

வேலைவாய்ப்புப் போக்குகள் தொடர்பாகக் குறிப்பிட்ட கால இடைவெளியில் தரவுகளைத் திரட்ட களப்பணியைத் தொடங்கியிருக்கிறது மத்திய அரசு. நகர்ப்புறங்களில் மூன்று மாதங்களுக்கு ஒரு முறையும், ஒட்டுமொத்தமாக ஆண்டுக்கு ஒரு முறையும் வேலைவாய்ப்பு பற்றிய புள்ளிவிவரங்கள் சேகரிக்கப்படும். நாடு முழுக்க 80%-க்கும் மேற்பட்டவர்கள் முறைசாராத துறைகளில்தான் வேலை பெறுகின்றனர். முறைசாராத் துறையில் உள்ள வேலைவாய்ப்புத் தகவல்கள்கூட இனி முழுதாகத் திரட்டப்படும் என்று மத்திய புள்ளிவிவரங்கள், திட்ட அமலாக்கத்துறை அமைச்சர் டி.வி.சதானந்த கவுடா தெரிவித்திருப்பது வரவேற்கத்தக்கது.
உலகிலேயே இளைஞர்கள் அதிக எண்ணிக்கையில் உள்ள இந்தியாவில், மோடி ஆட்சியின் முதல் மூன்று ஆண்டுகளில் வேலைவாய்ப்புகளை ஏற்படுத்துவதில் முன்னேற்றம் இல்லை என்பது தொழில் துறையினர் உட்பட அனைவருக்குமே கவலைகளை ஏற்படுத்தியிருக்கிறது. வேலைவாய்ப்புகளை உருவாக்குவதற்கான கொள்கை களைத் தீர்மானிப்பதற்கு ஏற்ப அரசிடம் தரவுகள் இல்லை. தொழிலாளர் துறையிடம் உள்ள தரவுகள், குறிப்பிட்ட சில துறைகளைப் பற்றியவை மட்டுமே. அவையும்கூட எல்லா மாநிலங்களிலும் பெறப்பட்ட தகவல்கள் அல்ல.
இந்தியாவின் பரப்பளவு, முறைசாராத் துறைகளைக் கொண்டுள்ள தன்மை ஆகியவற்றைப் பார்க்கும்போது, இப்போதைய நிலையை ‘வேலைவாய்ப்பற்ற வளர்ச்சி’ என்றும், ‘வளர்ச்சியற்ற வேலைகள்’ என்றும் கூறலாம் என்கிறார் நிதி ஆயோக் உறுப்பினர் பிவேக் தேவ்ராய்.
ஓராண்டில் எத்தனை கார்கள் விற்பனையாயின என்பது போன்ற தரவுகளைக் கொண்டு, வேலைவாய்ப்புகளை ஊகிக்கலாமா என்றும் பணிக் குழு பரிசீலித்துவருகிறது. வேலைவாய்ப்புகள் குறித்துத் தரவுகளைத் திரட்டும் பணி ஏப்ரல் மாதத்திலேயே தொடங்கிவிட்டது. பணிக் குழு அந்தத் தரவுகளை எப்படி ஒன்று சேர்க்கும், அதற்கு எப்படி விளக்கம் தரும் என்றும் பார்க்க வேண்டும். அதன் அடிப்படையில்தான் புதிய தொழிலாளர் கணக்கெடுப்பு இனி வடிவமைக்கப்படும். முதலில் எடுக்கப்பட்ட வேலைவாய்ப்புக் கணக்கெடுப்பு முடிவுகள் 2018 டிசம்பர் மாதத்தில் வெளியாகும் என்று அரசு வட்டாரங்கள் கூறுகின்றன. தேசிய மாதிரிக் கணக்கெடுப்பு (என்எஸ்எஸ்) நிறுவனம் ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை எடுக்கும் வேலைவாய்ப்பு பற்றிய கணக்கெடுப்பு 2011- 12-க்குப் பிறகு மேற்கொள்ளப்படவில்லை.
உலக அளவில் ஏற்பட்ட நிதி நெருக்கடியால் கடுமையான பொருளாதாரத் தேக்கநிலை ஏற்பட்டதால், காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு 2009-10-ல் ஒரு கணக்கெடுப்பை மேற்கொண்டது இங்கு நினைவுகூரத்தக்கது. வேலைப் பிரச்சினை தேசத்தின் கவலையாக மாறிவருகிறது. மத்திய அரசின் இந்தத் திடீர் ஞானோதயத்துக்கு 2019 மக்களவைத் தேர்தல் ஒரு காரணமாக இருக்கலாம். எனினும், இந்த முன்னெடுப்பால் நன்மைகள் விளைந்தால் வரவேற்கலாம்!