

உலக சுகாதார அமைப்பின் புற்றுநோய் ஆராய்ச்சிக்கான சர்வதேச முகமையின் சமீபத்திய அறிக்கை ‘‘புற்றுநோயை உருவாக்குவதில் அசுத்தக் காற்றில் கலந்துள்ள மாசுக்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன” என்கிறது.
“இதுநாள் வரை வெளிப்புறக் காற்றில் மாசு இருப்பதை மட்டுமே தெரிந்துவைத்திருந்தோம்; இப்போதோ அதுதான் புற்றுநோயை ஏற்படுத்துகிறது என்பதும் தெரியவந்துள்ளது. காற்றில் கலக்கும் தூசும், பெட்ரோலியப் பொருட்களின் புகையும் ஆலைகள் வெளியேற்றும் ரசாயனப் புகையும் நச்சுகளாக மாறி, உள்ளிழுக்கும் மூச்சுக்காற்றின் வழியாக உடலுக்குள் சென்று இதயம், நுரையீரல் போன்றவற்றைப் பாதிப்பதுடன் புற்றுநோயையும் ஏற்படுத்துகிறது. புகையிலை, புறஊதாக் கதிர்வீச்சு, புளூட்டோனியம் ஆகியவற்றின் மூலம் ஏற்படும் அளவுக்கு இணையான அபாய காரணிகள் காற்றில் - குறிப்பாக நகர்ப்புறங்களில் - நிறைய இருக்கின்றன” என்கிறார் புற்றுநோய் அதிகரிப்புக்கான காரணங்களைக் கண்டறியும் ஆய்வுக்குழுத் தலைவர் குர்ட் ஸ்ட்ரெய்ப்.
கடந்த 2010-ல் மட்டும் உலகம் முழுவதும் மாசுபட்ட காற்றைச் சுவாசித்து, புற்றுநோயால் பாதிக்கப்பட்டு 2.23 லட்சம் பேர் இறந்திருக்கின்றனர். அதாவது, எந்தக் கெட்ட பழக்கமும் இல்லாமல், மாசுக் காற்றைச் சுவாசித்த பாவத்துக்காகவே புற்றுநோய் மரணத்துக்கு ஆளானவர்களின் எண்ணிக்கை இது.
இந்த ஆய்வு கவனிக்க வேண்டிய இரு உண்மைகளை நமக்குச் சுட்டிக்காட்டுகிறது:
1. மக்கள்தொகை அதிகம் உள்ள நகரங்களிலும் தொழிற்சாலைகள் அதிகம் உள்ள நகரங்களிலும் புற்றுநோயின் தாக்கம் அதிகமாக இருப்பது. 2. காற்று நஞ்சாவதில் வாகனப் பெருக்கத்துக்கு உள்ள பங்கு.
முதல் உண்மைக்கு அரசும் தொழிற்துறையும் பொறுப்பாளி என்றால், இரண்டாவது உண்மைக்கு அரசும் நாமும் பொறுப்பாளி.
தமிழகத்தையே எடுத்துக்கொண்டால், ஒவ்வொரு நாளும் வாகனங்களின் எண்ணிக்கை தாறுமாறாக உயர்கிறது. மாநிலத்தில் 1.75 கோடி வாகனங்கள் இருக்கின்றன. கடந்த 10 ஆண்டுகளில் கார்களின் எண்ணிக்கை மட்டும் 95.5% கூடியிருக்கிறது. சென்னையை எடுத்துக்கொண்டால், 1992-ல் ஆறு லட்சம் வாகனங்கள் இருந்த நகரம் இது; 2001-ல் 13 லட்சம்; இப்போதோ 36.4 லட்சம். சென்னை நகரில் 70%-க்கும் மேற்பட்டவர்கள் பொதுப் போக்குவரத்தைப் பயன்படுத்த வேண்டும்; 2001-ல் 51.8% பேர் பொதுப்போக்குவரத்தைப் பயன்படுத்தினர்; 2011-ல் இந்த எண்ணிக்கை 39% ஆகக் குறைந்துவிட்டது.
வளர்ச்சி அல்லது தேவை என்கிற வார்த்தைகளைக் காரணங்களாக்கி நாம் சமாளிக்கலாம். நச்சுக் காற்றால் ஆண்டுக்கு 13 லட்சம் பேர் இறக்கின்றனர்; 2.5 லட்சம் பேர் நுரையீரல் புற்றுநோயால் இறக்கின்றனர். சல்பேட்டுகள், நைட்ரேட்டுகள், அம்மோனியா, சோடியம் குளோரைடு, கார்பன் தூசு, கனிம தூசு, ஆர்சனிக், காட்மியம், நிக்கல், பாதரசம்… இவ்வளவும் கலந்ததாக மாறிவிட்டது நாம் சுவாசிக்கும் மூச்சுக்காற்று. இதைத் தேவை என்றோ, வளர்ச்சி என்றோ சொல்ல முடியாது அல்லவா?