

பணமதிப்பு நீக்க நடவடிக்கையின் பாதிப்புகளை முன்வைத்து, மத்திய அரசைக் கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டோர் மீது தமிழகக் காவல் துறை நடத்தியிருக்கும் கொடூரத் தாக்குதல் அதிரவைக்கிறது. சமீப காலமாகவே சென்னை மாநகரக் காவல் துறையினர் மீது சுமத்தப்பட்டுவரும் மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுகளின் தொடர்ச்சியாகவே இதைப் பார்க்க வேண்டியிருக்கிறது. மேலும், மக்கள் நலப் பிரச்சினைகளை முன்வைத்துப் போராட்டத்தில் ஈடுபட்டோர் மீது நடத்தப்பட்டிருக்கும் இத்தாக்குதல், ஜனநாயகத்தின் மீது தமிழகக் காவல் துறை என்ன மாதிரியான நம்பிக்கையைக் கொண்டிருக்கிறது எனும் கேள்வியையும் எழுப்புகிறது.
பிரதமர் மோடி நவ. 8 அன்று அறிவித்த பணமதிப்பு நீக்க நடவடிக்கையானது நாட்டின் பொருளாதாரத்தில் ஒரு தற்காலிகத் தேக்கத்தை உருவாக்கியிருப்பதுடன் சாமானிய மக்களின் வாழ்வைப் பெருமளவில் பாதித்திருக்கிறது. “பணமதிப்பு நீக்க நடவடிக்கையால் மக்களுக்கு ஏற்பட்டிருக்கும் இன்னல்கள் 50 நாட்களில் நீங்கும்” என்று தெரிவித்தார் பிரதமர். ஆனால், அப்படி நடக்கவில்லை. மேலும் பல மாதங்களுக்குப் பாதிப்புகள் தொடரும் என்பதையே சூழல் உணர்த்துகிறது. இப்படிப்பட்ட சூழலில், அரசியல் கட்சிகளும் மக்கள் அமைப்புகளும் போராட்டங்களை நடத்துவது இயல்பானது. நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் இப்படியான போராட்டங்கள் நடக்கின்றன.
அப்படித்தான் சென்னை போராட்டமும் நடந்திருக்கிறது. மார்க்ஸிஸ்ட் கட்சியின் இளைஞர் அமைப்பான ‘இந்திய ஜனநாயக வாலிபர் சங்க’த்தைச் சேர்ந்தவர்கள் இந்தப் போராட்டத்தில் பங்கேற்றிருக்கின்றனர். சென்னை, மேடவாக்கத்தில் ஒரு வங்கி ஏடிஎம் முன்பு நின்று, ஒலிபெருக்கிகூட இல்லாமல் கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டம் நடத்தியவர்களைப் பள்ளிக்கரணை போலீஸார் தாக்கியிருக்கின்றனர். பின்பு, அவர்களில் ஒரு பிரிவினரை அடித்து வாகனத்தில் ஏற்றித் தனியாக எங்கோ அழைத்துச் சென்றவர்கள், ஏனையோரைக் கைதுசெய்து ஓரிடத்தில் அடைத்திருக்கின்றனர். இதனிடையே, பொதுவெளியில் நடத்தப்பட்ட இத்தாக்குதல் செய்தியாகப் பரவ இதுகுறித்து போலீஸாரிடம் விவரம் கேட்கச் சென்றிருக்கின்றனர் கட்சியின் ஏனைய பிரிவினர். அவர்களிடம் எந்தத் தகவலையும் தெரிவிக்க மறுத்த போலீஸார், திடீரென்று அவர்கள் மீதும் தாக்குதலை ஏவியிருக்கின்றனர். காட்டுத்தனமாகத் தடியடி நடத்தியதோடு, பெண்களிடமும் அத்துமீறலான முறையில் போலீஸார் நடந்துகொண்டதாக நேரில் பார்த்தவர்கள் கூறுகின்றனர். முன்னதாக, காவல் துறையினரின் சில அத்துமீறல்கள் தொடர்பாக இதே அமைப்பினர் தொடர்ந்து கேள்வி எழுப்பிவந்ததற்குப் பழிதீர்க்கும் விதமாகவே போலீஸார் இந்தத் தருணத்தைப் பயன்படுத்திக்கொண்டனர் என்று தெரிவிக்கிறார்கள் பாதிக்கப்பட்டவர்கள். மிக மோசமான விஷயம் இது.
முதல்வர் பன்னீர்செல்வம் இதுகுறித்த நீதி விசாரணைக்கு உத்தரவிட வேண்டும். அத்துமீறலில் ஈடுபட்ட போலீஸார் அனைவரின் மீதும் கடும் நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். சென்னை மாநகரக் காவல் துறை, தன் மீது விழுந்துகொண்டிருக்கும் மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுக் கறைகளிலிருந்து விடுபட முனைய வேண்டும்!