

பொதுப் போக்குவரத்துக்கு ஓங்கி ஓர் அடி தரும் தீர்ப்பை வழங்கியிருக்கிறது உச்ச நீதிமன்றம். "நாட்டின் பொருளாதாரம் மோசமான நிலையில் இருப்பதாலும் கச்சா பெட்ரோலிய எண்ணெய் சர்வதேசச் சந்தையில் விலை கொடுத்து வாங்கப்படுவதாலும் ரயில்வே துறை, மாநில அரசுப் போக்குவரத்துக் கழகங்கள் போன்ற அரசுப் போக்குவரத்து நிறுவனங்களுக்கு மானிய விலையில் டீசல் வழங்க முடியாது" என்று திட்டவட்டமான குரலில் தெரிவித்திருக்கிறது. இது தொடர்பாகப் பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் எடுத்த முடிவுக்கு சென்னை உயர் நீதிமன்றமும் கேரள உயர் நீதிமன்றமும் விதித்த இடைக்காலத் தடையாணைகளை ரத்துசெய்தும் அது உத்தரவிட்டுள்ளது.
மொத்த விலைக்கு வாங்கும் பெரிய வாடிக்கையாளர்களுக்கு விலையில் சலுகை தருவதுதான் வியாபார நடைமுறை. ஆனால், அதிக அளவில் டீசல் வாங்கும் அரசுப் போக்குவரத்து நிறுவனங்களிடம் மற்றவர்களைவிட லிட்டருக்கு ரூ.14.50 கூடுதலாக வசூலிக்க எண்ணெய் நிறுவனங்கள் கடந்த ஜனவரியில் முடிவுசெய்தன. அதிர்ச்சி அளிக்கும் இந்த முடிவை எதிர்த்து ஒருபுறம் நீதிமன்றப் படியேறினாலும், மறுபுறம் அரசு பஸ்களை தனியார் பெட்ரோல் நிலையங்களுக்கு அனுப்பி டீசல் நிரப்பி வரச் செய்தன மாநில அரசுகள். உயர் நீதிமன்றங்களின் இடைக்காலத் தடை இந்த இழிநிலைக்கு ஓர் இடைக்கால நிறுத்தத்தைத் தந்திருந்தன. உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்போ, எண்ணெய் நிறுவனங்களின் முடிவுக்குப் பச்சைக்கொடி காட்டுவதுபோல ஆகிவிட்டது.
இந்தத் தீர்ப்பை வழங்கிய உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஆர்.எம். லோதா, மதன் பி. லோகூர் அடங்கிய ‘டிவிஷன் பெஞ்ச்’, "நாட்டின் பெட்ரோலியத் தேவையில் 83% இறக்குமதி மூலம் பூர்த்திசெய்யப்படும் சூழலில், எண்ணெயை மானியத்தில் விற்பது எண்ணெய் நிறுவனங்களுக்கு நிதிச் சுமையை ஏற்படுத்தும்" என்று குறிப்பிட்டுள்ளதோடு, "அரசுப் போக்குவரத்து நிறுவனங்கள் தங்களுடைய நிதி நிலையை மேம்படுத்த நிர்வாகத்தைச் சீர்படுத்த வேண்டும்" என்றும் அறிவுறுத்தியுள்ளனர்.
அரசு நிறுவனங்களைச் சீர்படுத்துங்கள் என்கிற வார்த்தைகளுக்குப் பின்னுள்ள அர்த்தம் காலங்காலமாக நாம் அறிந்ததுதான்: வண்டியை லாப நோக்கை நோக்கித் திருப்புங்கள். முரண்பாடு என்னவென்றால், அரசுப் போக்குவரத்து நிறுவனங்களை நஷ்டப்படுத்தும் ஒரு விஷயத்தில் எண்ணெய் நிறுவனங்களின் நலனுக்குத் தீர்ப்பளித்துவிட்டு இப்படிப்பட்ட அறிவுரையை உச்ச நீதிமன்றம் தெரிவிப்பது.
உலகெங்கும் தனியார்ப் போக்குவரத்தைக் கட்டுப்படுத்தி, பொதுப் போக்குவரத்தை ஊக்குவிக்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் சூழலில், பொதுப் போக்குவரத்து அழுத்தப்படுவது இந்தியாவில் மட்டுமே சாத்தியம்.
எல்லோருமே முன்னோக்கி ஓடும்போது நாம் மட்டும் பின்னோக்கி ஓடுகிறோமே ஏன்?