உபரி நிலங்கள் யாரை மனதில் கொண்டு அளக்கப்படுகின்றன?

உபரி நிலங்கள் யாரை மனதில் கொண்டு அளக்கப்படுகின்றன?
Updated on
2 min read

அரசுத் துறை நிறுவனங்கள் மற்றும் துறைகள் வசம் உள்ள பயன் படுத்தப்படாத உபரி நிலங்களை அடையாளம் கண்டு, தொகுத்து, ‘நில வங்கி’யை உருவாக்க மத்திய அரசு நடவடிக்கைகளைத் தொடங்கியிருக்கிறது. எதிர்காலத்தில் இந்த உபரி நிலத்தைச் சமூகப் பயன்பாட்டுக்கு வழங்குவது அல்லது தேவைப்படும் அரசுத் துறை நிறுவனங் களுக்கு விற்பது அல்லது அரசின் திட்டங்களுக்கு எடுத்துக்கொள்வது அல்லது பிற பயன்பாட்டுக்குப் பொது ஏலத்தில் அதிக லாபத்துக்கு விற்பது என்று அரசு முடிவுசெய்திருக்கிறது. இந்த நிலங்களை அடையாளம் காணவும், அதை எப்படிப் பயன்படுத்துவது என்று முடிவெடுக்கவும் வழிகாட்டு நெறிகளை வகுப்பதற்கு ஒரு குழுவை அரசு அமைத்திருக்கிறது. இரு வாரங்களுக்குள் இந்தக் குழு தனது பணியை முடித்து அறிக்கை அளித்துவிடக்கூடும். இதற்கென்று தனியாக உருவாக்கியுள்ள இணைய தளத்தில் எல்லா அரசுத் துறை நிறுவனங்களும் தங்கள் வசம் உள்ள நிலக் கையிருப்பு தொடர்பான விவரங்களைச் சேர்க்கத் தொடங்கிவிடும்.

பயன்படுத்தப்படாத நிலங்களைப் பயன்பாட்டுக்குக் கொண்டுவரும் யோசனையை யாரும் தவறு என்று கூற முடியாது. அதுவும் ‘நிலம் கையகப்படுத்தல், மறுவாழ்வு - மறு குடியமர்வுச் சட்டம்’தோல்வி கண்ட பிறகு அரசு இப்படியொரு திட்டத்தை யோசிப்பதற்கான நியாயத்தைப் புரிந்துகொள்ள முடியாமல் இல்லை. அதேசமயம், இப்படி அடையாளம் காணப்படும் நிலம் அரசுத் துறைக்கான திட்டங்களுக்காகப் பயன்படுத்துவதற்கானதா அல்லது தனியாருக்கானதா அல்லது அரசின் நிதிப் பற்றாக்குறையை இட்டு நிரப்ப வருமானம் பெறுவதற்காகவா என்பதை அரசு முதலில் தெளிவுபடுத்த வேண்டும். இப்போதிருக்கும் நிலையைப் பார்த்தால் அரசுக்கு இந்த இரண்டு நோக்கமும் இருப்பதைப் போலத் தெரிகிறது. அப்படியிருந்தால் அது ஆபத்தானது.

இந்திய சமூகச் சூழலில் நிலத்தின் பெறுமானம் விலைக்கு அப்பாற்பட்டது. அரசுத் துறை நிறுவனங்கள் தங்களுடைய நிறுவனத்தை விரிவுபடுத்தினாலோ, புதிய தயாரிப்புகளை மேற்கொள்ள முன்வந்தாலோ அவற்றுக்கு நிச்சயம் எதிர்காலத்தில் இடம் தேவைப்படும். எனவே, இன்றைய தேதியில் சும்மா கிடக்கும் நிலங்கள் அனைத்தும் பயன்படுத்தப்படாத ‘உபரி’என்று முத்திரை குத்தி அதைத் தருமாறு அரசுத் துறை நிறுவனங்களை நிர்ப்பந்திப்பது கூடாது. அப்படிச் செய்வது அரசுத் துறைகளில் மிகப் பெரிய பங்குதாரரான அரசே, அவற்றின் சொத்துகளைப் பறிப்பதைப் போலாகிவிடும்.

பொது ஏலம் மூலம் எப்போதும் நியாயமான, லாபகரமான விலை கிடைத்துவிடும் என்று கூறிவிட முடியாது. தரகர்களும் பணக்காரர்களும் கூட்டாகச் சேர்ந்து, ஏல விலையைக் குறிப்பிட்ட அளவுக்கு மேல் போகாமல் பார்த்துக்கொண்டு, பிறகு அதைச் சந்தை விலைக்கும் மேல் விற்று கொள்ளை லாபம் சம்பாதிக்க முற்படலாம். நிலத்தை வந்த விலைக்கு விற்றுவிட்டு, பிறகு அரசுத் துறை நிறுவனங்களின் மதிப்பையும் சரியவைப்பதாக இந்த நடவடிக்கைகள் ஆகிவிடக்கூடும். எப்படியும் தனியார் நிறுவனங்களுக்கு இப்படியான நிலங்கள் அளிக்கப்படவே கூடாது. ஒரே விதிவிலக்காக, அரசுத் துறை நிறுவனங்கள் வசம் உபரியாக உள்ள இடங்களை அரசின் புதிய திட்டங்களுக்கும் ஏனைய நிறுவனங்களுக்கும் பயன்படுத்தலாம். அப்படி நிலத்தை இன்னொரு அரசுத் துறை நிறுவனம் வாங்கினாலும், அரசே தன்னுடைய திட்டத்துக்கு எடுத்துக்கொண்டாலும் நிலத்துக்குச் சரியான விலையைச் சம்பந்தப்பட்ட நிறுவனத்துக்குக் கொடுப்பதும் முக்கியம். அரசின் சொத்து மக்கள் சொத்து. அது தனியாருக்குத் தாரை வார்க்கப்படக் கூடாது!

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in