்கல் செய்தது அரசு; தொடர்ந்து, தீர்ப்பைச் செயலிழக்க வைக்க, மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்திலும் திருத்தம் மேற்கொண்டது. இதனிடையே, மருத்துவக் கல்விக்கான இடங்கள் ஒதுக்கீட்டில் காங்கிரஸ் மாநிலங்களவை உறுப்பினர் ரஷீத் மசூத் முறைகேட்டில் ஈடுபட்டது நீதிமன்றத்தால் கடந்த வாரம் உறுதிசெய்யப்பட்டது. அவருக்கான தண்டனை அக்.1-ம் தேதி அறிவிக்கப்படவுள்ள நிலையில், அவர் பதவி நீக்கம் செய்யப்படும் வாய்ப்புள்ள சூழலில்தான் அவசரச் சட்டத்துக்கு ஒப்புதல் அளித்திருக்கிறது மத்திய அமைச்சரவை. இனி, ரஷீத் மசூத்துக்கு இரண்டாண்டுகளுக்கு மேல் தண்டனை அறிவிக்கப்பட்டாலும் அவரைத் தகுதி நீக்கம் செய்ய முடியாது; மேல் முறையீடு செய்யலாம். மேலும், குற்றச்சாட்டுடன் சிறையில் உள்ளவர்களும் தேர்தலில் போட்டியிடலாம்.
நம்முடைய மக்களவை உறுப்பினர்கள் 543 பேரில், 162 பேர் மீது குற்ற வழக்குகள் உள்ளன. இவர்களில் 30 சதவீதத்தினர் மீது உள்ள வழக்குகள் கடுமையான பிரிவுகளின் கீழ் பதிவுசெய்யப்பட்டவை. சட்டப்பேரவை உறுப்பினர்களில் 4,032 பேர் மீது, குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன. இவர்களில், 14 சதவீதத்தினர் மீது உள்ள வழக்குகள் ஐந்தாண்டுகளுக்கும் மேல் தண்டனை பெறும் வகையிலான கடும் குற்றச்சாட்டுகளை உள்ளடக்கியவை. உத்தரப் பிரதேச சட்டப் பேரவை உறுப்பினர்களில் மட்டும் மூன்றில் ஒரு பகுதியினர் குற்றப் பின்னணி உடையவர்கள். இந்தியாவில் குற்றப் பின்னணியுடைய பிரதிநிதிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரிக்கிறது என்கிறன ஆய்வுகள்.
இத்தகைய சூழலில் இப்படி ஓர் அவசரச் சட்டத்தைக் கொண்டு வந்திருக்கும் அரசை என்னவென்று சொல்வது? பாரதி பாடிய ‘பேயரசு செய்தால் பிணம் தின்னும் சாத்திரங்கள்’ எனும் வார்த்தைகள்தான் நினைவுக்கு வருகின்றன.
