Published : 30 Jun 2016 09:34 AM
Last Updated : 30 Jun 2016 09:34 AM

பெரிய இழப்பு இல்லை; ஆனால், கற்க பாடம் இருக்கிறது!

அணு ஆயுத விநியோகஸ்தர்கள் குழுவில் (என்.எஸ்.ஜி.) இணைவ தற்காக மேற்கொண்ட முயற்சிகளில் இந்தியா பின்னடைவைச் சந்தித்திருக்கிறது. அணு ஆயுதப்பரவல் தடை ஒப்பந்தத்தில் (என்.பி.டி.) கையெழுத்திடாத நாடுகளைச் சேர்க்கக் கூடாது என்ற விதியைக் கண்டிப்பாகக் கடைப்பிடித்தாக வேண்டும் என்று சீனாவும் ஏழு வேறு நாடுகளும் பிடிவாதமாக இருந்ததால், சியோலில் நடந்த அணு ஆயுத விநியோகஸ்தர்கள் குழுக் கூட்டத்தில் நம்மையும் இணைத்துக்கொள்ளும் முயற்சி இப்போதைக்குத் தோல்வி அடைந்துவிட்டது.

இந்தியா அணுசக்தியைப் பயன்படுத்தும் நாடாக இருந்தாலும், அணுகுண்டு தயாரிப்புத் தொழில்நுட்பத்தையோ, கருவிகளையோ, மூலப் பொருட்களையோ பிற நாடுகளுக்கு எந்தவிதத்திலும் அளித்ததில்லை என்று இந்தியாவின் பிரதிநிதிகள் வாதிட்டுப் பார்த்தனர். இதே காரணத்துக்காகத்தான் 2008-ல் இந்தியாவுக்கு மட்டும் அக்குழு விதிவிலக்கு அளித்து, அணுசக்தி தயாரிப்புக்கானவற்றைப் பெற உதவி செய்தது. துரதிர்ஷ்டவசமாக இம்முறை இந்த விஷயத்தில் 48 நாடுகளைக் கொண்ட அந்த அமைப்பால் கருத்தொற்றுமை காண முடியவில்லை. 2016-ன் இறுதியில், இக்குழுவில் இந்தியா உறுப்பினராவதற்கான வழியைக் காணும் முயற்சி தொடங்கும் என்று இந்தக் கூட்டத்துக்குப் பிறகு, அமெரிக்க வெளியுறவுத் துறை அதிகாரி ஒருவர் கூறியிருப்பது நம்பிக்கை ஊட்டுகிறது. இந்தப் பேச்சைத் தொடர்வதற்காக ஒரு தூதர் நியமிக்கப்பட்டிருப்பதாகவும் அடுத்து வந்த செய்தி தெரிவிக்கிறது. அத்துடன் வரலாற்றைப் பார்க்கும்போதும் இந்தியாவுக்குச் சாதகமான முடிவையே இக்குழு இறுதியில் எடுக்கும் என்று தோன்றுகிறது. என்றாலும், இன்றைய தோல்வி இந்த விவகாரத்தில் தான் எடுத்த அரசியல் மற்றும் ராஜீய நடவடிக்கைகள் எப்படிப்பட்டவை என்று இந்தியத் தலைமை சுயபரிசீலனை செய்துகொள்ள ஒரு வாய்ப்பை அளித்திருக்கிறது.

யுரேனியத்தைச் செறிவூட்டுவதற்கும் பதனப்படுத்துவதற்கும் இந்தியாவுக்குள்ளேயே வழிகள் இருக்கும்போது, அதற்குத் தடைவிதிக்கப் பெறுவதை ஏற்றுக்கொள்ளும் நிலைக்கு ஆசைப்படுவானேன்? அணிசாரா நாடுகளின் வரிசையில் பல ஆண்டுகளாக இருந்த இந்தியாவை, அணு வல்லரசுகள் அவ்வளவு எளிதில் சம உறுப்பினராக ஏற்றுக்கொள்ளாது. ராணுவரீதியாக எப்படிச் செயல்படுவது என்ற சுதந்திரம் நமக்கு இருக்கிறது. மின்சாரத் தயாரிப்பில் நமக்கிருக்கும் பிற வாய்ப்புகளுடன் ஒப்பிடும்போது, அணு மின்சாரப் பங்களிப்பு சிறிதுதான். இதற்காக இவ்வளவு மெனக்கெட்டு பிற நாடுகளைக் கெஞ்சி ஒரு குழுவில் உறுப்பினராக இடம்பிடிப்பது அவசியமே இல்லை. என்றபோதும் இந்திய அரசு இதற்காகப் பகீரதப் பிரயத்தனங்களை மேற்கொண்டது. இந்த முயற்சிகளின் பின்னணியில் அமெரிக்கா உள்ளிட்ட ஏனைய நாடுகளின் ஆதரவுக்காக நம்முடைய வெளியுறவுக் கொள்கைகளில் நாம் எப்படியெல்லாம் அசைந்துகொடுக்க வேண்டியிருந்தது என்பதும், நாம் என்னென்ன விலை கொடுக்க வேண்டியிருந்தது என்பதும் இந்தத் தருணத்தில் நம் அரசு எண்ணிப் பார்க்க வேண்டியதாகும். இது தேவையற்றது.

தீவிரமான எதிர்ப்பைச் சந்திக்கும் ஒரு விவகாரத்தில், எந்த அளவுக்கு நம்முடைய ராஜதந்திரிகளால் அரசியல், ராஜதந்திர நடவடிக்கைகளை ஒருங்கிணைக்க முடிகிறது என்பதை அரசு உணர்ந்துகொள்வதற்கான வாய்ப்பாகவும் இந்தச் சந்தர்ப்பம் அமைந்தது. தன்னுடைய லட்சியத்தை எட்ட மாற்று வழிகள் உண்டா என்று ஆராயவும் இது வித்திட்டது. படிப்பினைகளிலிருந்து பாடம் கற்பது நல்ல அரசுக்கான இலக்கணம்!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x