

மாவட்டம், நெடுவாசல் உள்ளிட்ட 31 இடங்களில் ஹைட்ரோ கார்பன் எடுக்கும் திட்டத்துக்கு 22 நிறுவனங்களுடனான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டிருக்கிறது மத்திய அரசு. விளைவாக, மீண்டும் போராட்டத்தில் இறங்குவோம் என்று அறிவித்திருக்கிறார்கள் நெடுவாசல் விவசாயிகள். ஒரு பிரச்சினையை மீண்டும் அதன் தொடக்கப் புள்ளிக்கே அனுப்பியிருக்கிறது மத்திய அரசு.
வானம் பார்த்த பூமியான புதுக்கோட்டை மாவட்டம், விவசாயத்துக்கு நிலத்தடி நீரையே பெரிதும் நம்பியிருக்கிறது. இந்நிலையில், அங்கு ஹைட்ரோ கார்பன் எடுக்க, கடந்த பிப்ரவரி 15-ல் மத்திய அரசு அனுமதி அளித்தது. அதை எதிர்த்து மறுதினமே விவசாயிகளும், பொதுமக்களும் தன்னெழுச்சியாகப் போராட்டத்தில் இறங்கினார்கள். இந்தப் போராட்டம் தேசிய அளவில் கவனத்தை ஈர்த்தது. இத்திட்டத்தைக் கைவிடுமாறு தமிழக முதல்வர் பழனிசாமி பிரதமர் மோடியிடம் நேரில் வலியுறுத்தினார். மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணனும் ஆளும் பாஜக தலைவர்களும் விவசாயிகளுடன் நேரடியாகப் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். “மக்கள் விரும்பாவிட்டால் இத்திட்டம் மேற்கொள்ளப்பட மாட்டாது” என்று அவர்கள் உறுதியளித்தனர். “மத்திய அரசின் இத்திட்டத்துக்கு மாநில அரசு அனுமதி அளிக்காது” என்று மாநில அரசும் அளித்த உறுதிமொழியின்பேரில், நெடுவாசல் மக்கள் இப்போராட்டத்தைத் தற்காலிகமாக விலக்கிக்கொள்வதாக அறிவித்தார்கள். இந்நிலையில், மக்களிடம் அளிக்கப்பட்ட உறுதிமொழிக்கு எதிராக இப்போது மத்திய அரசு முடிவெடுத்திருப்பதும் மாநில அரசு அமைதி காப்பதும் மக்களை அவநம்பிக்கையில் தள்ளுவதாகவே அமையும். “நெடுவாசல் பகுதி மக்களிடம் இதுகுறித்து விளக்கிய பிறகே, எரிவாயு எடுக்கும் திட்டம் நிறைவேற்றப்படும்” என்று மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்திருக்கிறார். நெடுவாசலுக்கான ஒப்பந்தத்தைப் பெற்றுள்ள ஜெம் லேபரட்ரீஸ் நிறுவனம், “மக்களிடையே பேச்சுவார்த்தை நடத்தி ஆறு மாதங்களுக்குள் திட்டத்தைச் செயல்படுத்துவோம்” என்று கூறியிருக்கிறது.
இந்த விவகாரத்தில் ஆரம்பம் முதலாகவே அரசுத் தரப்பு செய்துவரும் தவறு என்னவென்றால், மக்களிடம் உரிய விளக்கமளிக்காமல் நேரடியாகத் திட்டத்தை அவர்கள் மீது ஏவ முற்படுவதுதான். ஒரு திட்டம் அது நல்ல திட்டமாகவே இருந்தாலும்கூட நிச்சயம் மக்களிடம் அதுகுறித்து ஆட்சியாளர்கள் முழு விளக்கமளித்து, அவர்களுடைய முழு சம்மதத்துடனேயே அது நிறைவேற்றப்பட வேண்டும். ஒரு திட்டத்தால் விளையும் எந்த நல்ல, கெட்ட விளைவுகளையும் நேரடியாக முதலில் எதிர்கொள்வது சம்பந்தப்பட்ட மக்கள்தான். மத்திய அரசு தொடர்ந்து இந்த விஷயத்தில் மக்களைப் புறக்கணிக்கிறது. அதேபோல, தமிழக அரசும் இந்த விஷயத்தில் தனக்கென்று ஒரு கொள்கை நிலைப்பாடே இல்லாமல் செயல்பட்டுவருகிறதோ என்று தோன்றுகிறது. வளர்ச்சித் திட்டங்களையோ விவாதத்துக்குரிய சட்டங்களையோ மத்திய அரசு கொண்டுவரும்போது, மக்கள் எதிர்த்தால் தானும் எதிர்ப்பது, இல்லையென்றால் அப்படியே ஏற்றுக்கொள்வது என்ற வழிமுறையைக் கையாள்வது புத்திசாலித்தனம் அல்ல. பொறுப்பற்றதனம். இரு அரசுகளும் முதலில் மக்களிடம் பேச வேண்டும்!