

நீதித் துறையின் பணிச்சுமையைக் குறைக்க தன்னுடைய அரசு தனக்குரிய பங்கை ஆற்றும் என்று அலாகாபாத் உயர் நீதிமன்றத்தின் 150-வது ஆண்டு விழாக் கொண்டாட்டத்தின்போது உறுதியளித்திருக்கிறார் பிரதமர் நரேந்திர மோடி. வரவேற்கத்தக்க, ஆக்கபூர்வமான நடவடிக்கை இது. ‘தேசிய நீதித் துறை நியமனங்கள் ஆணையம்’ மூலமாக உச்ச நீதிமன்ற, உயர் நீதிமன்ற நீதிபதிகளை நியமிப்பதற்கு மத்திய அரசு இயற்றிய சட்டம் செல்லாது என்று உச்ச நீதிமன்றம் ரத்துசெய்ததற்குப் பிறகு இரு தரப்புக்கும் இடையே கருத்து வேறுபாடு வலுத்தது. அந்த மோதல் போக்கு இப்போது முடிவுக்கு வந்துவிடும் என்று தோன்றுகிறது.
தேங்கிக் கிடக்கும் வழக்குகளைக் குறைப்பதில் நீதித்துறையும் நிர்வாகத்துறையும் ஒத்துழைத்துச் செயல்பட வேண்டும். ஆனால் நீதித்துறை நியமனங்கள் தொடர்பாக நீதிபதிகளுக்கும் அரசுக்கும் இடையில் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் காரணமாகத் தொடர்ந்த முட்டுக்கட்டை நாம் அறிந்ததுதான். இந்தச் சூழலில் பிரதமரின் பேச்சு நம்பிக்கையளித்திருக்கிறது. இந்நிகழ்ச்சியில் பேசிய உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி ஜே.எஸ்.கேஹர், வழக்குகளின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டேவருவது குறித்து கவலை தெரிவித்தார். இதயத்திலிருந்து வந்த அவருடைய வார்த்தைகளைப் புரிந்துகொள்வதாகப் பிரதமர் குறிப்பிட்டிருக்கிறார். இதை அவர் எப்படி நிறைவேற்றுகிறார் என்று பொறுத்திருந்தே பார்க்க வேண்டும். இதற்கு முன்னர் உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதிகளாக இருந்தவர்களும் இதே போன்று கவலை தெரிவித்துள்ளனர். சமீபத்தில் ஓய்வுபெற்ற தலைமை நீதிபதி டி.எஸ். தாக்குர் இது தொடர்பாகப் பல முறை பேசியிருக்கிறார். “நீதித்துறையை முடக்கப் பார்க்கிறதா அரசு?” என்று அரசின் தலைமை வழக்கறிஞரிடமே நீதிமன்றத்தில் அவர் காட்டமாகக் கேட்டது இங்கு நினைவுகூரக்கூடியது.
இந்த ஆண்டு மார்ச் 1 நிலவரப்படி மாநில உயர் நீதிமன்றங்களில் மட்டும் மொத்தம் 437 நீதிபதிப் பதவிகள் நிரப்பப்படாமல் உள்ளன. வழக்குகள் தேங்குவதைக் கணிசமாகக் குறைக்க வேண்டும் என்றால் இந்த காலியிடங்களை விரைந்து நிரப்ப வேண்டும். “நீதித் துறை நிர்வாகத்தை டிஜிட்டல்மயமாக்க வேண்டும், வழக்குகளின் நிலுவை, விசாரணை தொடர்பாக நவீனத் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்த வேண்டும்” என்று பிரதமர் மோடி யோசனை தெரிவித்திருக்கிறார். இது நீதித் துறையால் நிச்சயம் பரிசீலிக்கப்பட வேண்டும். இதற்கிடையில் மத்திய அரசும், நீதிபதிகளைத் தேர்வு செய்யும் கொலிஜீயமும், புதிய நியமன நடைமுறை தொடர்பாகக் கருத்தொற்றுமை காண இணங்கியிருப்பதாகத் தகவல்கள் வருகின்றன. இதில் கருத்தொற்றுமை வராததால்தான் கொலீஜியம் தேர்வு செய்பவர்களை அரசு ஏற்பதில் தேக்க நிலை காணப்பட்டது. இருதரப்பும் கலந்து பேசி, நேர்மையும், சட்ட அறிவும், நடுவுநிலையும் நிறைந்த நீதிமான்களை விருப்பு வெறுப்பின்றி தேர்வு செய்து, நீதித்துறையின் மாண்பை நிலைபெறச் செய்ய வேண்டும்!