Published : 06 Feb 2014 09:11 AM
Last Updated : 06 Feb 2014 09:11 AM

நியாயமற்ற தாமதம்

கேரளக் கடற்கரையோரம் 2012 பிப்ரவரியில் இரு இந்திய மீனவர்கள் சுட்டுக்கொல்லப்பட்ட விவகாரத்தில் இத்தாலியக் கடற்படை வீரர்கள்மீது தொடுத்த வழக்கை மேற்கொண்டு நடத்தாமல் தாமதப்படுத்திக்கொண்டேவருவது ராஜீய வட்டாரங்களில் இந்தியாவுக்குப் பெருத்த தர்மசங்கடத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

இந்த வழக்கில் சுமுகமான தீர்வை மத்திய அரசு எட்டும் என்ற நம்பிக்கையில்தான், உச்ச நீதிமன்றம் இந்த வழக்கைத் தள்ளிவைத்துக்கொண்டேவந்தது. அப்படியும் தீர்வு காணப்படாததால், இந்த முறை ஒரு வாரத்துக்குள் முடிவெடுக்குமாறு கெடு விதித்திருக்கிறது.

இந்தத் தாமதத்துக்குக் காரணமே, புதிதாக மத்திய அரசு ஏற்படுத்தியுள்ள தேசியப் புலனாய்வு முகமை மேற்கொண்டுள்ள அணுகுமுறைதான். கடல் கொள்ளைக்கு எதிரான சட்டம், துணைக் கண்டத்தின் கடல்பரப்புக் கப்பல் போக்குவரத்து - நிலையான மேடைகளின் பாதுகாப்பு தொடர்பான 2002-ம் வருஷத்திய சட்டம் ஆகியவற்றின் அடிப்படையில், இத்தாலியக் கடற்படை வீரர்கள் மீது வழக்கு நடத்த தேசியப் புலனாய்வு முகமை விரும்புகிறது.

இச்சட்டப்படி வழக்கு நடத்தினால், இரண்டு இத்தாலிய வீரர்களுக்கும் அதிகபட்சம் மரண தண்டனைகூட விதிக்கப்படலாம். மரண தண்டனையை ஒழிக்க வேண்டும் என்பதில் ஐரோப்பிய நாடுகள் தீவிரமாக இருக்கும் இந்த வேளையில், இத்தாலியக் கடற்படை வீரர்கள் மீது இப்படியொரு வழக்குப் பதிவுசெய்ய அந்த நாடு கடுமையாக ஆட்சேபணை தெரிவிப்பதில் வியப்பு ஏதும் இல்லை.

இந்த வழக்கைப் பதிவுசெய்து, சட்டப்படி நடவடிக்கை எடுக்க உரிமை பெற்றுள்ள இந்திய அரசு இதில் முடிவெடுக்க முடியாமல் வழக்கை இழுத்துக்கொண்டேபோவதால், இந்தியாவின் கௌரவம்தான் சர்வதேச வட்டாரங்களில் குலையும். இந்த வழக்கில், இந்திய அரசு முரண்பட்ட வகைகளில் வழக்கை நடத்திவருவதாக இத்தாலி அதிபர் குற்றம்சாட்டியிருக்கிறார். இந்தியா இந்த வழக்கை இதே போக்கில் நடத்தினால், இந்தியாவுடனான வர்த்தக உறவுகள் பாதிப்படையும் என்று ஐரோப்பிய ஒன்றியமும் எச்சரித்திருக்கிறது.

இந்தச் சம்பவத்தில் வழக்கு தொடுக்கும் அதிகாரம் மத்திய அரசுக்குத்தான் இருக்கிறது, கேரள அரசுக்கு அல்ல என்பதை உச்ச நீதிமன்றம், மற்றொரு வழக்கில் தெளிவாகக் குறிப்பிட்ட பிறகும்கூட, கேரள அரசைக் கொண்டு வழக்கைத் தொடருவது சிக்கலையே அளித்திருக்கிறது.

இந்திய மீன்பிடித் தொழிலாளர்களைக் கடல் கொள்ளையர்களாகக் கருதி சுட்டுக்கொன்றதாக இத்தாலியக் கப்பல் கேப்டன் விளக்கம் அளித்திருக்கையில், இத்தாலியக் கடற்படைக்கு எதிராகவே எப்படிக் கடல் கொள்ளைத் தடுப்புச் சட்டத்தைப் பயன்படுத்த முடியும் என்று சட்ட நிபுணர்கள் கேள்வி கேட்கின்றனர். அத்துடன் பயங்கரவாதத் தடைச் சட்டப்படியும் அவர்கள் மீது வழக்குப் பதிவுசெய்யப்பட்டிருக்கிறது.

பயங்கரவாதச் செயல் என்று பட்டியலிடவோ ஆதாரம் காட்டவோ இத்தாலியக் கடற்படை வீரர்களுக்கு எதிராக எதுவும் இல்லாத நிலையில், எந்த அடிப்படையில் இப்படியெல்லாம் வழக்குப் பதிவுசெய்யப்பட்டிருக்கிறது என்ற கேள்வியும் எழுகிறது.

ராஜீயரீதியாகவும் பலனில்லாமல், சட்டரீதியாகவும் வலுவில்லாமல் ஒரு வழக்கை நடத்துவதை விட்டுவிட்டு, பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணமும் சட்டரீதியான நியாயமும் கிடைக்கும் வகையில் இந்த வழக்கை விரைவாகவும் நேர்மையாகவும் நடத்த அரசு முனைய வேண்டும்!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x