இன்று சாலமன்... நாளை வஞ்சிரம்!

இன்று சாலமன்... நாளை வஞ்சிரம்!
Updated on
1 min read

அமெரிக்காவின் கார்டோவா நகர மீனவர்கள் புதுவிதமான ஒரு பிரச்சினையை எதிர்கொள்கிறார்கள். அவர்கள் பிழைக்க இனி, அலாஸ்கா பகுதியில் சாலமன் மீன்களைப் பிடித்தால் மட்டும் போதாது. பிடித்த மீன்களை விற்க அந்த மீன்கள் தொடர்ந்து உண்ணக் கூடிய பதத்தில்தான் இருக்கின்றன என்கிற சான்றிதழும் வேண்டும்.

யார் இப்படிக் கேட்பது? ‘வால்மார்ட்’ நிறுவனம் கேட்கிறது.

விவசாயிகள், மீனவர்கள் என்று கொஞ்சம் கொஞ்சமாக அமெரிக்கச் சந்தையை வளைத்த ‘வால்மார்ட்’ இப்போது, தான் கொள்முதல் செய்யும் விவசாயிகளிடமும் மீனவர்களிடமும் ஏகப்பட்ட கெடுபிடிகளைச் செய்கிறது. அவற்றின் ஒரு பகுதிதான் அலாஸ்கா மீனவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினை. இதில் குறிப்பிட வேண்டிய இன்னொரு விஷயம், ‘‘இந்தச் சான்றிதழையும் ‘மரைன் ஸ்டூவர்ட்ஷிப் கவுன்சில்’அமைப்பு தந்தால்தான் அங்கீகரிப்போம்’ ’ என்று கூறியிருக்கிறது ‘வால்மார்ட்’.

இந்த அமைப்பு லண்டனைத் தலைமையிடமாகக் கொண்டது. கடலில் கிடைக்கும் உணவுகளைத் தரம்பிரித்து சான்றிதழ் தரும் வேலையை அயல்பணி ஒப்படைப்பு முறையில் மேற்கொள்ளும் இந்த நிறுவனம், இப்படிச் சான்றிதழ் தர ஒரு மீனளக் குழுமத்துக்கு ஆண்டுக்கு சுமார் ரூ. 90 லட்சம் வரை கட்டணமாக வசூலிக்கிறது. இதை வாங்கிக்கொண்டு மீனை அடைத்து வைக்கும் பாலிதீன் பொட்டலத்தின் மூலையில் நீல நிறத்தில் சின்னதாகத் தங்களுடைய நிறுவன முத்திரையைப் பொறிக்கிறது.

‘‘இந்த முத்திரைக்காக ரூ. 90 லட்ச ரூபாய் கொடுப்பது அநியாயம். இந்தச் சான்றிதழ், தரப்படுத்துதல் எல்லாமே மோசடி. தரத்தின் பெயரால் மேற்கொள்ளப்படும் இப்படியான நடைமுறைகள் கெடுபிடிகள் யாவும் சந்தைப் பேரத்தையும் வியாபாரத்துக்குப் பிந்தைய ‘வியாபார’த்தையும் உள்நோக்கமாகக் கொண்டவை’’ என்கிறார்கள் மீனவர்கள். அவர்கள் சுட்டிக்காட்டும் இன்னொரு விஷயம்: ‘வால்மார்ட்’ நிறுவனத்தின் இந்தக் கெடுபிடிக்குப் பின் ஏற்கெனவே சான்றளித்ததைப் போல ஏழு மடங்கு மீனளக் குழுமங்களுக்கு ‘மரைன் ஸ்டூவர்ட்ஷிப் கவுன்சில்’ சான்று அளித்திருப்பது.

இந்த ஆய்வுகள், சான்றிதழ், தர நிர்ணய உள்விவகாரங்கள் எல்லாம் ஒருபுறம் இருக்கட்டும். நாடுகள் வெவ்வேறாக, மீன்கள் வெவ்வேறாக இருக்கலாம்; மீன்பாடும் மீனவர்பாடும் உலகெங்கும் ஒன்றுதான். எந்தக் கடலிலோ, ஆற்றிலோ தரமான மீன்கள் என்ற வகை கிடைக்கிறது அல்லது எந்த வலைகள் தரமான மீன்களை மட்டும் பிடிக்கின்றன? இந்தியச் சந்தையைச் சில்லறை வியாபாரிகளிடமிருந்து பறித்து, பெரு நிறுவனங்களிடம் தரத் துடிக்கிறது நம்முடைய அரசு. பன்னாட்டு நிறு வனங்கள் நாளை இந்திய வயல்களையும் ஆறுகளையும் கடல்களையும் சூழும். இன்று சாலமனுக்குக் கேட்கப்படும் சான்றிதழ் நாளை வஞ்சிரங்களுக்குக் கேட்கப்பட்டால் என்ன செய்யப் போகிறோம் நாம்?

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in