

தமிழகத்தின் அரசு மற்றும் அரசியல் வரலாற்றில் புதிய மாற்றம்! இக்கட்டான சூழலில், இரண்டாம் முறையாக முதல்வர் ஆகியிருக்கிறார் ஓ. பன்னீர்செல்வம்.
ஜெயலலிதாவும் அவருடைய சகாக்களும் நீதிமன்றத்தால் குற்றவாளிகள் என்று அறிவிக்கப்பட்ட பிறகு, ஜெயலலிதா முதல்வர் பதவியில் நீடிக்க இயலாத சூழல் ஏற்பட்டு, அவர் சிறைத் தண்டனையும் எதிர்கொண்டிருக்கிறார். இந்தச் சூழலில் நடந்திருக்கிறது இந்த ஆட்சி மாற்றம். முதல்வர் பதவியில் தனக்குப் பதிலாக இன்னொருவரை அமர்த்திய விதம், ஜெயலலிதாவின் நிர்வாகத் திறனுக்கு ஒரு சான்று. கட்சியிலும் ஆட்சியிலும் குழப்பம் ஏதும் நேராமல் அமைதியாக நடந்திருக்கிறது இந்த மாற்றம். அதே சமயம், அவர் நம்பி ஒப்படைத்திருக்கும் நிர்வாகப் பணியை, தங்கள் முன் நிற்கும் பெரும் சவாலை எந்த அளவுக்கு அவருடைய சகாக்கள் உள்வாங்கிக்கொண்டிருக்கிறார்கள் என்பது புரியவில்லை.
தீர்ப்பு வெளியான நிமிடம் தொடங்கி, அதை அதிமுகவினர் எதிர்கொண்ட விதமும் அவர்கள் ஆற்றிய எதிர்வினைகளும், அவர்களின் தலைவிக்குப் பெருமை சேர்ப்பதாக இல்லை. ஒரு வழக்கில் நீதிமன்றம் தீர்ப்பளிக்கும்போது - அது ஏற்புடையதாக இருந்தாலும் சரி; மாறாக அமைந்திருந்தாலும் சரி - சட்டரீதியாகத்தான் அடுத்த கட்டம் நோக்கிப் பயணிக்க வேண்டுமே தவிர, வேறு வழிகளில் அல்ல. கடை அடைப்பு, வாகனங்கள் எரிப்பு, வன்முறைகள் இதுபோன்ற எதிர்வினைகள், ஜெயலலிதாவின் துணிவான, உறுதியான அணுகுமுறைமீது மதிப்பு கொண்டவர்களுக்கும்கூட அதிருப்தியையே உருவாக்கியுள்ளது.
அடுத்து, கர்நாடக உயர் நீதிமன்றத்தில் ஜெயலலிதாவைப் பிணையில் வெளியே எடுப்பதற்கான நடவடிக்கைகள் நடந்துகொண்டிருக்கும் போதே, இங்கு அதிமுகவினர் நடத்தும் கண்டன ஆர்ப்பாட்டங்கள், போராட்டங்கள் எல்லாம் அவர்களின் தலைவிக்கு மேலும் இடைஞ்சல் களை ஏற்படுத்துமே தவிர, எந்த வகையிலும் உதவாது என்பது சட்டத்தின் போக்கை அறிந்தவர்களுக்கு நன்கு புரியும்.
சொத்துக்குவிப்பு வழக்கின் தீர்ப்பு நாளன்று தலைமைச் செயலகம் வெறிச்சோடியது. தீர்ப்பு வந்து கிட்டத்தட்ட 10 நாட்கள் ஆகும் நிலையிலும் நிர்வாகம் ஸ்தம்பித்த நிலையில் இருப்பது யாருக்குமே நல்லதல்ல. பன்னீர்செல்வத்திடம் ஆட்சியும் கட்சியும் மட்டும் ஒப்படைக்கப்படவில்லை; இந்த மாநிலத்தின் அமைதியும் சேர்த்தே ஒப்படைக்கப்பட்டிருக்கிறது. ஜெயலலிதா ஆட்சியில் இருக்கும் போதெல்லாம் மக்களின் அமைதிக்கும் நிம்மதிக்கும் எதிராக யாரும் எளிதில் தலைதூக்கிவிட முடியாது என்று ஒரு பெருமை அக்கட்சி யினருக்கு உண்டு. தலைவியால் அடையாளம் காட்டப்பட்டு, தலைவியின் வழிநடத்தலோடு பன்னீர்செல்வம் மூலமாக நடக்கும் இந்த ஆட்சியும், கிட்டத்தட்ட தங்கள் தலைவியின் ஆட்சியேதான் என்று அவர்கள் மனப்பூர்வமாக நினைப்பார்களேயானால், இப்படியா நடந்துகொள்வது?
தொழில்துறையின் இயங்குசக்தியான மின்னுற்பத்தி குறைந்து வருகிறது. மேட்டூர் அணை திறக்கப்பட்டு, காவிரி மாவட்டங்களில் சாகுபடி தீவிரம் அடைந்திருக்கும் நிலையில், விவசாயிகள் பல்வேறு உதவிகளுக்காகக் காத்திருக்கின்றனர். இப்படி, பணிகளும் சவால்களும் அணிவகுத்து நிற்கின்றன. கட்சியை நிர்வகிக்க, அரசியல் சூழலை எதிர்கொள்ள, ஆட்சி நிர்வாகத்தை முன்னெடுக்க என்று குழுக்களாகப் பிரிந்து அதிமுகவினர் காரியம் ஆற்ற வேண்டிய நேரம் இது.
இது தலைமை இல்லாமல் தடுமாறும் கலம் அல்ல என்று நிரூபித்துக் காட்டுவதுதான், இத்தனை நாளும் பாடுபட்டு ஜெயலலிதா உருவாக்கிய ஆதரவைக் கட்டிக்காப்பதற்கான ஒரே வழி!