Published : 08 Jun 2017 08:46 AM
Last Updated : 08 Jun 2017 08:46 AM

நம்பிக்கை அளிக்கும் ராக்கெட் சாதனை!

ஜிஎஸ்எல்வி மார்க்-3 ராக்கெட்டை விண்ணில் ஏவியதன் மூலம் அதிக எடையுள்ள ராக்கெட்டைத் தயாரித்துப் பயன்படுத்துவதில் புதிய சாதனை படைத்திருக்கிறது இந்தியா. இந்த ராக்கெட் 3.1 டன் எடையுள்ள செயற்கைக்கோளைச் சுமந்து சென்று பூமியிலிருந்து 36,000 கிலோ மீட்டர் தொலைவில் புவிநிலை சுற்றுவட்டப் பாதையில் நிறுத்தியிருக்கிறது. நான்கு டன் எடை வரை உள்ள செயற்கைக்கோள்களைச் சுமந்து செல்லும் ஆற்றல் படைத்தது இது. இதன் மூலம் செயற்கைக்கோளின் ஏவுதிறன் இரண்டு மடங்காக உயர்த்தப்பட்டிருக்கிறது. திரவ ஆக்ஸிஜன், திரவ ஹைட்ரஜன் ஆகியவற்றை எரிபொருளாகப் பயன்படுத்தும் கிரையோஜெனிக் இன்ஜின் முதல்முறையாக உள்நாட்டில் தயாரிக்கப்பட்டு பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்தத் தொழில்நுட்பத்தில் முன்னணியில் உள்ள நாடுகள் வரிசையில் இந்தியாவும் சேர்ந்திருக்கிறது.

தகவல் தொடர்புகளுக்கு உதவும் செயற்கைக்கோள்கள் நான்கு டன்கள் முதல் ஆறு டன்கள் வரையிலானவை. இந்தத் திறனையும் நம்மால் எட்ட முடியும். மின்னாற்றலைப் பயன்படுத்துவதால் கிடைக்கும் கூடுதல் உந்துவிசை மூலம், சரியான சுற்றுவட்டப் பாதையில் செயற்கைக்கோளைக் கொண்டுபோய் நிறுத்துவதுடன் அதன் ஆயுட்காலம் முழுவதற்கும் அதைச் சரியான நிலையில் செயல்பாட்டில் வைத்திருக்க முடியும். உந்துவிசைக்கு மின்னாற்றலைப் பயன்படுத்துவதால் ராக்கெட்டின் எடையைக் குறைக்க முடியும். அதிக எடையுள்ள செயற்கைக்கோள்களை, அதே ஆற்றலைச் செலவழித்துக் கொண்டுபோக முடியும். மின்னாற்றல் உந்துவிசையை இஸ்ரோ கடந்த மாதம் ஏவிய ‘ஜிசாட்-9’ ராக்கெட்டில் பயன்படுத்தியது. இப்போது ஏவியுள்ள ‘ஜிசாட்-19’-ல் லிதியம்-ஐயான் பேட்டரி பயன்படுத்தப்பட்டுள்ளது. செயற்கைக்கோளுக்கு மின்னாற்றல் வழங்க லிதியம்-ஐயான் பேட்டரி பயன்படுத்தியிருப்பது இதுவே முதல் முறை.

மார்க்-3 ராக்கெட் ஓராண்டுக்குள் மீண்டும் பயன்படுத்தப்பட்டு சோதனை செய்யப்படும். பின்னர், கனமான செயற்கைக்கோள்களை ஏவுவதில் இந்தியா தன்னிறைவு பெற்ற நாடாகிவிடும். அதிக எடையுள்ள செயற்கைக் கோள்களை ஏவுவதற்கான செலவும் கணிசமாகக் குறைந்துவிடும். இதுவரை அவற்றை ஏவ ஐரோப்பாவின் ‘ஏரியான்’ ரக ராக்கெட்டுகளைப் பயன்படுத்திவருகிறோம். எடைக் குறைவான செயற்கைக் கோள்களை ஏவுவதற்கு இந்தியா குறைந்த கட்டணம் வசூலிக்கிறது என்பதால் எப்படி இப்போது நம்மை நாடி வருகிறார்களோ அதைப் போலவே கனரக செயற்கைக் கோள்களுக்கும் இனி வருவார்கள். 10 டன் வரை எடையுள்ள செயற்கைக்கோள்களைத் தாழ் வட்டப் பாதையில் நிலைநிறுத்தும் வலிமை இந்த ராக்கெட்டுக்கு இருப்பதால் இரண்டு விண்வெளி வீரர்களைக் கொண்ட ஏவுவாகனத்தை நாம் பயன்படுத்த முடியும், ராக்கெட்டின் திறனை மேலும் கூட்டினால் மூன்று பேரைக்கூட அனுப்ப முடியும். தொடரட்டும் இந்தியாவின் சாதனை!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x