யோக்கியவான் போட்டி!

யோக்கியவான் போட்டி!
Updated on
1 min read

டெல்லியின் ஐந்தாவது சட்டப்பேரவையின் தலைவிதி உறுதியாகிவிட்டது - குடியரசுத் தலைவர் ஆட்சி.

பொதுவாக, ஆறு மாதங்களுக்குள் தேர்தல் நடத்தப்பட வேண்டும்; அதிகபட்சம் ஓராண்டு வரை இந்தக் கால அவகாசத்தை நீட்டிக்கலாம் என்பது விதி. மக்களவைத் தேர்தல் அடுத்த சில மாதங்களில் நடைபெறவிருக்கும் நிலையில், அதோடு சேர்த்து டெல்லி சட்டப்பேரவைக்கும் தேர்தல் நடத்தப்படும். அதாவது, 11,573 வாக்குச்சாவடிகள், 810 வேட்பாளர்கள், அவர்களுக்கு வாக்களித்த 78.54 லட்சம் வாக்காளர்கள், பாதுகாப்புப் பணியில் ஈடுபட்ட 32,801 காவலர்கள் - 107 கம்பெனி துணை ராணுவப் படையினர், தேர்தல் பணியில் ஈடுபட்ட பல நூறு அலுவலர்கள் - சில ஆயிரம் தொண்டர்கள், அரசு சார்பிலும் அரசியல் கட்சிகள் சார்பிலும் கணக்குக்கு உட்பட்டும் கணக்குக்கு அப்பாற்பட்டும் செலவிடப்பட்ட பல கோடிகள், மனித ஆற்றல் யாவும் வீண்!

மக்களவைத் தேர்தல் இப்போது வரவில்லை என்றால், நாம் பார்க்கவிருக்கும் காட்சி வேறாக இருந்திருக்கும். ஆனால், தேர்தல் நெருங்கும் சூழலில், டெல்லி காட்சிகள் டெல்லியைத் தாண்டியும் பிரதிபலிக்கும் என்பதால், எல்லோருக்கும் ‘யோக்கியவான் பாத்திரம்’ தேவைப்படுகிறது.

காங்கிரஸ் முற்றிலுமாக மூழ்கிவிட்டது; முதலிடம் பிடித்திருந்தாலும், ஆம் ஆத்மி, காங்கிரஸ் ஆகிய இரு கட்சிகளின் ஆதரவும் கிடைக்க வாய்ப்பில்லாத நிலையில் பா.ஜ.க. நிலைகுத்தி நிற்கிறது. ஆம் ஆத்மி கட்சிக்கு ஒரு வாய்ப்பு கிடைத்தது. காங்கிரஸ், பா.ஜ.க. இரு கட்சிகளும் அளிப்பதாகச் சொன்ன நிபந்தனையற்ற ஆதரவை - இதுவும் ‘யோக்கியவான்’ பாத்திரத்துக்கான முயற்சிதான் என்றாலும் - ஆம்ஆத்மி ஆக்கபூர்வமான முறையில் அணுக முயற்சித்திருக்கலாம்.

பா.ஜ.க-விடமிருந்தும் காங்கிரஸிடமிருந்தும் விலகி இருப்பது என்ற அரவிந்த் கெஜ்ரிவாலின் முடிவில் நியாயம் இருப்பதை மறுப்பதற்கில்லை. ஆட்சியில் எந்தப் பங்கும் இல்லாதவர்களின் ஆதரவு நம்ப முடியாததுதான். ஆனால், வழக்கமான அரசியலுக்குத் தாங்கள் காட்டும் எதிர்ப்பானது, மக்களுக்கு நல்ல அரசு தருவதற்கும் அதன் மூலம் தங்கள் செயல்திட்டங்களை முன்னெடுப்பதற்கும் முட்டுக்கட்டையாக அமைந்துவிடக் கூடாது என்பதிலும் கெஜ்ரிவால் கவனம் செலுத்தியிருக்க வேண்டும். நிபந்தனைக் கடிதம் அனுப்பிய அவருடைய வியூகம் சரி. ஆனால், மற்ற கட்சிகளிலிருந்து வேறுபட்டவர்கள் என்று காட்டிக்கொள்ளும் வகையில் நிபந்தனைகளை முற்றிலுமாக அரசியல் வியூகத்தோடு மட்டும் உள்ளடக்கியதன் மூலம் மற்றவர்கள்போல தானும் ஓர் ‘அரசியல்வாதி’என்று காட்டியிருக்கிறார் கெஜ்ரிவால்.

வெவ்வேறு கொள்கைகள், முழக்கங்கள், லட்சியங்கள், அணுகுமுறைகள் எல்லாவற்றையும் தாண்டி அரசியல்வாதிகளிடம் மக்கள் எதிர்பார்க்கும் அடிப்படைப் பண்பு ஒன்றுதான் - பொதுநல அக்கறை. அது பலியிடப்படும்போது முந்தையவை யாவும் பலவீனப்பட்டுவிடுகின்றன.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in