

சட்டப் பிரச்சினைகளின் மீது அரசியலின் கருநிழல் விழும் போது அது தேவையற்ற விவாதங்களுக்கே இட்டுச் செல்கிறது. டெல்லி மாநில அரசின் 21 பேரவைச் செயலர்கள் தகுதியிழப்புக்கு ஆளாகிவிடக் கூடாது என்ற அச்சத்தில், மாநில அரசு பேரவையில் நிறைவேற்றிய மசோதா தொடர்பான இப்போதைய சர்ச்சையும் அப்படிப்பட்டதுதான்.
ஆதாயம் தரும் பதவியை வகிப்பதாக அவர்களுடைய பதவிப் பொறுப்புகள் கருதப்படக்கூடிய வாய்ப்பு இருப்பதால், அவர்கள் பேரவை உறுப்பினர் பதவிகளை இழந்துவிடக் கூடாது என்பதற்காக இந்த மசோதா நிறைவேற்றப்பட்டது. இந்த மசோதாவுக்கு ஒப்புதல் தர வேண்டாம் என்று குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜிக்கு நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு ஆலோசனை வழங்கியதால்தான், அவர் ஒப்புதல் தரவில்லை என்று டெல்லி மாநில முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால் குற்றம்சாட்டியிருக்கிறார். குஜராத், பஞ்சாப் உள்ளிட்ட மாநிலங்களில் பேரவைச் செயலர் என்ற பதவி இருப்பதையும் நியமனங்கள் நடந்திருப்பதையும் அவர் சுட்டிக்காட்டியிருக்கிறார். இந்த மாநிலங்களில் இயற்றப்பட்ட சட்டம் இப்பதவியில் இருப்பவர்களைக் காப்பாற்றுவதையும் அந்தப் பாதுகாப்பு டெல்லியை ஆளும் ஆஆக அரசுக்கு மறுக்கப்படுவதாகவும் முறையிடுகிறார். இந்தப் பிரச்சினை அவர் சொல்வதைப் போல ஒரேயொரு பிரச்சினை அல்ல, இரண்டின் கலவை.
பேரவைச் செயலர் என்ற பதவிக்கு ஊதியம் தரப்பட்டாலும் தராமல் வெறும் கௌரவப் பதவியாக இருந்தாலும், இதை ஆதாயம் தரும் பதவியாகக் கருத முடியுமா, முடியாதா என்பது முதல் கேள்வி. ஒரு மாநிலத்தின் அமைச்சர்களின் எண்ணிக்கை அந்தப் பேரவையின் மொத்த வலுவில் குறிப்பிட்ட சதவீதம் வரைதான் இருக்க வேண்டும் என்ற சட்ட விதியை மீறுவதற்காகத்தான் டெல்லியில் 21 பேர் பேரவைச் செயலாளர்களாக நியமிக்கப்பட்டார்களா என்பது அடுத்த கேள்வி. இக்கேள்விக்கான விடைகளை மத்திய தேர்தல் ஆணையத்திடமும் நீதிமன்றங்களிடமும் கேட்டுப் பெறலாம். இதை அரசியல் சர்ச்சையாக்கியிருக்க வேண்டிய அவசியம் இல்லை.
பேரவைச் செயலர் என்கிற பதவி அமைச்சர் பதவியைப் போலத்தான்; அரசியல் சட்டம் அனுமதித்துள்ள எண்ணிக்கைக்கும் அதிகமாக அமைச்சர்கள் மற்றும் பேரவைச் செயலர்களின் மொத்த எண்ணிக்கை வருகிறதா என்று கூட்டிப்பார்த்து, அதிகமாக இருந்ததால் அப்பதவி செல்லாது என்று சில உயர் நீதிமன்றங்கள் தீர்ப்பளித்துள்ளன. சட்டப் பேரவையின் உறுப்பினர் எண்ணிக்கையில் அதிகபட்சம் 15% ஆக மட்டும் அமைச்சர்களின் எண்ணிக்கை இருக்கலாம் என்றும் 2003-ல் அறிமுகப்படுத்தப்பட்ட இந்திய அரசியல் சட்டத்தின் 164(1ஏ) பிரிவு கூறுகிறது. டெல்லி சட்டப் பேரவையைப் பொறுத்தவரை அதிகபட்சம் அமைச்சர்கள் 7 பேர்தான் (மொத்த எண்ணிக்கையில் 10%) இருக்கலாம்.
சர்ச்சைகளுக்கெல்லாம் காரணம் ஆதாயம் தரும் பதவி என்றால் என்ன, எவையெல்லாம் ஆதாயங்கள் என்பதும் பேரவைச் செயலர் பதவி என்றால் என்ன, அந்தப் பதவிக்கான வேலைகள் என்ன என்பதும் தெளிவாக வரையறுக்கப்படவில்லை என்பது. இவ்விரண்டு கேள்விகளுக்கும் விடைகாணும் வகையில் புதிய சட்டம் தேவைப்படுகிறது. ஆதாயம் தரும் பதவி என்பதற்கு விளக்கம் அளிப்பதில் இரட்டை நிலையே கூடாது. மத்திய அரசு இதற்கான முன்முயற்சியையும் எடுக்க வேண்டும்!