Published : 19 Mar 2014 08:28 AM
Last Updated : 19 Mar 2014 08:28 AM

இதுவே முன்மாதிரி ஆகட்டும்!

கல்வித் துறையில் பன்னாட்டு ஒத்துழைப்பை ஓர் அரசு விரும்பும் என்றால், என்ன செய்ய வேண்டும்? பன்முகத்தன்மை கொண்டதும் உலகளாவிய பங்கேற்பின் முன்மாதிரியாக விளங்குவதுமான ஒரு செயல்திட்டத்தை நிறைவேற்றுவதில் முழுமூச்சுடன் செயல்பட வேண்டும், அல்லவா? அதை இப்போதுதான் இந்திய அரசு செய்திருக்கிறது.

வெளியுறவுக்கான நிலைக்குழு சமீபத்தில் பரிந்துரைத்த திருத்தங்களை மத்திய அரசு ஏற்றுக்கொண்டிருப்பது, பிஹார் மாநிலத்தின் நாளந்தா பல்கலைக்கழகத்தை ஒரு சர்வதேச நிறுவனமாக உறுதியாக நிறுவும். இந்தத் திருத்தங்களின் விளைவாக, 2010-ல் இயற்றப்பட்ட சட்டத்தின் முன்னுரை ‘அரசு சாராத, லாப நோக்கற்ற, தன்னாட்சி கொண்ட சர்வதேச நிறுவனம்’ என்று மிகத் தெளிவாக நாளந்தாவை வரையறை செய்யும்.

வரலாற்றுச் சிறப்பு மிக்க கல்வி மையத்தின் புதிய அவதாரமான நாளந்தாவை ஒரு மத்தியப் பல்கலைக்கழகமாகக் குறுக்கும் முயற்சிகளுக்கு மேற்கண்ட வரையறை முடிவுகட்டுகிறது. தற்போது அமலுக்கு வந்திருக்கும், 2013-ல் செய்துகொள்ளப்பட்ட பன்னாட்டுப் புரிந்துணர்வு ஒப்பந்தத்தோடு தொடர்புடைய சட்டத்தில் தெளிவான குறிப்பு ஒன்றைச் சேர்க்கவும் நிலைக்குழு பரிந்துரைத்திருக்கிறது. நாளந்தாவின் லட்சியங்களில் ஈடுபாடு கொண்ட எந்த நாடும் அதில் பங்கேற்பு செய்வதற்கு அந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தம் வழிவகைசெய்கிறது. ரஷ்யா, அமெரிக்கா, ஆஸ்திரேலியா, நியூஸிலாந்து ஆகிய நாடுகளும் தங்களின் பங்கேற்புக்கான விருப்பத்தை வெளிப்படுத்தியிருக்கின்றன.

பன்னாட்டுப் பங்கேற்புடன் உருவாகும் நவீன நாளந்தா என்பது முன்பே எதிர்பார்க்கப்பட்டதுதான். பழமையான இந்தப் பல்கலைக்கழத்தின் மறுமலர்ச்சி 2007- ல் கிழக்கு ஆசிய நாடுகளின் உச்சி மாநாட்டில் வித்திடப்பட்டது. ஆசிய சமூகம் என்ற கருத்தாக்கத்துக்கும் ஆசிய நாடுகளுக்கு இடையிலான கல்வித் துறை ஒத்துழைப்புக்கும் நாளந்தா முக்கியமானது என்று அப்போது உணரப்பட்டது.

எல்லைகளைத் தாண்டியும் மாணவர்களையும் ஆசிரியர்களையும் ஈர்த்தது இந்தப் பழமையான கல்வி மையத்தின் தனிச் சிறப்புகளில் ஒன்று. எனவே, எல்லைகளைக் கடந்து செயல்படுவதும் பன்னாட்டுத் தன்மை கொண்டதுமான அறிவுப் பரிவர்த்தனையிலும் கலாச்சாரப் பரிவர்த்தனையிலும் நாளந்தாவின் புது அவதாரத்தின் தளகர்த்தர்கள் ஆர்வம் காட்டவில்லை என்றால், நாளந்தாவின் அடிப்படையே கேலிக்கூத்தாக ஆகியிருந்திருக்கும்.

நாளந்தா பல்கலைக்கழகத்தின் அதிநவீன முறையிலான மறு உருவாக்கம், பின்தங்கிய நிலையில் காணப்படும் பிஹாருக்கும் பெரும் வரப்பிரசாதமாக அமையும். இந்தப் பல்கலைக்கழகத்தின் வேந்தரும் நோபல் விருது பெற்றவருமான அமர்த்திய சென், கல்வித் துறையில் உயர்ந்த தரத்தை நிறுவுவதற்காகத் தொடர்ந்து வலுவாகக் குரல் கொடுத்துவந்திருக்கிறார்.

அதேபோல், பணியமர்த்துவதிலும் மாணவர் சேர்க்கையிலும் பாரபட்சமற்ற முறை மேற்கொள்ளப்பட வேண்டும் என்பதையும் சென் வலியுறுத்திவந்திருக்கிறார். இந்தியாவில் உள்ள அரசுத் துறை நிறுவனங்களும் குறிப்பாகக் கல்வித் துறையும் பின்பற்ற வேண்டிய உயரிய நோக்கங்கள் இவை. ஆசியாவின் எதிர்காலத்துக்கு 21-ம் நூற்றாண்டு மிக முக்கியமானது என்றால், அந்த எதிர்காலத்துக்குச் சிறப்பான அடித்தளமாக நாளந்தா இருக்கக்கூடும். சர்வதேச நல்லுறவுக்கும் மகத்தான முன்மாதிரியாக நாளந்தா விளங்கக்கூடும்.​

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x