

புதிய விமானப் போக்குவரத்துக் கொள்கையை மத்திய அரசு அறிவித்திருக்கிறது. இதைப் பெரும்பாலும் எல்லோரும் வரவேற்றுள்ளனர். அதேசமயம், அறிவித்ததைவிட அறிவிக் காமல் விட்ட சில அம்சங்கள் குறித்த எதிர்பார்ப்பும் இத்துறையைச் சேர்ந்தவர்களிடம் இருக்கிறது.
உள்நாட்டு விமானப் போக்குவரத்தை ஊக்குவிக்க வேண்டும்; இந்தியாவின் பெருநகரங்கள் மட்டுமல்லாமல், சிறுநகரங்களும் விமானப் போக்குவரத்து மூலம் இணைக்கப்பட வேண்டும். சுற்றுலா, புனித யாத்திரைத் தலங்கள் அதிகப் பயணிகளை ஈர்க்க வேண்டும் எனும் நோக்கத்தில் புதிய கொள்கை வகுக்கப்பட வேண்டும் என்பது நீண்ட நாள் வலியுறுத்தலாக இருந்தது. பாஜக அரசின் புதிய கொள்கை இதைக் கவனத்தில் எடுத்துக்கொண்டிருக்கிறது. அதேசமயம், தொலைநோக்கில் பார்க்கும்போது அது முழுமை பெறவில்லை. ஒரு உதாரணம், ஒரு மணி பயண நேரத்துக்கும் குறைவான தொலைவில் உள்ள உள்நாட்டுப் போக்குவரத்து சேவைக்கு அதிகபட்சம் ரூ.2,500 வசூலிக்கப்பட வேண்டும் என்கிறது புதிய கொள்கை. இது நடுத்தர வர்க்கத்தினரையும் மற்றவர்களையும் விமான சேவையை நோக்கி இழுப்பதற்கான உத்திகளில் ஒன்று. ஆனால், இதையே மையமாக வைத்து 2022-க்குள் உள்நாட்டுப் பயணிகளின் எண்ணிக்கை மும்மடங்காக உயர்ந்துவிடும் என்று அரசு எதிர்பார்ப்பது மிகையாகத் தெரிகிறது.
புதிய விமான நிலையங்களையும் விமான சேவையையும் தேர்வுசெய்யும்போது அரசியல்ரீதியிலான கண்ணோட்டத்துக்கு இடம் தரக் கூடாது. எந்த நகருக்குப் பயணிகள் எண்ணிக்கை அதிகமாக இருக்குமோ, எங்கு தேவைப்படுகிறதோ அங்கு சேவையை நடத்த அனுமதிக்க வேண்டும். விமான சேவையில் 5 ஆண்டுகள் அனுபவம் இருக்க வேண்டும், சொந்தமாக 20 விமானங்களை வைத்திருக்க வேண்டும். அப்படியிருந்தால்தான் வெளிநாடுகளுக்கு விமான சேவையை நடத்த அனுமதிக்க முடியும். இப்படியெல்லாம் முந்தைய விமானப் போக்குவரத்துக் கொள்கை கூறியது. இப்போதைய கொள்கை 20 விமானங்கள் சொந்தமாக இருந்தால் போதும் என்று கூறுகிறது. நல்ல விஷயம்.
விமான உற்பத்தி தொடர்பான நிலையங்களை ஏற்படுத்தினால், அதற்கு சிறப்புப் பொருளாதார மண்டல அந்தஸ்தை வழங்கி, வரிச் சலுகை தரவும் தயார் என்று அரசு அறிவித்திருக்கிறது. இந்த அறிவிப்பு மட்டுமே பெரிய ஊக்குவிப்பாக இருக்கும் என்று கூறிவிட முடியாது. மேலதிக நடவடிக்கைகள் தேவை. விமானப் பயன்பாட்டுக் கட்டணத்தைக் குறைத்து, விமானப் போக்குவரத்துக்கான கட்டணத்தையும் குறைக்க உதவுவதாக அரசு அறிவித்துள்ளது. முயற்சித்துப் பார்க்கலாம்.
உள்நாட்டு விமானப் போக்குவரத்தை ஊக்குவிக்க சிவில் விமானப் போக்குவரத்து ஆணையம் என்ற சுயேச்சையான தனி நிறுவனத்தை அரசு ஏற்படுத்த வேண்டும், ஏர்-இந்தியா விமானத்தைத் தனியார்மயமாக்க வேண்டும் என்றெல்லாம்கூடப் பலர் பேசுகின்றனர். அரசு நிதானத்துடன் அணுக வேண்டிய விஷயங்கள் இவை. அரசு ஏற்படுத்தும் அமைப்புகளையும் சேவைகளையும் பயன்படுத்தி தனியார் கோலோச்சவும் பயணிகள் பாதிக்கப்படவுமான சூழல் உருவாகிவிடக் கூடாது. தனியாருக்கும் ஊக்குவிப்பு வேண்டும், மக்களுக்கும் சேவை விரிவுபடுத்தப்பட வேண்டும். அது தரமானதாகவும், செலவு குறைந்ததாகவும் இருக்க வேண்டும் என்பதே நோக்கமாக இருக்க வேண்டும். விமான சேவை வெற்றி பெறுவதில் மாநில அரசுகளுக்கும் பங்கு இருக்கிறது. இரு அரசுகளும் சேர்ந்து சிந்தித்தால் விமான சேவை மேலும் உயரம் தொடும்!