

அமெரிக்காவின் ஃபுளோரிடா மாகாணத்தின் ஆர்லாண்டோ நகரில் துப்பாக்கி ஏந்திய இளைஞர் ஒருவர் நடத்திய திடீர் தாக்குதலில் 50 பேர் உயிரிழந்த சம்பவம் உலகம் முழுக்க அதிர்வுகளை உண்டாக்கியிருக்கிறது. தாக்குதலில் ஈடுபட்ட ஒமர் மடீனும் போலீஸாரால் சுட்டுக்கொல்லப்பட்டுவிட்டதால், இந்தப் படுகொலைக்கான காரணங்கள், பின்னணிகள் உடனடியாக, முழுமையாகத் தெரியவரவில்லை என்றாலும், இரு விஷயங்கள் குற்றத்தின் பின்னணியைத் தெளிவாகச் சுட்டுகின்றன.
1. அமெரிக்காவின் துப்பாக்கிக் கலாச்சாரம்.
2. தன்பாலினச் சேர்க்கையாளர்கள் மீதான வெறுப்பு.
இத்தாக்குதலை நடத்திய ஒமர் ஆப்கனிலிருந்து குடியேறிய பெற்றோ ருக்குப் பிறந்தவர். தாக்குதலுக்குள்ளான இடம் தன்பாலினச் சேர்க்கையாள ருக்கான ‘பல்ஸ் இரவு விடுதி’. இந்தக் கொடூரத்தை நிகழ்த்தும் முன் அவசரத் தேவைக்கான 911 எண்ணைத் தொடர்புகொண்ட ஒமர், தன்னை ஐஎஸ் அமைப்பின் விசுவாசி என்று அறிவித்துக்கொண்டிருக்கிறார்.
அமெரிக்க உச்ச நீதிமன்றமே தன்பாலினச் சேர்க்கையாளர்களின் திருமணம் செல்லும் என்ற வரலாற்றுத் தீர்ப்பை அளித்துவிட்டாலும்கூட, பலருக்கு அத்தகைய பந்தம் ஏற்றுக்கொள்ள முடியாததாகவே இருக்கிறது. இதற்கான முக்கிய காரணங்களில் ஒன்று பழமைவாத மனநிலை. மத அடிப்படைவாத அமைப்புகளின் சித்தாந்தங்களில் சிக்குபவர்கள் இயல்பாகவே பழமைவாத மனநிலையிலும் சிக்குண்டுகொள்கிறார்கள்.
தன்பாலினச் சேர்க்கையாளர்கள் கூடும் இரவு விடுதிக்குச் சென்ற ஒமர், ஏராளமானோரைச் சுட்டுக் கொல்வதற்குத் தயாராக நீண்ட குழல் துப்பாக் கியையும் கைத்துப்பாக்கியையும் மறைத்து எடுத்துக்கொண்டு சென்றிருக் கிறார். வெறுப்பை மூலதனமாக்கிக்கொண்டவர்களிடம் நவீனத் துப்பாக்கிகள் கிடைத்தால் விளைவு எப்படி இருக்கும் என்பதற்கு இது முதல் உதாரணம் அல்ல. அப்படியிருந்தும் அமெரிக்க ஆட்சியாளர்களால் துப்பாக்கி வைத்தி ருப்பதற்கான சட்டத்தைத் திருத்த முடியவில்லை. பராக் ஒபாமா அதிபரான பிறகு, தனியொரு நபர் துப்பாக்கியைக் கொண்டு அப்பாவிகளான நிராயுதபாணிகளைச் சுட்டுக்கொல்லும் 16-வது சம்பவம் இது.
அமெரிக்காவில் குறைந்தபட்சம் ஒவ்வொருவருக்கும் ஒரு துப்பாக்கி என்ற எண்ணிக்கையில் துப்பாக்கிகள் புழக்கத்தில் இருக்கின்றன. வீட்டில் இருக்கும் குண்டு நிரப்பப்பட்ட கைத்துப்பாக்கியை விளையாட்டுப் பொருளாகக் கருதி தன்னுடைய தம்பி - தங்கைகளைச் சுட்டுவிடும், குழந்தைகள் தன்னையே சுட்டுக்கொள்ளும் சம்பவங்கள் பல நடந்து விட்டன. எனினும், துப்பாக்கி நிறுவனங்களின் லாபியைத் தாண்டி அரசியல் வாதிகளால் ஒன்றும் செய்ய முடியவில்லை. துப்பாக்கி வியாபாரிகளின் தேசிய ரைஃபிள்கள் சங்கத்தின் அரசியல் செல்வாக்கு அப்படி!
அமெரிக்க அதிபர் தேர்தலுக்கான முன்னேற்பாடுகளும் பிரச்சாரங்களும் உச்சம் தொட்டுவரும் நிலையில், அமெரிக்க அரசியல் கட்சிகள் பேச வேண்டிய அல்லது இனியும் தவிர்க்க முடியாத ஒரு பிரச்சினையை ஆர்லாண்டோ படுகொலை சுட்டிக்காட்டுகிறது. ஹிலாரி கிளின்டனும், டொனால்ட் டிரம்பும் இனியும் இந்த விஷயத்தில் வாய் மூடியிருக்க முடியாது. துப்பாக்கிகள் பயன்பாட்டை முடக்காமல், தனிப்பட்ட நபராகப் படுகொலைகளில் ஈடுபடுகிறவர்களைக் காவல் துறை அடையாளம் காண்பதும் கண்காணிப்பதும் சாத்தியமற்ற செயல்.
அமெரிக்க ஊடகங்கள் வெளியிடும் பல்வேறு செய்திகள் இந்தச் சம்பவத்தை ஐஎஸ், மத அடிப்படைவாத இயக்கத் தொடர்பு, இஸ்லா மியர்கள் மீதான சந்தேகக் கண்ணோட்டம் எனும் கோணத்தை நோக்கி பொதுச் சமூகத்தைத் தள்ளுகின்றனவோ எனும் எண்ணத்தை உருவாக்குகின்றன. இந்தச் சம்பவத்தைப் பொறுத்த அளவில் பிரதான கவனம் அளிக்கப்பட வேண்டியதும், விவாதத்தில் கூடுதலான இடம் அளிக்கப்பட வேண்டியதும் அமெரிக்காவின் துப்பாக்கிக் கலாச்சாரமும் துப்பாக்கி நிறுவனங்களின் லாபியும் அமெரிக்க அரசியல்வாதிகளின் பொறுப்பற்றத்தனமுமே. நிதானமாகவும் உறுதியாகவும் அமெரிக்க அரசும் அரசியல்வாதிகளும் செயல்பட வேண்டிய தருணம் இது!