முள்ளை முள்ளால் எடுக்கும் கலை

முள்ளை முள்ளால் எடுக்கும் கலை
Updated on
1 min read

புகைக்கு எதிரான போராட்டத்தில் அமெரிக்கா முன்னகர்கிறது. உலகம் முழுவதுமே புகைப்பிடிப்பவர்களின் எண்ணிக்கையை வலுவாக உயர்த்தியதில் சிகரெட் தயாரிப்பு நிறுவனங்களின் விளம்பரங்கள் முக்கியப் பங்கு வகிக்கின்றன. இன்றைக்கு உலகம் முழுவதும் ஒவ்வோர் ஆண்டும் 60 லட்சம் உயிர்கள் புகைக்குப் பலி கொள்வதில், புகைப்பது தொடர்பான சமூக மனநிலை முக்கியக் காரணம் என்றால், அந்தச் சமூக மனநிலை மாற்றிக் கட்டமைக்கப்பட்டதில், அமைத்ததில் விளம்பரங்களுக்கு முக்கியப் பங்கு உண்டு. புகையிலையின் நெடி நறுமணமாகவும், புகைத்த பின் ஏற்படும் வெற்றுணர்வு புத்துணர்வாகவும் இப்படித்தான் உருமாறின.

சுமார் 50 ஆண்டுகளுக்கு முன்னதாகவே அமெரிக்க சுகாதாரத் துறை சிகரெட் விளம்பரங்களின் அபாயத்தைச் சுட்டிக்காட்டியது. ஆனால், கோடிகளில் புரளும் 'சிகரெட் லாபி' பல ஆண்டுகளுக்கு சுகாதாரத் துறையை முடக்கிவைத்ததன் விளைவாக, 1998-ல்தான் அரசால் புகைக்கு எதிராக ஓரளவுக்காவது செயல்பட ஆரம்பிக்க முடிந்தது. சிகரெட் பிடிக்குமாறு தூண்டும் விளம்பரங்களை வெளியிடக் கூடாது, சிகரெட் தொடர்பான எந்த விளம்பரத்திலும் சிகரெட் பிடிப்பது உடல் நலத்துக்குக் கேடு என்ற எச்சரிக்கை வாசகம் இடம்பெற வேண்டும், சிகரெட் பெட்டிகள் மீதும் சிகரெட் பிடிப்பதால் வரக்கூடிய புற்றுநோய் குறித்த எச்சரிக்கைப் படங்கள் அச்சிடப்பட வேண்டும் என்றெல்லாம் பின்னாளில் கொண்டுவரப்பட்ட விதிகள்; அமெரிக்காவின் 46 மாகாணங்களிலும் அடுத்த 25 ஆண்டுகளுக்கு, சிகரெட் பிடிப்பதால் ஏற்பட்ட நோய்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க 20,600 கோடி டாலர்களை சிகரெட் நிறுவனங்கள் தர வேண்டும் என்ற நிபந்தனை, இவை யாவும் இதன் தொடர்ச்சியே. அப்போதும்கூடப் பணம் தருவதாக ஒப்புக்கொண்ட அமெரிக்க நிறுவனங்கள், சிகரெட் அட்டையின் மீது எச்சரிக்கை வாசகங்களையும் படங்களையும் வெளியிட பிற்பாடு மறுத்துவிட்டன. பேச்சு சுதந்திரத்துக்கு எதிரான கட்டுப்பாடு இது என்று வாதிட்டன.

இவை எல்லாவற்றையும் மீறியும் அமெரிக்காவில் புகைப்போர் எண்ணிக்கை வெகுவாகக் குறைந்திருக்கிறது. 1965-ல் மக்களில் 42% பேர் புகைத்தனர்; 2012-ல் இது 18% ஆகக் குறைந்திருக்கிறது. இதற்கான முக்கியமான காரணங்களில் ஒன்றாக அமெரிக்கர்கள் அமெரிக்க அரசின் சிகரெட் எதிர்ப்புப் பிரச்சாரங்களைக் கூறுகின்றனர். இது முள்ளை முள்ளால் எடுக்கும் கதைதான்.

அமெரிக்காவில் ஒவ்வொரு நாளும் மூவாயிரம் குழந்தைகள், சிறார்கள் புகைக்கு அடிமையாவதாகவும் இதற்கு முக்கியக் காரணம் சிகரெட் நிறுவனங்களின் விளம்பரங்கள் என்றும் ஓர் ஆய்வு தெரிவிக்கிறது. இந்தியாவில் இப்படியெல்லாம் எவ்வளவு பேர் பாதிக்கப்படுகிறார்கள் என்கிற ஆய்வு விவரங்கள் நம்மிடம் இல்லை என்றாலும், நிச்சயம் பாதிப்பு இன்னும் வலுவாக இருக்கும் என்பது உறுதி. ஒருபுறம் சிகரெட் விற்பனைக்கு எதிராகக் கடும் நடவடிக்கைகளை எடுப்பதாக அரசாங்கங்கள் பாவ்லா காட்டினாலும் இன்னொருபுறம் சிகரெட் விற்பனை மூலம் கிடைக்கும் வரியை வாரி அணைக்கவே செய்கின்றன. அந்த வரியில் ஒரு பகுதியை சிகரெட் எதிர்ப்புப் பிரச்சாரங்களுக்கு ஏன் செலவிடக் கூடாது? குழந்தைகளிடமிருந்தும் பள்ளிகளிடமிருந்தும் ஏன் அதைத் தொடங்கக் கூடாது?​

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in