Published : 06 Mar 2017 08:31 AM
Last Updated : 06 Mar 2017 08:31 AM

பூமிக்கு வெளியே உயிரைத் தேடும் பயணத்தில் ஒரு மைல்கல்!

சூரியக் குடும்பத்துக்கு வெளியே உயிர்களும், உயிர்ச்சூழலும் இருக்கின்றனவா எனும் தேடலுக்கு வலு சேர்த்திருக்கிறது, பூமியைப் போன்ற ஏழு கிரகங்கள் கண்டுபிடிக்கப்பட்டிருப்பதாக நாஸா வெளியிட்டிருக்கும் செய்தி. பூமியிலிருந்து 40 ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ள ‘டிராப்பிஸ்ட்-1’ எனும் குள்ள நட்சத்திரத்தைச் சுற்றிவரும் கிரகங்கள் இவை.

சூரியக் குடும்பத்துக்கு வெளியே இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட கிரகங்களைப் போல் அல்லாமல், இந்த ஏழு கிரகங்களிலும், உயிர்கள் வாழ்வதற்கு அவசியமான திரவ நிலையிலான நீர் இருப்பதற்கான வாய்ப்பு இருப்பது குறிப்பிடத்தக்கது. இவற்றில் மூன்று கிரகங்களில் நீர் இருப்பதற்கு அதிக வாய்ப்புகள் இருக்கின்றன. பூமியைப் போன்ற கிரகங்கள் அதிகம் கொண்ட தொகுப்பு கண்டுபிடிக்கப்படுவது இதுவே முதல் முறை. இந்தக் கிரகங்கள் ‘ட்ராப்பிஸ்ட்-1’ நட்சத்திரத்திலிருந்து மிக நெருக்கத்திலும் இல்லை; அதிகத் தொலைவிலும் இல்லை என்பது, அந்தக் கிரகங்களின் பரப்பில் திரவநிலையில் நீர் இருப்பதற்கான வாய்ப்பை அதிகரித்திருக்கிறது.

சூரியக் குடும்பத்தைப் பொறுத்தவரை, திரவநிலையில் நீர் இருப்பது பூமியில் மட்டும்தான். இந்த ‘ட்ராப்பிஸ்ட்-1’ நட்சத்திரத்தை, பூமியைப் போன்ற மூன்று கிரகங்கள் சுற்றிவருவதாகக் கண்டுபிடித்து ஒரு வருடத்துக்குள் அதேபோன்ற மேலும் நான்கு கிரகங்களை விஞ்ஞானிகள் கண்டுபிடித்திருக்கிறார்கள். நமது சூரியக் குடும்பத்தைப் போல் அல்லாது, இந்தக் கிரகங்கள் ‘ட்ராப்பிஸ்ட்-1’ நட்சத்திரத்திலிருந்து வெகு தொலைவில் உருவாகி, பின்னர் படிப்படியாக அதை நோக்கி நகர்ந்தவை. வியாழன் கிரகத்தின் கலீலியன் நிலவுகளும் இதேபோல், அந்தக் கிரகத்திலிருந்து வெகு தொலைவுக்கு அப்பால் உருவாகி, காலப்போக்கில் அதை நோக்கி நகர்ந்தவைதான். சூரியக் குடும்பத்துடன் ஒப்பிட, ‘ட்ராப்பிஸ்ட்-1’ நட்சத்திரத்தைச் சுற்றியுள்ள ஏழு கிரகங்களும், அந்த நட்சத்திரத்துக்கு மிக நெருக்கமாகவே சுற்றிவருகின்றன. ‘ட்ராப்பிஸ்ட்-1’ குடும்பத்தில் அந்நட்சத்திரத்துக்கு மிக அருகில் உள்ள கிரகம், தனது சுற்றுப்பாதையை ஒன்றரை நாட்களில் முடித்துவிடும். நட்சத்திரத்திலிருந்து தொலைவில் இருக்கும் கிரகம், அதைச் சுற்றிவர 20 நாட்கள்தான் எடுத்துக்கொள்ளும். இந்தக் கிரகங்களின் சுற்றுப்பாதையின் கால அளவும் கலீலியன் நிலவுகளை ஒத்திருப்பது குறிப்பிடத்தக்கது. ‘ட்ராப்பிஸ்ட்-1’ குடும்பத்தில் குறைந்தபட்ச மூன்று கிரகங்களில் திரவநிலையில் நீர் இருப்பதற்கான வாய்ப்பு அதிகம் என்று கருதப்படுவதால், அவற்றின் பருவநிலையையும், அதன் வளிமண்டலத்தின் ரசாயனக் கலவையையும் ஆராய்வதில் அதிகக் கவனம் செலுத்தப்படுகிறது. முதற்கட்ட ஆய்வின் படி, இந்தக் கிரகங்களைச் சுற்றி ஹைட்ரஜன் வாயு இல்லை என்று தெரிவித்திருக்கும் விஞ்ஞானிகள், அந்தக் கிரகங்கள் பூமியைப் போன்றவைதானா என்பதைத் தெரிந்துகொள்ளும் முயற்சியில் ஈடுபட்டிருக்கிறார்கள்.

இந்தக் கிரகங்களில் உயிர்கள் இருக்குமானால், அதைப் பற்றிய தகவல்களை இன்னும் 10 ஆண்டுகளில் நம்மால் தெரிந்துகொள்ள முடியும். பூமிக்கு வெளியே உயிர்களைத் தேடும் ஆராய்ச்சிகளை இந்தக் கண்டுபிடிப்பு மேலும் முடுக்கிவிட்டிருக்கிறது!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x