காஷ்மீரின் தேவை தொடர் செயல்பாடு!

காஷ்மீரின் தேவை தொடர் செயல்பாடு!
Updated on
2 min read

காஷ்மீர் மீண்டும் கொந்தளிக்க ஆரம்பித்திருக்கிறது. அனந்த்நாக் மாவட்டத்தின் கோக்கர்நாக் பகுதியில் ஹிஜ்புல் முஜாஹிதீன் அமைப்பைச் சேர்ந்த புர்ஹான் வானி (22) உள்ளிட்ட மூவர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்தின் தொடர்ச்சி இது. 2010-ல் உள்ளூர் இளைஞர்கள் மூன்று பேர் போலி என்கவுன்டரில் கொல்லப்பட்ட சம்பவத்தைத் தொடர்ந்து நடந்த போராட்டத்தில் 100-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். அச்சம்பவத்தின்போதே, நிலைமையைக் கட்டுப்படுத்த உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்தது. இப்போதைய அனுபவங்கள் அதன் அடுத்த பதிப்புபோல அமைந்திருக்கின்றன.

காஷ்மீரின் இளம் தலைமுறை அதிருப்தியாளர்களின் ஆதர்சமாக வானி இருந்திருப்பது, அவரது மரணத்துக்குப் பிந்தைய போராட்டங்களின் மூலம் தெரியவருகிறது. தெருக்களில் பாதுகாப்புப் படையினருடனான மோதல்களில் ஆண்களுடன் பெண்களும் ஈடுபட்டிருக்கிறார்கள். இதுவரை முப்பதுக்கும் மேற்பட்ட உயிர்கள் போயிருக்கின்றன. மேலும் பலர் கடுமையாகப் பாதிக்கப்படுகின்றனர்.  நகரில் உள்ள  மகாராஜா ஹரி சிங் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் 87 பேரில், சுமார் 40 பேருக்குக் கண்ணில் காயம் ஏற்பட்டிருக்கிறது. இவர்களில் பாதிக்கும் மேற்பட்டோருக்குப் பார்வை திரும்ப சாத்தியமில்லை என்று மருத்துவர்கள் தெரிவித்திருக்கிறார்கள். உடனடியாக, கண் சிகிச்சை நிபுணர்களைக் காஷ்மீருக்கு அனுப்பியிருக்கும் மத்திய அரசின் நடவடிக்கை பாராட்டத் தக்கது. ஆனால், இத்தனை உயிரிழப்புகள், காயங்கள், பார்வையிழப்புகள் போன்றவற்றைப் பார்க்கும்போது, போராட்டத்தைக் கட்டுப்படுத்தும் விஷயத்தில், மனித உயிர்கள் மீது போலீஸார் எந்த அளவுக்கு அக்கறை கொண்டிருக்கின்றனர் என்ற கேள்வி எழுகிறது.

2010-ல் காஷ்மீரில் நடந்த போராட்டங்களின்போது அதைக் கட்டுப்படுத்த போலீஸார் நடத்திய துப்பாக்கிச் சூடு சம்பவங்களில் பலர் உயிரிழந்தனர். இதையடுத்து, அங்கு கொண்டுவரப்பட்ட கட்டுப்பாட்டு நடைமுறைகள் தொடர்பான கேள்விகள் தற்போது எழுந்திருக்கின்றன. 2010 சம்பவங்களுக்குப் பிறகு, போராட்டக்காரர்களைக் கலைக்க, உயிருக்குச் சேதம் விளைவிக்காதவை என்று சொல்லப்பட்ட ‘பெல்லெட்’ வகை குண்டுகளைப் பயன்படுத்த முடிவெடுக்கப்பட்டது. ஆனால், ஆயுதங்களை உரிய முறையில் பயன்படுத்தினால்தான் உயிரிழப்புகளைத் தடுக்க முடியும். அந்த விஷயத்தில் பாதுகாப்புப் படைகள் தோல்வியடைந்துவிட்டன என்பது தற்போது நடந்துவரும் போராட்டங்களில் நூற்றுக்கணக்கானோருக்கு ஏற்பட்டிருக்கும் படுமோசமான காயங்கள் நிரூபிக்கின்றன. கலவரத்தில் ஈடுபடுபவர்களைக் கட்டுப்படுத்த ‘பெல்லெட்’ ரகத் துப்பாக்கிகளைப் பயன்படுத்தி, முழங்கால்களுக்குக் கீழே சுடுவதற்குத்தான் பல நாடுகளில் பயிற்சி அளிக்கப்படுகின்றன. அங்கெல்லாம் அதுதான் நடைமுறை. போதுமான பயிற்சியின்மையும் வழிநடத்துவதில் உள்ள கோளாறுகளும் இவ்விவகாரத்தின் மூலம் மீண்டும் வெளிப்பட்டிருக்கின்றன.

ஓரிடத்தில் கலவரம் நடக்கும்போது, வன்முறைக் கும்பலைக் கட்டுப்படுத்துவதும் வன்முறையாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுப்பதும் முக்கியமானது. அதேசமயம், மனித உயிர்கள் மீதான கரிசனம் முக்கியம். மேலும், இது போன்ற உயிர் சேதங்கள் ஏற்கெனவே எரிகின்ற ஒரு பிரச்சினையில் எண்ணெயை அள்ளிக் கொட்டும் விளைவுகளையே உருவாக்கும் என்பது யாரும் அறியாததும் அல்ல.

வன்முறைப் போராட்டத்தைக் கைவிட உள்ளூர் இளைஞர்களிடம் வலியுறுத்துமாறு எதிர்க்கட்சிகளிடமும், பிரிவினைவாதத் தலைவர்களிடமும் மத்திய மாநில அரசுகள் கேட்டுக்கொண்டிருக்கின்றன. மத்திய அரசு தொடர்ந்து இதுகுறித்து விவாதித்துவருகிறது. இந்த அக்கறையும் கண்காணிப்பும் காஷ்மீரைப் பொறுத்த அளவில் தொடர்ந்து தேவைப்படுகிறது. முக்கியமாக வளர்ச்சியைக் கொண்டுசெல்வதற்கும் அமைதிக்காகப் பேசுவதற்கென்றுமே தொடர் செயல்பாடு அங்கு தேவைப்படுகிறது. காஷ்மீர் ஒரு நாளிலோ அல்லது ஆயுதங்கள் வழியிலோ தீர்த்துவிடக் கூடிய பிரச்சினை அல்ல!

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in