

அரசின் நலவாழ்வு நடவடிக்கைகளுக்கான மானியங்களைப் பயனாளிகளுக்கே நேரடியாக வழங்குவதற்கு இப்போது வழி ஏற்பட்டுவிட்டது. எனவே, இடைத் தரகர்கள் இதில் பெரும்பகுதியைத் தங்களுக்கு எடுத்துக்கொண்டு பயனாளிகளுக்குச் சிறு துளி மட்டும் போய்ச் சேருவதைத் தடுப்பது சாத்தியமாகியிருக்கிறது. பல்வேறு துறைகள் மூலம் விவசாயிகள், ஏழைகள் என்று பலதரப்பட்டவர்களுக்கு மத்திய அரசு வழங்கும் மானியங்களின் மொத்த மதிப்பு சுமார் ரூ.3.77 லட்சம் கோடி. அரசு அதிகாரிகள், ஆட்சியாளர்கள், ஒப்பந்ததாரர்களின் முறையற்ற கூட்டணி காரணமாக இந்த மானியத்தில் 50% அதாவது ரூ.1.80 லட்சம் கோடி வழியிலேயே மடைமாற்றப்படுகிறது.
ராஜீவ் காந்தி பிரதமராகப் பதவி வகித்தபோது, “அரசு செலவழிக்கும் ஒவ்வொரு ரூபாயிலும் 17 பைசா மட்டுமே பயனாளிகளுக்குக் கிடைக்கிறது, எஞ்சியவை வழியிலேயே கையாடல்களில் கரைந்துவிடுகிறது” என்று மனம் திறந்து பேசினார். இதைத் தடுக்கவே முடியாதா என்ற ஏக்கம் ஏற்பட்டது. இந்தப் பிரச்சினைக்கு முடிவுகட்டவே காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு ‘ஆதார்’ என்ற அடிப்படைத் தகவல்களுடன் கூடிய தேசிய அடையாள எண் வழங்கும் திட்டத்தை அறிமுகப்படுத்தியது. இப்போது நாட்டுமக்களில் சுமார் 95% பேர் ஆதார் அட்டை வரம்புக்குள் வந்துவிட்டனர். பாஜக கூட்டணி அரசு ‘ஜன்-தன்’ என்ற திட்டம் மூலம் அனைவரும் வங்கிக் கணக்கைத் தொடங்க உதவியது. இப்போது ஜன்-தன் வங்கிக் கணக்கு எண், ஆதார் எண், செல்பேசி எண் ஆகிய மூன்றையும் இணைத்து ‘ஜாம்’ என்ற கூட்டு மூலம் பயனாளிகளுக்கு நேரடியாக அரசின் பணப்பயனை வழங்கத் தொடங்கியுள்ளனர்.
ஆதார் அட்டை எண்ணைக் குடும்ப அட்டையுடன் இணைக்கும் திட்டம் அமலுக்கு வந்த பிறகு, இப்போதைக்கு 1.6 கோடி போலி குடும்ப அட்டைகள் ஒழிக்கப்பட்டுள்ளன. இதனால் போலியான 3.5 கோடிப் பயனாளிகள் நீக்கப்பட்டுவிட்டனர். சமையல் எரிவாயு பயனாளர்களுக்கு ஆதார் எண், வங்கிக் கணக்கு எண்ணை இணைக்கும் திட்டத்தை அமல்படுத்திய பிறகு 2015, 2016-ல் சுமார் ரூ.21,000 கோடி மானியத்தை அரசால் மிச்சப்படுத்த முடிந்தது.
டெல்லி, புதுச்சேரி யூனியன் பிரதேசங்களிலும் ஆந்திரப் பிரதேசம், தெலங்கானா மாநிலங்களிலும் குடும்ப அட்டைகளுடன் ஆதார் எண்ணை இணைப்பது கட்டாயமாக்கப்பட்ட பிறகு ரூ.10,000 கோடி மானியச் செலவு குறைந்துள்ளது. மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்திலும் இதே நடை முறையைக் கையாண்டதால் சுமார் ரூ.3,000 கோடி செலவு மிச்சப்படுத்தப்பட்டது. யூரியா உரத்தைப் பயன்படுத்தும் விவசாயிகளுக்காக மானியத்தை யூரியா உற்பத்தி செய்யும் ஆலைகளுக்கு வழங்கும் திட்டம் இப்போதும் நடைமுறையில் இருக்கிறது. யூரியாவை வேறு பயன்பாட்டுக்குத் திருப்பிவிடுவது வழக்கமாக இருந்ததால், அத்துடன் வேம்பைக் கலப்பதை பாஜக கூட்டணி அரசு கட்டாயமாக்கியது. இதையடுத்து, விவசாயத் தேவைக்கான யூரியா பயன்பாட்டுக்கு மட்டும் மானியம் பயன்படுகிறது. இதிலும் சில சீர்திருத்தங்களை அடுத்த கட்டத்தில் மேற்கொள்ள அரசு சிந்தித்துவருகிறது.
ஏழைகளின் வீடுகளில் பட்டினி ஏற்படாமல் தடுக்க உணவு தானிய மானியம் அவசியம். சவால் என்னவென்றால், உண்மையான பயனாளிகளை அது முழுமையாகப் போய்ச் சேர வேண்டும் என்பதே. பொது விநியோக முறையை மேலும் சீரமைத்து, வெளிப்படையான நிர்வாகத்தைக் கொண்டுவரும்போது விரயங்களும் தவிர்க்கப்படும்!