திசையில் தெரியும் திருப்பம்!

திசையில் தெரியும் திருப்பம்!
Updated on
2 min read

இந்தியாவைத் தாண்டியும் கவனம் ஈர்த்திருக்கிறது அமெரிக்க நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி ஆற்றிய உரை. அமெரிக்காவுக்கும் இந்தியாவுக்கும் இடையேயான உறவு ஒரு புதிய கட்டத்தை நோக்கிச் செல்வதை மோடியின் உரை தெளிவாக உணர்த்துகிறது.

அமெரிக்காவுடனான இந்திய உறவின் வேகம் கடந்த இரண்டாண்டுகளாகக் கொஞ்சம் அதிகமாகத்தான் இருக்கிறது. குறிப்பாக, இதுநாள் வரை உறவில் பிரதான இடம் வகித்த பொருளாதாரத் துறைக்கு இணையாக இப்போது பாதுகாப்புத் துறையும் முக்கியத்துவம் பெற்றுவருகிறது. கடல் ரோந்துப் பணிகள், உளவுத் தகவல்கள் பரிமாற்றங்கள், கூட்டுப் பயிற்சிகளைத் தாண்டி ராணுவத் தளவாடங்களை அமெரிக்காவிடமிருந்து இந்தியா வாங்குவதும் பெருமளவில் அதிகரித்துள்ளது. மன்மோகன் சிங் 2005 - ல் அமெரிக்க நாடாளுமன்றத்தில் உரையாற்றும்போது “இந்தியாவின் வளர்ச்சியில் அமெரிக்காவின் நலனும் இருக்கிறது’’ என்றார். அதன் தொடர்ச்சியாக இருதரப்பு வணிகமும் உயர்ந்தது. இன்றைய வருடாந்திர வணிகத்தின் அளவு 107 பில்லியன் டாலர்களுக்கும் மேல். இப்போது மோடி யுகம். “வளமான, வலிமையான இந்தியா அமெரிக்காவின் வியூக நலனோடு சம்பந்தப்பட்டது” என்று கூறுகிறார் மோடி.

இந்திய - அமெரிக்க உறவு ‘வரலாற்றுரீதியான தயக்கங்களை முறியடித்துள்ளது’ என்று மோடி பேசியுள்ளதைப் பார்க்கும்போது, இந்திய அரசு ‘பனிப்போர்’ கால சிந்தனைப் போக்குகளை ஓரங்கட்டி வைத்துவிட வேண்டும் என்ற யோசனையில் இந்த அரசு இருப்பதுபோலவே தோன்றுகிறது. அண்டை நாடுகளுடனான நம்முடைய ராஜதந்திர உத்திகளுடன் தொடர்புடையதாகப் பார்க்கப்படும் இந்தியாவின் இந்த நகர்வுகளின் பின்னணி நியாயங்கள் எப்படியெல்லாம் விவரிக்கப்பட்டாலும், சர்வதேச உறவுகளில் இந்தியா பெருமளவில் கடைப்பிடித்துவந்த அணிசாராக் கொள்கையின் இறுதி அத்தியாயத்தை நோக்கி இக்காலகட்டம் நகர்த்துகிறதோ என்ற சந்தேகத்தைத் தவிர்க்கவே முடியவில்லை.

அமெரிக்காவும் இந்தியாவும் கடந்த ஆண்டு டெல்லியில் இணைந்து தங்களின் ‘தொலைநோக்குத் திட்ட’த்தை வெளியிட்டன. மோடி அரசாங்கம் ராணுவ விவகாரங்களில் அமெரிக்காவோடு நெருக்கமான உறவைப் பேணும் நிலையை நோக்கிச்செல்கிறது என்பது அப்போதே தெரிந்தது. இதை உறுதிப்படுத்துவதுபோல, இந்தியாவை ‘பாதுகாப்புத் துறையின் பெரிய பங்காளி’ என்று இப்போது அறிவித்துள்ளது அமெரிக்கா. ஒரு புதிய ராணுவ உறவையும் கூடவே இரு வெளியுறவுக் கொள்கைகளிலும் ஏற்பட்டிருக்கும் மாற்றங்களையும் சூசகமாகச் சொல்லும் வர்ணனையாகவே இதைப் பார்க்க வேண்டியிருக்கிறது. “அமெரிக்காவுடனான வலுவான கூட்டு வணிகரீதியான கடல்வழிகளின் பாதுகாப்பிலும் ஆசியா முதல் ஆப்பிரிக்கா வரையும் இந்தியப் பெருங்கடல் முதல் பசிபிக் பெருங்கடல் வரையும் கடலில் சுதந்திரமான நடமாட்டத்துக்கும் உதவும்” என்று மோடி விடுத்துள்ள அறிக்கை நிச்சயம் நம் அண்டை நாடுகளுடனான உறவில் நெருடல்களை உருவாக்கவே செய்யும்.

இந்த இடத்தில் நாம் சுட்டிக்காட்ட வேண்டிய முக்கியமான விஷயம் ஒன்று உண்டு: அமெரிக்காவுடன் நாம் நெருங்கும்போது ரஷ்யாவில் தொடங்கி சீனா வரையிலான நமது அண்டை நாடுகளுடனும் அது கடைப்பிடிக்கும் உறவையும் அணுகுமுறையையும் கணக்கில் எடுத்துக்கொண்டதாகவே அமெரிக்காவுடனான நம்முடைய உறவும் அணுகுமுறைகளும் இருக்க வேண்டும் முக்கியமாக ராஜாங்க உறவுகளில். கடல் கடந்து சென்று அமெரிக்க நாடாளுமன்றத்துக்குள் இந்தியப் பிரதமர் பேசும்போது, நம்முடைய வெளியுறவுக் கொள்கையில் தெளிவான மாற்றங்கள் தெரியவரும்போது, அதை இந்திய நாடாளுமன்றத்திலும் விவாதிக்க வேண்டிய கடமை இந்த அரசாங்கத்துக்கு இருக்கிறது!

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in