

பூரண மதுவிலக்கு சாத்தியமா என்ற கேள்வி எல்லோர் மனதிலும் எழுந்த வேளையில், அது சாத்தியமே என்று சாதித்துக்காட்டிய மாநிலங்கள் தமிழ்நாடும் குஜராத்தும். இப்போது குஜராத்தில் மட்டுமே மதுவிலக்கு அமலில் இருக்கிறது. மதுவின் தீமைகள் குறித்துத் தங்கள் வாழ்நாளில் இடைவிடாமல் பிரச்சாரம் செய்துவந்தனர் நம்முடைய தேசத் தலைவர்கள். மதுபான விற்பனையில் கிடைக்கும் வருவாய்குறித்து அவர்கள் சிந்தித்ததே இல்லை. நாட்டு மக்களின் உடல்நலன், மனநலன், குடும்ப நலன் ஆகியவை விலைமதிப்பிட முடியாதவை என்பதால், அவற்றைக் காப்பதிலேயே அக்கறை காட்டினார்கள்.
அந்த வகையில் ராஜஸ்தான் மாநில அரசு செய்திருக்கும் செயல் பின்பற்றத்தக்கது. அதையே பாட்டாளி மக்கள் கட்சித் தலைவர் ராமதாஸும் வழிமொழிந்திருக்கிறார். ராஜஸ்தானில் அரசு வேலையில் சேருவோர், ‘புகையிலை கலந்த போதைப் பாக்குகளைப் பயன்படுத்த மாட்டோம், மது அருந்த மாட்டோம்’ என்று உறுதிமொழிப் பத்திரத்தில் கையெழுத்திட்ட பிறகே வேலையில் சேர முடியும். இளைய தலைமுறையினர் மனங்களில் அவை இரண்டும் எவ்வளவு ஆபத்தானவை என்பதைப் பதிய வைக்கும் நல்லதொரு முயற்சி இது. இன்னும் நடைமுறைக்கு வரவில்லையென்றாலும், மாநில அரசின் இந்த முயற்சியைப் பாராட்டாமல் இருக்க முடியவில்லை.
பணியில் இருக்கும் அரசு ஊழியர்களுக்கு மதுப் பழக்கம் இருந்தால், அதைக் கைவிட நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தும் ராஜஸ்தான் அரசு, அப்படிப்பட்ட அரசு ஊழியர்களின் மாத ஊதியத்தில் 75%-ஐ ஊழியரின் தாயார் அல்லது மனைவி அல்லது சட்டபூர்வ வாரிசிடமும், எஞ்சிய தொகையை மட்டுமே சம்பந்தப்பட்ட ஊழியரிடமும் வழங்கும் நடைமுறையை அமல்படுத்துகிறது. குடும்பத் தலைவரின் குடிப்பழக்கத்தால் வீட்டுச் செலவுக்குப் பணம் இல்லாமல் குடும்பம் தத்தளிக்கக் கூடாது என்ற அக்கறை இதில் தெரிகிறது.
தமிழகத்திலும் அரசு ஊழியர்களின் நடத்தை நெறிகளில் ‘போதைப் பொருள்களைப் பயன்படுத்தக் கூடாது, மது அருந்தக் கூடாது’ என்று விதிக்கப்பட்டிருக்கிறது. ஆனால், தமிழக அரசு ஊழியர்களில் எத்தனை சதவீதம்பேருக்கு போதைப் பாக்குப் பழக்கமும் குடிப் பழக்கமும் இருக்கிறது என்பதற்கு அந்த ஊழியர்கள் கேள்வி எழுப்பிக்கொண்டாலே விடை கிடைத்துவிடும்.
இன்றைக்கு மாநில அரசுக்குக் கிடைக்கும் வருவாயைப் போல பல மடங்கை எதிர்காலத்தில் மதுவுக்கு அடிமையானவர்களின் சிகிச்சைக்கும் மறுவாழ்வுக்கும் அரசு செலவு செய்ய நேரும். ஏராளமான குடும்பங்களில் குழந்தைகள் உயர்கல்வி பயில முடியாமல் கூலி வேலைக்குச் செல்ல நேரும். உழைப்பாளர்களின் உழைப்புத் திறன் குன்றும். விவசாயம், தொழில், வியாபாரம் அனைத்துக்குமே வேற்று மாநிலத் தொழிலாளர்களை நாடும்படி ஆகிவிடும். தேசிய அளவிலும் உலக அரங்கிலும் தமிழர்கள் என்றாலே ‘குடிவெறிக்கும் போதைப் பழக்கத்துக்கும் அடிமையானவர்கள்’ என்ற பழியே மிஞ்சும். தமிழர்களின் நலனில் அக்கறை செலுத்தும் முதல்வர் ஜெயலலிதா, பொருளாதார நிபுணர்களின் ஆலோசனையைப் பெற்று, மாநிலத்தின் வருவாயைப் பெருக்க மாற்று வழிகளைக் கண்டறிய வேண்டும். லாட்டரியை முற்றாக ஒழித்து சாதனை புரிந்ததைப் போல மதுவையும் படிப்படியாகவேனும் ஒழிக்க வேண்டும்.