Published : 24 Jan 2017 08:57 AM
Last Updated : 24 Jan 2017 08:57 AM

வெற்றியை ருசியுங்கள்!

ஒட்டுமொத்த தேசத்தையும் பேசவைத்துவிட்டார்கள் தமிழக இளைஞர்கள். தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டுகளில் ஒன்றான ஜல்லிக்கட்டுக்கு விதிக்கப்பட்ட தடையை எதிர்த்து, மாநிலம் முழுவதும் லட்சக்கணக்கான இளைஞர்கள் திரண்டு நடத்திய போராட்டம், ஒருகட்டத்தில் மக்கள் குடும்பம் குடும்பமாகப் பங்கெடுக்கும் போராட்டமாக உருவெடுத்தது. சென்னை மெரினா கடற்கரையில் 10 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் கூடியது இப்போராட்டத்தின் வலிமைக்குச் சான்று.

இரவு, பகல் பாராமல் நாள் கணக்கில் அறவழியில் நீண்ட போராட்டம் தமிழக அரசைப் போராட்டக்காரர்களின் பக்கம் திருப்பியது. இந்த விவகாரத்தில் தமிழக அரசின் முடிவுக்கு உடன்படுவதைத் தவிர, மத்திய அரசுக்கு வேறு வழியே இல்லாமல் போனது. இரு அரசுகளும் ஆலோசனை கலந்து, சட்ட நடவடிக்கையை முன்னெடுத்திருக்கின்றன. விளைவாக, தமிழக சட்டப்பேரவையில் ஜல்லிக்கட்டு சட்ட மசோதா நிறைவேறியிருக்கிறது. அரசே முன்னின்று ஜல்லிக்கட்டு நடத்தும் முனைப்பிலும் இறங்கியிருக்கிறது.

ஜல்லிக்கட்டு வேண்டும் என்ற ஒற்றைக் கோரிக்கையுடன் தொடங்கிய இப்போராட்டம், அதைத் தாண்டி தமிழர்களின் நலன்களை உள்ளடக்கிய பொது அடையாளமாகவும் உருவெடுத்தது. அத்துடன் பிரதான அரசியல் கட்சிகளின் செயல்பாடுகளால் தமிழ்ச் சமூகத்துக்கு ஏற்பட்டிருக்கும் அதிருப்தியையும் அது பிரதிபலித்தது. அரசியல் கட்சிகள் அனைத்தும் இதிலிருந்து பல படிப்பினைகளைக் கற்றுக் கொள்ள வேண்டிய தேவை உருவாகியிருக்கிறது. அரசியல் களத்தில் நிச்சயம் இது எதிரொலிக்கும். குறிப்பாக, மத்திய - மாநில அரசுகள் இரண்டுமே அதிருப்தியை உணர்ந்திருப்பதால், இனிவரும் காலங்களில் இது தொடர்பில் இரட்டை ஆட்டம் ஆடும் முயற்சிகளில் அவை ஈடுபடாது என்றே தோன்றுகிறது. ஆக, ஜல்லிக்கட்டைத் தாண்டியும் பல்வேறு வகைகளில் பெரிய வெற்றியை அடைந்திருக்கும் போராட்டம் இது.

தொடக்கத்திலிருந்தே அறவழியில், பொதுச் சமூகத்துக்குப் பெரிய அளவில் இடையூறு எதையும் ஏற்படுத்தாமல், சுயகட்டுப் பாட்டுடனும் கண்ணியத்துடனும் இந்தப் போராட்டத்தை முன்னெடுத்த இளைஞர்கள், அதே அழகுடன் போராட்டத்தை முடித்திருந்தால் மேலும் சிறப்பு சேர்ந்திருக்கும். ஆனால், ‘அவசரச் சட்டம் நிரந்தரமில்லை, தற்காலிகமானது’ என்ற கருத்து அவர்களிடையே பரப்பப்பட்டதன் தொடர்ச்சி யாகப் போராட்டத்தைத் தொடரும் முடிவை அவர்கள் எடுத்தார்கள். சில சமூக விரோதச் சக்திகளும் அவர்களி டையே கசப்பு விதைகளைத் தூவ, கசப்பான சில சம்பவங்க ளுக்குப் பின் கடைசியில் காவல் துறையினரின் தொடர் நடவடிக்கைகளுக்கு போராட்டம் உள்ளானது. நாடாளுமன்றத்திலேயே எந்தச் சட்டம் நிறைவேற்றப்பட்டாலும், அது நீதித் துறையின் பரிசீலனைக்கு உட்பட்டதே என்பதை இங்கு சுட்டிக்காட்ட வேண்டியிருக்கிறது.

மக்களுக்கு அளித்த உறுதியை இரு அரசுகளும் காக்க வேண்டும். தமிழக இளைஞர்கள் தங்களுடைய கோரிக்கைக்குக் கிடைத்திருக்கும் வெற்றியை அடுத்து, தங்களுடைய கோரிக்கைகள் உரிய நீதிமன்ற, சட்டமன்ற நடவடிக்கைகளுக்கு அவகாசம் அளிக்க வேண்டும். மனித வதை, மிருக வதை இல்லாமல் பாதுகாப்பாக ஜல்லிக்கட்டு தொடர்ந்து நடப்பதற்கான நடவடிக்கைகளை இரு அரசுகளும் உறுதிசெய்ய வேண்டும். ஜல்லிக்கட்டைத் தாண்டிய மக்களின் அதிருப்திக்குப் பரிகாரம் தேட முனைய வேண்டும்.

பொதுப் பிரச்சினையை முன்னிறுத்தி, அமைதியான ஒன்றுகூடல் மூலம் அரசையும் அரசியல்வாதிகளையும் தங்கள் கோரிக்கைக்குச் செவிசாய்க்கச் செய்வதில் பல புதிய சாத்தியங்களைத் தமிழக இளைஞர்கள் தம் போராட்டத்தின் மூலம் நாட்டுக்குக் காட்டியிருக்கின்றனர். இந்த வெற்றியைக் கொண்டாடி சகஜ வாழ்க்கைக்கு அவர்கள் திரும்ப வேண்டும்!



FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x