

தமிழ்நாடு அரசு நிறுவனமான ஆவின், பால் விலையை லிட்டருக்கு ரூ.10 என்று உயர்த்தியிருப்பதை எந்த விதத்திலும் நியாயப்படுத்தவே முடியாது. பசும்பால் கொள்முதல் விலையை லிட்டருக்கு ரூ. 23-லிருந்து ரூ. 28 ஆகவும் எருமைப்பால்
கொள்முதல் விலையை லிட்டருக்கு ரூ. 31-லிருந்து ரூ. 35 ஆகவும் அரசு உயர்த்தியிருக்கிறது. இதனால் 22.5 லட்சத்துக்கும் மேற்பட்ட பால் உற்பத்தியாளர்கள் பலனடைவார்கள் என்று அரசு கூறுகிறது. பால் உற்பத்தியாளர்கள் பலன் அடைவதை யாரும் வேண்டாம் என்று கூறவில்லை. அந்தச் சுமையை விலைவாசி உயர்வால் ஏற்கெனவே விழிபிதுங்கியிருக்கும் நுகர்வோர் தலை மீது சுமத்துவானேன் என்றுதான் கேட்கிறோம்.
காலத்தின் போக்கில் கால்நடை வளர்ப்பு பெரும் சவாலாகி இருப்பதும் கால்நடைகளுக்கான பசுந்தீவனம், உலர் தீவனம், இதர இடுபொருட்களின் விலை உயர்ந்திருப்பது உண்மை. நிச்சயம் நம்முடைய விவசாயிகள் துயரப்படுவதை நாம் வேடிக்கை பார்க்க முடியாது. ஆனால், அவர்களுக்கான ஆதரவு விலையை அரசாங்கம் ஏன் நேரடியாக மக்கள் தலையில் ஏற்றுகிறது என்பதே கேள்வி. கவனிக்க வேண்டிய இன்னொரு விஷயம், விவசாயி களுக்கான கொள்முதல் விலையை லிட்டருக்கு ரூ. 5 மட்டுமே அரசு ஏற்றியிருக்கிறது; ஆனால், விற்பனை விலையையோ ரூ. 10 ஏற்றியிருக்கிறது. இடைப்பட்ட ரூ. 5 எதற்காக? ஊழலும் முறைகேடு களும் பொறுப்பற்றதனமும் நிரம்பிய ஆவின் நிறுவனத்தின் தவறுகளுக்கு மக்கள் அளிக்க வேண்டிய மொய்யா? இனி, ஆவின் பால் விலை உயர்வையே காரணம் காட்டி, ஏனைய தனியார் நிறுவனங்களும் பால் விலையை ஏற்றுமே, அதற்கு என்ன நியாயம் அரசின் கைகளில் இருக்கிறது?
இப்படியான விலை உயர்வுகளின்போதெல்லாம், “பிற மாநிலங் களில் விற்கப்படும் பாலின் விலையைவிட நம் மாநிலத்தில் உயர்த்திய பிறகும் விலை குறைவாகவோ, சமமாகவோ இருக்கிறது” என்று பேசுவோரின் நைச்சியம் வேதனையையும் கோபத்தையும் உருவாக்குகிறது. பால் வாங்கி டீ போடக் காசில்லாமல், ஒரு பார்சல் டீயை வாங்கிக் குடும்பத்தின் அத்தனை பேரும் பகிர்ந்து குடித்துவிட்டு, காலை உணவே இல்லாமல் அவரவர் வேலைக்குப் புறப்படும் குடும்பங்கள் மட்டும் பல்லாயிரக் கணக்கில் இங்குண்டு. ஒரு மக்கள்நல அரசு இப்படிப்பட்ட விஷயங்களையெல்லாம் கணக்கில் எடுத்துக்கொண்டுதான் செயல்பட வேண்டும். ஏனைய மாநிலங்கள் அடாவடியாக நடந்துகொள்கின்றன என்பதாலேயே நம்முடைய மாநிலமும் அப்படி நடந்துகொள்ள வேண்டும் என்பது அல்ல.
ஒருகாலத்தில் நம் ஊரில் நகரங்களில்கூட கால்நடைகள் மேய்ச்சலுக்கு என்று பொது இடங்கள் ஒதுக்கப்பட்டிருந்தன. நல்ல பால் விநியோகத்துக்காகப் பல நகராட்சி அமைப்புகள் பால் கூட்டுறவுச் சங்கங்களை அமைத்தன. கால்நடை வளர்ப்போருக்கு உதவியாக கால்நடைகளுக்குப் புல் வளர்த்து, மலிவான விலையில் புல் கட்டுகள் கொடுத்தன. வெகு நீண்ட காலம் கால்நடை வளர்ப்போரும் பாதிக்கப் படாமல், மக்களும் பாதிக்கப்படாமல் நல்ல பால் விநியோகம் நடந்தது, இப்படியான பொறுப்பான நடவடிக்கைகளால்தான். விலைவாசியைக் கட்டுப்பாட்டில் நிர்வகிப்பது என்பது ஒரு கலை. அரசின் கஜானாவுக்கும் பங்கம் வரக் கூடாது; மக்களும் பாதிக்கப்படக் கூடாது. ஒரு மக்கள்நல அரசு தொலைநோக்கோடு சிந்திக்க வேண்டும்!