பதக்கப் பட்டியல் சொல்லும் பாடம்

பதக்கப் பட்டியல் சொல்லும் பாடம்
Updated on
2 min read

பிரேசிலின் ரியோ நகரில் நடந்த ஒலிம்பிக் போட்டிகளின் இறுதியில் இரண்டே இரண்டு பதக்கங்களுடன் தனது கணக்கை முடித்துக்கொண்டிருக்கிறது இந்தியா. முதல் பதக்கத்தை ஹரியாணாவைச் சேர்ந்த மல்யுத்த வீராங்கனை சாக்‌ஷி மாலிக் வென்றார். மகளிர் ‘பிரீ ஸ்டைல்’ 58 கிலோ எடைப் பிரிவில் அவருக்கு வெண்கலம் கிடைத்தது. அதேபோல், மகளிருக்கான பாட்மிண்டனில் வெள்ளிப் பதக்கம் வென்ற ஹைதராபாத்தைச் சேர்ந்த பி.வி.சிந்து, ஒலிம்பிக்கில் வெள்ளி வென்ற முதல் இந்திய வீராங்கனை என்பன போன்ற பெருமைகளைப் பெற்றுள்ளார்.

1900 தொடங்கி இதுவரை 30 ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்றுள்ளன. அவற்றில் இந்தியா ஒன்பது தங்கம், ஆறு வெள்ளி, 11 வெண்கலம் என்று மொத்தம் 26 பதங்கங்களை வென்றிருந்தது. ரியோ ஒலிம்பிக் போட்டிகளுடன் இந்த எண்ணிக்கை 28 ஆக உயர்ந்திருக்கிறது. ஆனால், இதுதான் நம் விளையாட்டின் பெருமையா? வறுமையில் உழலும் எத்தியோப்பியா கூட எட்டு பதக்கங்களை வென்றிருக்கிறது. கென்யா, ஜமைக்கா போன்ற நாடுகள்கூட 10-க்கும் மேற்பட்ட பதக்கங்களை வென்றிருக்கின்றன.

கடந்த ஒலிம்பிக் போட்டிகளில் இந்தியாவின் சார்பில் 83 வீரர்கள் பங்கேற்று ஆறு பதங்கங்களை வென்றனர். இந்த முறை இன்னும் மோசம். 117 பேர் போய் இரண்டே பதக்கங்களுடன் திரும்புகிறார்கள். இந்த ஆண்டு நிதிநிலை அறிக்கையில் விளையாட்டுத் துறைக்காக இந்தியா ரூ. 1,552 கோடியை ஒதுக்கியுள்ளது. கடந்த ஆண்டு ஒதுக்கியதைவிட இது ரூ. 50 கோடி அதிகம். ஆனால், சின்ன நாடான ஜமைக்கா ரூ. 3,075 கோடியை ஒதுக்கியிருப்பது குறிப்பிடத் தக்கது. ஆஸ்திரேலியா இளம் தடகள வீரர்களை ஒலிம்பிக்ஸ் போட்டிகளுக்காக பயிற்றுவிப்பதற்கான தனித் திட்டத்தைச் செயல்படுத்துகிறது. நம்மிடம் இத்தகைய அணுகுமுறை கிடையாது. எத்தனை தொகை ஒதுக்கினாலும் அது விளையாட்டு வீரர்களுக்கு முழுமையாகப் போய்ச் சேர்வதும் இல்லை.

ஒவ்வொரு ஒலிம்பிக்கிலும் ஆஸ்திரேலியா சராசரியாக 50 பதக்கங்களை வெல்கிறது. விளையாட்டுக்கான அதன் ஒதுக்கீடு சுமார் ரூ.700 கோடி. அதில் 80% ஒலிம்பிக் போட்டிகளுக்கு என்றே செலவழிக்கப்படுகிறது. இந்தியாவின் இளைஞர் மற்றும் விளையாட்டுத் துறை ரூ. 900 கோடியைச் செலவழிக்கிறது. ஆனால், அதன் மூன்றில் இரண்டு பகுதி மாநில மற்றும் தேசிய அளவிலான போட்டிகளுக்காகத்தான் செலவாகிறது. ஒலிம்பிக் போட்டிகளுக்கான தயாரிப்புகளுக்காக என்று திட்டமிட்ட முறையில் இந்தியாவின் விளையாட்டுத் துறையின் செலவுகள் இருப்பதில்லை.

திறமையான விளையாட்டு வீரர்களைப் பயிற்றுவிப்பதற்காக என்று ரூ.5 கோடியை இந்தியா ஒதுக்குகிறது. வெறுமனே போட்டியில் கலந்துகொள்வது என்பதைத் தாண்டி, பதக்கங்களை வெல்லும் திறனை நமது விளையாட்டு வீரர்களுக்கு அளிப்பதற்கு இந்தத் தொகை நிச்சயம் போதுமானதல்ல. அரசின் திட்டமிட்ட தொடர் முயற்சிகள் இல்லாமல் இந்தியா ஒலிம்பிக்கில் ஜொலிப்பது நடக்காது. அதேசமயம், நடந்து முடிந்த ஒலிம்பிக் போட்டிகள் இந்தியாவில் தங்கங்களை வெல்லும் திறன் படைத்தவர்கள் இருக்கிறார்கள் என்பதை மீண்டும் நிரூபித்திருக்கின்றன. இந்தியாவின் விளையாட்டுச் சூழல் அவர்களுக்கு உதவும் வகையில் கொஞ்சம் மாறினாலே போதும். ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளில் இந்தியாவின் நிலை தலைகீழாக மாறிவிடும். தற்போதுள்ள நிலையில் சாக்‌ஷியும் சிந்துவும் அற்புதங்கள். திட்டமிட்டுச் செயல்பட்டால் அத்தகையோரின் எண்ணிக்கை நிச்சயம் அதிகரிக்கும்!

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in