மூல இயந்திரத்துக்கான தேசியக் கொள்கை பலன் தருமா?
ஆலைகளில் உற்பத்திக்குத் தேவையான கனரக இயந்திரங்கள் உட்பட எல்லாவிதமான மூல இயந்திரங்களையும் இந்தியாவில் தயாரிப்பதற்கான தேசியக் கொள்கையை மத்திய அரசு வகுத்திருக்கிறது. இவற்றை உள்நாட்டிலேயே தயாரிக்க முடிந்தால் வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்வதைக் குறைக்க முடியும். நம்முடைய தேவைக்கேற்ற அளவிலும், எண்ணிக்கையிலும் நாமே தயாரித்துக் கொள்ள முடியும். உதிரி பாகங்களையும் கையிருப்பில் வைத்துக்கொள்ள முடியும். வெளிநாடுகளுக்கு மூல இயந்திரங்களை ஏற்றுமதி செய்து அன்னியச் செலாவணியை ஈட்ட முடியும்.
மூல இயந்திரங்களை இந்தியாவிலேயே முழுக்கத் தயாரிக்க அதிகபட்சம் 10 ஆண்டுகள் என்று காலவரம்பை நிர்ணயித்துள்ளது அரசு. எனினும், நாம் மூல இயந்திர உற்பத்தியில் இதுவரை அதிகக் கவனம் செலுத்தியதே இல்லை என்பதால் இது எந்த அளவுக்குச் சாத்தியம் என்று தெரியவில்லை. அதேசமயம், பொதுவான ஊக்குவிப்புக்கு இது நல்ல கிரியா ஊக்கியாகச் செயல்பட முடியும்.
தொழில் உற்பத்தியில் குறைந்தபட்சம் 40% அளவுக்கு ஏற்றுமதி செய்ய வேண்டும் என்று முதல் கட்ட இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது. இப்போது உலக அளவில் மூல இயந்திர ஏற்றுமதியில் இந்தியாவின் பங்கு இப்போது வெறும் 0.8%. இதை 2.5% ஆக உயர்த்த வேண்டும் என்பது மற்றொரு இலக்கு. 2025-க்குள் மூல இயந்திரங்களின் தேவையில் 80%-ஐ இந்தியாவிலேயே தயாரித்துப் பூர்த்தி செய்துகொள்ள வேண்டும் என்றும் இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது. இது நிறைவேற வேண்டும் என்றால் உள்நாட்டு தொழில் நிறுவனங்களின் தயாரிப்புத் திறனில் 80% முதல் 90% வரை பயன்படுத்தப்பட்டாக வேண்டும். இப்போது நமக்குத் தேவைப்படும் மூல இயந்திரங்களில் சுமார் 45% இறக்குமதி மூலம்தான் பெறப்படுகிறது. இப்போது உள்நாட்டு இயந்திரங்களின் நிறுவுதிறனில் 60% முதல் 70% வரையில்தான் உற்பத்திக்குப் பயன்படுத்திக் கொள்ளப்படுகிறது.
இந்த இலக்குகள் அனைத்தும் திட்டமிட்டபடி நிறைவேற வேண்டும் என்றால் மூல இயந்திரங்களை உற்பத்தி செய்யும் இந்திய நிறுவனங்கள் சர்வதேச நிறுவனங்களுடன் போட்டி போடும் அளவுக்குத் தங்களைத் தரம் உயர்த்திக்கொள்ள வேண்டும். விலை அதிகமாக இருந்தால் உற்பத்திச் செலவு பலமடங்காகும். ஏற்கெனவே வெளிநாட்டில் தயாரிப்பில் இருந்த இயந்திரத்தை இரண்டாவது பயன்பாட்டுக்கு இறக்குமதி செய்வது, இயந்திரத்துக்கு உள்நாட்டில் சில கருவிகளைச் சேர்த்து அதன் பயன்பாட்டைக் கூட்டுவது தொடர்பாக இந்தக் கொள்கை சில முடிவுகளை எடுத்திருக்கிறது. இவ்விரு செயல்களும் குறுகிய கால நோக்கில் மேற்கொள்ளப்படுபவை என்பதை மறக்கக்கூடாது.
உள்நாட்டுத் தொழில்துறை வளர வேண்டும் என்றால் வரி அமைப்பும் நிர்வாகமும் நீண்ட காலத்துக்கு நிலையானதாக இருக்க வேண்டும். இப்போது முழுக்க தயாரிக்கப்பட்ட பண்டங்கள் மீது தீர்வை குறைவாகவும், உதிரிகள் அல்லது பாதி தயாரிப்பு முடிந்த நிலையில் உள்ள பண்டங்களுக்கு அதிகமாகவும் இருக்கிறது. உடனடியாகச் சரி செய்யப்பட வேண்டிய விஷயம் இது. இறக்குமதியாகும் எல்லா மூல இயந்திரங்கள் மீதும் ஒரே விகிதத்தில் சுங்க வரி விதிக்கப்படுகிறது. இதேபோல பொதுச் சரக்கு, சேவை வரியும் ஒரே விகிதத்தில் விதிக்கப்பட வேண்டும். அதற்கு அரசியல் கட்சிகளிடையே பொதுக்கருத்து எட்டப்பட வேண்டும். அரசு நம்பிக்கையுடன் இருந்தாலும் நாடாளுமன்றத்தில் நிறைவேறும்வரை எதுவும் நிச்சயம் இல்லை. எனவே, இந்தக் கொள்கையைச் சாத்தியமாக்கும் அளவுக்கு ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ள வேண்டியது அவசியம்!
